

ஹெச்டிஎஃப்சி வங்கி ரூ.10,000 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. பங்குச் சந்தை மூலம் இந்த நிதி திரட்டப்படும் என்றும், குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிகிறது.
வங்கியின் மூலதனத்தை அதிகரித்துக் கொள்ள இந்த நிதி திரட்டப்படுகிறது. பங்கு வெளியீடு நேரம் மற்றும் எந்த வகையில் இந்த நிதி திரட்டுவது என்பதைக் குறித்து இயக்குநர் குழு விரைவில் முடிவு செய்யும் எனத் தெரிகிறது.
இயக்குநர் குழு அல்லது இதற்கான சிறப்பு கமிட்டி அடுத்த சில நாட்களில் இந்த முடிவுகளை மேற்கொள்ளும் என அந்த வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் குழு முடிவைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டு அமைப் புகளின் அனுமதி மற்றும் இதர அனுமதிகள் வாங்கப்படும் என்றும் சந்தையில் இதற்கான வரவேற்பு பலமாக இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்நிய முதலீட்டாளர்கள் வழி தனது மூலதனத்தை 10 ஆயிரம் கோடியாக உயர்த்திக் கொள்ள நிறுவனங்கள் விவகாரத்துறை கடந்த மாதம் ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு அனுமதி வழங்கியது. அந்நிய முதலீட்டின் அதிகபட்ச வரம்பு 74 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என்கிற விதிகளின்படி இந்த அனுமதியை நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம் கூறியிருந்தது.
ஹெச்டிஎஃப்சி வங்கியில் மொத்த அந்நிய முதலீட்டின் அளவு ஜூன் 2014 வரை 73.39 சதவீதமாக இருந்தது. செப்டம்பர் இறுதியில் இது 73.2 சதவீதமாக இருந்தது.
வெளிநாட்டு இந்தியர்கள், அந்நிய நிகர முதலீட்டாளர்கள், வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்களிடமிருந்து இந்த நிதியை திரட்ட இலக்கு வைக்கப் பட்டுள்ளது.