Last Updated : 20 Feb, 2015 09:27 AM

 

Published : 20 Feb 2015 09:27 AM
Last Updated : 20 Feb 2015 09:27 AM

என் ஊதியத்தை நான் முடிவு செய்வதில்லை! - சிவகார்த்திகேயன் நேர்காணல்

பிப்ரவரி 17. சிவகார்த்திகேயனின் பிறந்த நாள். ‘‘இதுக்காகவெல்லாம் படப்பிடிப்பைத் தள்ளிப்போடத் தோணுமா என்ன? இன்று ‘ரஜினிமுருகன்’ படப்பிடிப்பில் இருப்பதைப் போல இதே குழுவினருடன் முன்பு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படப்பிடிப்பில் இருந்தேன். படக்குழு நண்பர்களோடு ஆடிப்பாடி மகிழ்வதுதான் எனக்குக் கொண்டாட்டம்” எனச் சிநேகம் பரவச் சிரித்தபடி பேசத் தொடங்கினார் சிவகார்த்திகேயன்.

சமீப காலமாக உங்கள் படங்களை வாங்கி வெளியிட அதிக ஆர்வம் செலுத்துகிறார்களே?

வியாபாரம் என்று வந்தபிறகு நிறையப் பணம் போடுகிறார்கள். அதை ஜெயித்துக்கொடுக்க வேண்டிய பொறுப்பு நம் மீது விழுகிறது. இன்று எல்லாமே ஹீரோவைச் சுற்றித்தான் இருக்கிறது. நல்ல இயக்குநர்கள் சேரும்போது எதிர்பார்ப்பு இன்னும் கூடுகிறது. என் படம் ஓடுகிறது என்பதைத் தாண்டி இவ்வளவு பேர் நம் மீது நம்பிக்கை வைக்கிறார்கள் என்பதுதான் பெரிய விஷயம். ‘என்னை நம்புங்க’என்று யாரிடமும் நான் சொல்ல முடியாது. அப்படி எதுவுமே இல்லாமல் இயல்பாக உருவாகி இருக்கும் இந்த இடத்தை நான் இழக்க முடியாது. அதேநேரம் இந்தப் பொறுப்பு இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்கிற பயத்தையும் எனக்கு ஏற்படுத்திவிட்டது.

பெரிய பட்ஜெட் படங்களே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டீர்களா?

நான் இதுவரைக்கும் நடித்த படங்கள் குறிப்பிட்ட பட்ஜெட் படங்கள்தான். வசூல் ரீதியாக எல்லாப் படங்களுமே வெற்றி பெற்றிருக்கின்றன. இதற்கு மக்கள்தான் காரணம். சிவகார்த்தியேன் படம் நிச்சயம் தவறாக இருக்காது என்று நம்பத்தொடங்கியிருக்கிறார்கள். அடுத்தடுத்து வெளிவரவிருக்கும் ‘காக்கிச்சட்டை’, ‘ரஜினிமுருகன்’ ஆகிய இரண்டு படங்களுக்குமே பெரிய கூட்டணி வேலை பார்க்கிறோமே தவிர அவையும் பெரிய பட்ஜெட் போகவில்லை. இப்போது வரைக்கும் காமெடி மட்டுமே பண்ணிக் கொண்டிருந்தோம். தற்போது இதில் கொஞ்சம் விஷயங்களைச் சேர்த்திருக்கிறோம். இப்படி எல்லாமே படத்தில் இருப்பதால் நல்ல எதிர்பார்ப்பு உண்டாகிறது. அதனால்தான் எல்லோருமே லாபம் சம்பாதிக்க முடிகிறது. இது இன்னும் தொடர்ந்தால் மகிழ்ச்சிதான்.

சம்பள விஷயத்தில் ரொம்பவே கறாராக நடந்துகொள்கிறீர்கள் என்ற பேச்சு அடிபடுகிறதே?

‘காக்கிச்சட்டை’ படத்துக்கு என்ன சம்பளம் என்றே எனக்குத் தெரியவில்லை. இதுவரை தனுஷ் அதைப் பற்றிச் சொல்லவே இல்லை. அவர் எப்போது கொடுக்கிறாரோ அப்போதுதான் எனக்கே அது தெரியும். தற்போது நடித்து வரும் ‘ரஜினிமுருகன்’ படத்துக்கு பிறகே நான் நடிக்கவிருக்கும் படங்களுக்கு என் ஊதியம் என்ன என்பதில் நான் நிச்சயமாக டிமாண்ட் பண்ணும் எண்ணத்துடன் இருக்கிறேன். நானும் செட்டில் ஆகணுமே.

உங்கள் அப்பா ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்ததன் தாக்கத்தில்தான் ‘காக்கிச்சட்டை’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டீர்களா?

ஆமாம். போலீஸ் உடையை அணிந்தபோது அப்பாவின் நினைவுகள் கிளறி என்னை ஆக்கிரமித்துக் கொண்டன. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அப்பாவை போலீஸ் சீருடையில்தான் அதிகம் பார்த்திருக்கிறேன். பணிபுரிந்த வரையிலும் நேர்மையாக இருந்தவர். அவ்வளவு சுலபமாக அவர்மீது யாரும் எந்தக் குறையும் சொல்லிவிட முடியாது. நேர்மையாக இருக்கும் ஒருவரின் செயல்பாடுகளைப் பார்க்க வேண்டும் என்று எல்லோரும் விரும்புவாங்க. அப்பாவோட அந்த நற்குணங்கள்தான் என்னை இந்தப் படத்தில் ஈஸியாக இணைத்துக்கொள்ள வைத்தது.

இந்தப் படத்தின் கதை என்ன?

‘காக்கிச்சட்டை’ படத்தின் கதை என்னோட இமேஜை மீறாத கதையாக இருக்கும். ஒரு போலீஸ் படமாக இருந்தாலும் யதார்த்தமாகப் பண்ணியிருக்கிறோம். காதல், காமெடி, துள்ளலான பாடல் என்று இருக்கும். அதேபோல ஆக்‌ஷன் யதார்த்தமான கண்ணோட்டத்தில் கலந்திருக்கும்.

மீண்டும் ஸ்ரீதிவ்யாவுடன் கூட்டணி என்பதால் காதல் காட்சிகள் கலக்கலாக அமைந்திருக்குமே?

காதல் காட்சிகளில் மட்டும் என்று இல்லாமல் படம் முழுக்க ஸ்ரீ திவ்யா இருக்காங்க. படத்தின் கடைசிக் காட்சி அவங்க மேலதான் முடியும். அவரைத் தவிர்த்துவிட்டுக் கதை நகராது. இந்தப் படத்தில் எங்கள் கூட்டணி உப்புக்குச் சப்பாணி கிடையாது.

ஸ்ரீதிவ்யா, ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ் மூவரில் உங்களுக்குப் பொருத்தமான நாயகி யார்?

தொலைக்காட்சியிலிருந்து இருந்து வந்ததால் எல்லோரிடமும் எளிதில் பழகும் குணம் எனக்கு அமைந்துவிட்டது. ‘அது இது எது’ நிகழ்ச்சி வழங்கும்போதெல்லாம் முன்பின் அறிமுகமில்லாதவர்களோடு கூட இணைந்து சில மணித் துளிகளில் நல்ல நட்பு ஏற்பட்டுவிடும். இவங்க மூவருமே படப்பிடிப்பு தவிர்த்து வெளியில் சொல்லும்போதும் ‘சிவா நல்ல பையன்’ என்றே கூறி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவரை மட்டும் பெஸ்ட் என்று கூறி எதற்கு என் பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டும்.

சமீபத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவைச் சந்தித்தீர்களே?

காரைக்குடியில் ‘ரஜினிமுருகன்’ படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது அவரும் தனது படத்துக்காக அங்கே வந்திருந்தார். அவரைச் சந்திக்கலாமே என்று நான்தான் விரும்பி படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் இடத்துக்குப் போய் பார்த்துவிட்டு வந்தேன். வேறெதுவும் காரணம் இல்லை.

ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் இருந்தே நடிகர் கவுண்டமணி பாணி வசன உச்சரிப்பு இன்னும் உங்களிடம் தொடரவே செய்கிறதே?

நல்ல வரவேற்பு இருப்பதால்தான் அதைத் தொடர்கிறேன். அது வேண்டாமென்றால் தொலைக்காட்சியிலிருந்து வரும் ஒருவனை ஏன் ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள். பயங்கரமாக நடிப்பேன் என்பதற்காக இல்லை. இவனோட டைமிங்சென்ஸ், காமெடி நல்லா இருக்கும் என்பதைத்தான் விரும்புகிறார்கள். அதனால் எப்போதும் இதை விடப்போவதில்லை.

சந்தானத்துடன் கூட்டணி எப்போது?

அவருடன் நடிக்கக் கூடாது என்றில்லை. முதலில் நான் நடிக்கும் படங்கள் எல்லாம் சின்ன பட்ஜெட் படங்களாகத்தான் இருந்தன. அதற்குள் நம்பர் ஒன் காமெடியனைக் கொண்டு வருவது கடினம். இயக்குநர் கதை எழுதும்போதே அதைப் பற்றி யோசிக்க மாட்டார். இன்று எனது படங்களின் வியாபாரம் பெரிதாக ஆகிவிட்டது. இனி அது சாத்தியமாகும். இன்னொரு பக்கம் இப்போது நாங்கள் ‘செட்’டாகி கூட்டணி வைக்கும் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றே வருகிறது. அதனால் அப்படியே நகர்கிறது நானும், சந்தானமும் இணைந்தால் நன்றாகவே இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x