Published : 14 Feb 2015 12:43 PM
Last Updated : 14 Feb 2015 12:43 PM

ஜூடோ உத்தி; படா வெற்றி

பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழை இன்னும் ஏழையாகிறான் என்பது சினிமா வசனம். ஆனால் பொருளாதார புள்ளி விவரங்கள் இதை பொய் என்று தெளிவாக நிரூபித்தும் சிலர் இன்னும் புலம்பி வருகிறார்கள். சரி விடுங்கள்.

மார்க்கெட்டிங் உலகில் பெரிய கம்பெனிகள் பெரியதாகிக்கொண்டே போகுமா, சின்ன கம்பெனிகள் சின்னதாகிக்கொண்டே போகுமா? தேவை இல்லை. திறமையாய் செயல்பட்டால் சின்ன ப்ராண்ட் பெரிய ப்ராண்டை துரத்திப் பிடிக்கலாம். சின்ன கம்பெனி பெரிய கம்பெனியை புரட்டி எடுக்கலாம். சின்னக் கடை பெரிய கடையை விரட்டி அடிக்கலாம். இதற்குத் தேவை ‘ஜூடோ உத்தி’.

ஜூடோ என்பதற்காக வெள்ளை வேஷ்டியை உடம்பில் தத்தகா பிதக்கா வென்று சுற்றி பாவாடை நாடாவை இடுப்பில் கட்டி ‘ஊஊஈஈஈயாயா’ என்று காட்டுக் கத்தல் கத்தி, முகத்தை அஷ்டகோணலாக்கி கையும் காலும் சிக்கிக்கொள்ளும் லெவலுக்கு போக வேண்டிய அவசியமில்லை. ஜூடோவின் ஆதார அம்சங்களை அறிந்து அதை பிசினஸில் உபயோகிக்கும் திறமை போதும் என்கிறார்கள் ‘டேவிட் யோஃபி’ மற்றும் ‘மேரி க்வாக்’. ‘பிசினஸ் ஸ்ட்ரேடஜி’ என்ற ஜர்னலில் ‘ஜூடோ உத்தி’ என்ற கட்டுரையில் ஜூடோ கலையை பயன்படுத்தி தொழிலில் பெரிய போட்டியாளரைக் கூட போட்டுத் தள்ளும் வித்தையை இவர்கள் விளக்கியிருக்கிறார்கள்.

ஜூடோ என்பது சைஸையோ, பலத்தையோ பிரதானமாய் கொள்ளாமல் துரிதத்தை, வேகத்தை, சாதுர்யத்தை நம்பி சண்டையிடும் முறை. நேருக்கு நேர் மோதல் பலமான எதிராளிக்கே சாதகமாகும் என்பதால் ஜூடோ உத்தி சாதுர்யத்தை மட்டுமே பிரதானமாய் பிரயோகப்படுத்தி அதன் மூலம் எதிராளி தன் முழு பலத்தை பிரயோகிக்க விடாமல் தடுக்கிறது. அதன் மூலம் வெற்றியைத் தருகிறது.

சுரீரென்று சுட்டெரிக்கும் போட்டி உலகில் பளீரென்று அறையும் போட்டியாளர்கள் மத்தியில் பிழைக்க மட்டுமில்லாது தழைக்கவும் ஜூடோ உத்தியை பயன்படுத்தலாம், பயன்படுத்தவேண்டும். பயன்படுத்தி பயனடைந்திருக்கின்றன சிறிய, ஸ்மார்ட் கம்பெனிகள். பெரிய கம்பெனிகளையே விரட்டிப் பிடித்து, புரட்டிப் போட்டு, கழட்டி அடிக்க சின்ன கம்பெனிகள் ஜூடோவின் ஆதாரத் தத்துவங்களை ஆழமாய் அறியவேண்டும். அவை இவை.

அசைவுகள்

ஜூடோ துவங்குவது சரியான அசைவுகளில். தாக்கவும், தற்காத்துக் கொள்ளவும் அசைவுகள் அவசியம். தாக்குதலிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள ஜூடோ வீரர் வேகமாகவும், துரிதமாகவும், அதே வேளையில் திரும்பத் தாக்க தோதான நிலையை அடையவேண்டும். அப்பொழுதுதான் சரியான அசைவுகள் மூலம் ஜூடோ வீரர் எதிராளி தன் முழு பலத்தையும் பிரயோகிக்க முடியாமல் செய்து தடுமாற வைக்க முடியும்.

ஜூடோ வீரர் பலமான நிலையை அடைந்ததோடு நில்லாமல் புதிய தாக்குதலை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். விளையாட்டிலும் வியாபாரத்திலும் முதன்மை நிலை பெற்றதோடு நில்லாமல் அதை தக்க வைத்துக்கொள்ள ஃபாலோ அப் உத்திகள் அவசியம். அசந்து, அசால்ட்டாய், அக்கடாவென்று ஆசுவாசப்படுத்திக்கொண்டால் அகால மரணம் என்ற ஆபத்தில் முடியும்.

சிவப்பழகு தருவதாக ஆயிரம் கோடிக்கு மேல் விற்பனை செய்து சொகுசாய், சிவப்பாய், சிரித்துக்கொண்டிருந்த ’ஃபேர் அண்ட் லவ்லி’யின் பலத்தை நேரடியாகத் தாக்காமல் ‘ஃபேர் அண்ட் ஹேண்ட்சம்’ என்ற ப்ராண்டை அறிமுகப்படுத்தியது ‘இமாமி’. விளம்பரங்களில் ‘ஆண்களே, இன்னுமா உங்கள் தங்கையின் க்ரீமைத் தடவிக் கொண்டிருக்கிறீர்கள், வெட்கமாக இல்லை’ என்று கேட்டது. ஃபேர் அண்ட் லவ்லி என்பதே பெண்களை குறிக்கும் சொல் தானே என்று உணர்ந்த ஆண்களும் ‘சே என்ன அசிங்கம் செய்கிறோம்’ என்று ஃபேர் அண்ட் ஹேண்ட்சமிற்கு மாறினர். பெண்களை குறிவைக்கும் ஃபேர் அண்ட் லவ்லியால் பதிலளிக்க முடியாமல் போனது ஃபேர் அண்ட் ஹேண்ட்சம் பிரயோகித்த ஜூட்டான ஜூடோ அசைவுகளால்!

சமநிலை

அசைவுகள் மூலம் பலமான எதிராளியுடன் நேருக்கு நேர் மோதுவதை தவிர்த்தாலும் கடைசியில் எதிராளியை முகத்துக்கு நேராக போரிட வேண்டியிருக்கும். அப்பொழுது எதிராளியை சாதுர்யமாய் சந்தித்து சமயோஜிதமாய் சமாளிக்கவேண்டும். இதற்கு ஜூடோ வீரருக்குத் தேவை சமநிலை.

ஜூடோ விளையாட்டின் தொடக்கத்திலேயே எதிராளி சமநிலையைக் குலைக்க உங்களை இழுத்தோ, தள்ளவோ முயற்சிப்பார். சாமர்த்தியமான வீரர் பதிலுக்கு நேரெதிர் செயல் செய்யாமல் அம்முயற்சிக்கு ஈடுகொடுத்தால் எதிராளி நிலை குலைவார். எதிராளி இழுக்கும் போது அதற்கு ஈடுகொடுத்து அவரை இழுத்தாலோ, எதிராளி தள்ளும் போது நீங்கள் அவரை இழுத்தாலோ அவரது வேகமே அவருக்கெதிராய் திரும்பி நிலைதவறி நிலைகுலைந்து நிர்மூலமாய் விழுவார்!

பாத்திரம் கழுவும் ப்ராண்டுகள் தங்கள் குறைந்த விலையை சுட்டிக்காட்டி அதன் மூலம் ‘விம்’ பவுடர் விலை அதிகம் என்று சொல்லாமல் சொன்னபோது விம் பதிலுக்கு தன் விலையைக் குறைக்காமல் ‘கொஞ்சம் விம் போட்டாலே போதும், பல பாத்திரங்களை கழுவி பளப்பளப்பாக்கும்’ என்று அவர்கள் இழுத்த இழுப்பிற்கே செல்ல, அதற்கு தகுந்த பதிலளிக்க குறைந்த விலை ப்ராண்டுகள் திண்டாடின. விம் விற்பனை பாத்திரங்களை விடப் பிரகாசமாகப் பளபளக்கத் துவங்கியது!

உந்து சக்தி

ஜூடோ உலகில் சொல்வார்கள். ‘சண்டையில் கீழே விழாதவன் தோற்கவில்லையே தவிர வென்று விட்டதாக அர்த்தமில்லை.’ சரியான அசைவுகள் மற்றும் சமநிலை மூலம் எதிராளியை முந்த முடிந்தாலும் அவரைத் கீழே தள்ளித் தோற்கடித்து வெற்றிப் பெறத் தேவை உந்து சக்தி. எதிராளியை கீழே தள்ளி எழவிடாமல் தடுப்பது தான் வெற்றி. இதற்கு உந்து சக்தியின் உதவி வேண்டும்.

ஜூடோவில் எதிராளியின் உடம்புதான் நாம் பிடித்து, இழுத்து, தள்ள ஏதுவான நெம்புகோல். பிசினஸில் போட்டியாளரின் பலங்களும் அவருடைய பார்ட்னர்களுமே நெம்புகோல். உந்து சக்தி மூலம் போட்டியாளரின் பலத்தை பலவீனமாக்க முடியும். போட்டியாளரின் பார்ட்னர்களே அவரது வேகத்தை குறைத்து உங்கள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் செய்யமுடியும்.

‘யூனிவர்சல்’, ‘பூர்விகா’ போன்ற கடைகளின் பலம் எது? ஊரெங்கும் கடை பரப்பியிருக்கும் வினியோக ப்ரெசன்ஸ். இதையே பலவீனமாக்க ‘ஃப்ளிப்கார்ட்’, ‘அமேஸான்’ போன்ற ஆன்லைன் சைட்டுகள் மிகக் குறைந்த விலையில் செல்ஃபோன் விற்கின்றன. கடைகளில் செல்ஃபோன் தேடி பிடித்த மாடலை குறித்துக் கொண்டு ஆன்லைன் சைட்டுகளில் அதை குறைந்த விலையில் வாங்கும் கில்லாடி வேலையை மக்கள் செய்யத் தொடங்கிவிட்டார்கள். கோடிகளை செலவழித்து பல இடங்களில் பரந்து விரிந்து திறந்த கடைகளைக் கொண்டு இன்று ஆன்லைனின் குறைந்த விலைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவிக்கின்றன கடைகள்.

இம்மூன்றுமே ஜூடோவின் ஆதார தத்துவங்கள். சரியான அசைவுகள் மூலம் மார்க்கெட்டர்கள் முன்னேறி முன்நிலை (Advantage) அடையலாம். பின் சமநிலை மெயின்டெயின் செய்து எதிராளியை எதிர்கொண்டு தாக்குதலை சமாளிக்கலாம். இறுதியில், உந்துசக்தியால் எதிராளியின் பலத்தை பலவீனமாக்கலாம். இதை தெளிவாகத் தெரிந்து, சரியாகப் புரிந்து, அளவாகப் பிரயோகித்தால் சின்ன கம்பெனி கூட பெரிய கம்பெனியை பந்தாடலாம். படுக்கப்போட்டு புரட்டலாம். பள்ளத்தில் தள்ளலாம். பரலோகத்திற்கே பார்சல் பண்ணலாம்!

ஜூடோ தத்துவங்களை பிரதானமாய் வைத்து உத்திகள் அமைப்பது எப்படி என்று தெரிந்துகொண்டால் பிசினஸ் சண்டைகளில் வெற்றி பெறுவது எளிதாகும். இதை இப்பொழுதே பார்க்க வேண்டாமே. நிறைய சண்டை போட்டுவிட்டோம். ஒரு நாளுக்கு இத்தனை சண்டை போதும். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு அடுத்த வாரம் தொடர்வோமே!

satheeshkrishnamurthy@gmail.comSign up to receive our newsletter in your inbox every day!

 
x