Last Updated : 02 Mar, 2015 12:34 PM

 

Published : 02 Mar 2015 12:34 PM
Last Updated : 02 Mar 2015 12:34 PM

நிறுவனங்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கை சரியானதே.. - நிதியமைச்சர் அருண் ஜேட்லி

நிறுவனங்களுக்கு அளிக்க உள்ள வரி குறைப்பு நடவடிக்கை நியாயமானதே என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். டெல்லியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனது நடவடிக்கையில் உள்ள நியாயத்தை தெளிவுபடுத்தினார். நிறுவனங்கள் எவ்வித சிரமமும் இன்றி தொழில் தொடங்குவதற்கு உரிய நேரம் இப்போது ஏற்பட்டுள்ளது என்றார்.

நிறுவனங்கள் மீதான வரி (கார்ப்பரேட்) குறைப்பு நடவடிக்கையின் பின்னணி காரணம் என்ன?

நமது நாட்டில் கார்ப்பரேட் வரி அதிகமாக உள்ளது. நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து வெளியேறுவதற்கு இதுதான் முக்கியக் காரணமாகும். நிறுவன வரி 30 சதவீதமாக இருந்தாலும் பல்வேறு விலக்குகளுக்குப் பிறகு அது 23 சதவீதம்தான் அரசுக்கு கிடைக்கிறது. இத்தகைய சூழலில் ஒரு ஸ்திரமான நடவடிக்கையை ஏற்படுத்த வேண்டும். தொழில் தொடங்குவதில் ஒரு ஸ்திரமற்ற நிலை உருவாக வழியேற்படக்கூடாது. எனவேதான் வரியைக் குறைப்பதென்று முடிவு செய்யப்பட்டது.

அதேசமயம் அளிக்கப்படும் சலுகைகளை அடுத்த நிதி ஆண்டிலிருந்து படிப்படியாக விலக்கிக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விலக்குகள் என்பது தனி நபருக்கு மட்டும் என்பதில் தெளிவாக உள்ளோம். இத்தகைய நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

நிதிப் பற்றாக்குறை அளவை 30 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 2015-16-ம் நிதி ஆண்டில் 3.9 சதவீதமாக்கியுள்ளீர்கள். இத்தகைய சூழலில் கட்டமைப்பு உள்ளிட்ட பொது முதலீட்டுக்கு எங்கிருந்து நிதி திரட்ட முடியும்?

மூலதன செலவுக்கு ரூ. 70 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளோம். நமது நிதிப் பற்றாக்குறை 3.6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டால் இந்த தொகை ரூ. 40 ஆயிரம் கோடி முதல் ரூ. 45 ஆயிரம் கோடி போதும். அச்சூழலில் கூடுதலாக ரூ. 30 ஆயிரம் கோடி வரையில் கட்டமைப்புக்கு செலவிட கிடைக்கும்.

உங்கள் பார்வையில் இந்த பட்ஜெட்டில் முக்கியமான விஷயங்கள் என்ன என்று நினைக்கிறீர்கள்

பல உள்ளன. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால் எதிர்காலத்தில் மாநில அரசுகள் நிதி தட்டுப்பாட்டில் திணற வேண்டியிருக்காது. இது தேசிய அளவிலான செலவுகளைக் குறைத்துள்ளது. இருப்பினும் வரி வருமானம் 15 சதவீதம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக செலவுகள் அதிகரிக்கும். இரண்டாவதாக இந்த பட்ஜெட்டில் ஏழைகளின் மேம்பாட்டுக்காக பல சமூக பாதுகாப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல நடுத்தர மக்களுக்காகவும் பல சலுகைகள் இதில் உள்ளன.

ஆனாலும் நடுத்தர மக்கள் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறதே…

நடுத்தர மக்களைப் பொறுத்தமட்டில் போக்குவரத்து படி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மருத்துவக் காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் சலுகையும் பெற முடியும். முன்பை விட அவர்களுக்கு இப்போது அதிக சலுகைகள் கிடைத்துள்ளன.

தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்கு எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

இந்த அரசின் நோக்கமே எவ்விதமான அனுமதியும் பெறாமல் தொழில் தொடங்க முடியும் என்ற நிலை உருவாக வேண்டும். ஜப்பான் முதலீட்டாளர் என்னிடம் பேசும்போது உங்கள் அரசில் அதிகார வர்கத்தின் கெடுபிடிகள் அதிகம் உள்ளன. இதனால் தொழில் தொடங்குவது தாமதமாகிறது என்று குறிப்பிட்டார். பல நாடுகளில் இது தொடர்பாக வழிகாட்டு நெறிகள் உள்ளன. அதாவது நகராட்சி, குடிநீர், மின்சாரம், தொழிலாளர் உள்ளிட்டவையாகும்.அவர்கள் வகுத்துள்ள விதிகளை நீங்கள் பின்பற்றாவிட்டால் அந்த துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலை வாய்ப்பை உருவாக்கும் நிலையில் முதலில் தொழில் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை ஆராய வேண்டும். இதற்கு பொதுப் படியான வழிகாட்டு நெறிகள் உருவாக்கப்பட வேண்டும். பல துறைகளின் அனுமதி பெறுவதை ஒருமுகப்படுத்தி அனுமதி பெறுவதற்கான வழியை வகுத்து அதற்கான சட்ட வரைவை பரிந்துரைக்குமாறு ஒரு நிபுணர் குழுவை அமைத்து உருவாக்கலாம் என்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x