பொது வரி தவிர்ப்பு விதிகள் ஒத்திவைப்பு: உற்சாகத்தில் அந்நிய முதலீட்டாளர்கள்

பொது வரி தவிர்ப்பு விதிகள் ஒத்திவைப்பு: உற்சாகத்தில் அந்நிய முதலீட்டாளர்கள்
Updated on
1 min read

பொது வரி தவிர்ப்பு விதிகள் (ஜி.ஏ.ஏ.ஆர்) இரு வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அந்நிய முதலீட்டாளர்களை பெரு மளவுக்கு நம்பி இருக்கும் இந்திய பங்குச்சந்தை மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.

ஜி.ஏ.ஏ.ஆர். சட்டத்தில் நிச்சய மற்றத் தன்மை இருக்கிறது, முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்க அந்த சட்டத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருப்பதால் இரு வருடங்களுக்கு அந்த சட்டத்தை ஒத்தி வைப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தன்னுடைய பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

வரிச் சலுகை கொடுக்கும் நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு இந்த சட்டத்தின் மூலம் வரி விதிக்க முடியும். இதில் மாற்றங்கள் செய்வதற்காக சில இரு வருடங்கள் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

2014-ம் ஆண்டு இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துக்கு அந்நிய முதலீட்டாளர்களும் ஒரு காரணமாகும். ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை அவர்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்தார்கள்.

ஆரம்பத்தில் 2012-ம் ஆண்டு இந்த சட்டம் அறிவிக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் பிறகு 2015-ம் ஆண்டு ஒத்திவைக்கப்பட்டது. இப்போது 2017-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு ஒத்தி வைக்கபட்டுள்ளது.

அதே போல அந்நிய நிறுவன முதலீட்டாளர்களுக்கு குறைந்தபட்ச மாற்று வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அருண் ஜேட்லி அறிவித்தார். இந்த இரண்டு அறிவிப்புகள் காரணமாக அந்நிய முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். அதனால் அந்நிய முதலீடு இந்தியாவுக்கு தொடர்ந்து வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு அறிவிப்பினை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் பெரிதும் வரவேற்றிருக்கிறார்கள்.

இதன் காரணமாக வரும் வாரத்தில் இந்திய பங்குச்சந்தையில் ஏற்றம் இருக்கும் என்றே பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in