Last Updated : 25 Feb, 2015 10:50 AM

 

Published : 25 Feb 2015 10:50 AM
Last Updated : 25 Feb 2015 10:50 AM

வரி வருவாயில் மாநிலங்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு - நிதிக் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றது

மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு அளிக்கும் அளவை 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தலாம் என்று நிதிக்குழு பரிந்துரை செய்ததை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

14-வது நிதிக்குழு அளித்துள்ள பரிந்துரையினால் மாநில அரசு களுக்கு கிடைக்கும் அளவு 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ. 5.26 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2014-15-ம் நிதி ஆண்டில் மாநில அரசுகளுக்கு கிடைத்த வரி வருவாய் பங்கு அளவு ரூ. 3.48 லட்சம் கோடியாகும்.

மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதன் மூலம் அவை சுயமாக செயல்பட வழியேற்படும். மாநில அரசுகள் அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்த இத்தகைய கூடுதல் நிதி உதவியாக இருக்கும் என்று நிதிக்குழு அறிக்கை தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஒய்.வி.ரெட்டி தலை மையிலான நிதிக்குழு இந்த அறிக்கையை அளித்துள்ளது. இவற்றில் பெரும்பாலான பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொண்டதாக குழுவின் பகுதி நேர உறுப்பினர் அபிஜித் சென் தெரிவித்துள்ளார்.

முதலாம் ஆண்டு வரி வருவாயில் 38 சதவீதத்தை அளிக்கலாம் என்று சென் குறிப்பிட்டுள்ளார். 2015 ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை மாநில அரசுகளின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து கூடுதலாக ரூ. 1.94 கோடியை பற்றாக்குறை ஏற்படும் 11 மாநிலங்களுக்கு அளிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.

நிதிப் பகிர்வு நடவடிக்கை மூலம் மாநில அரசுகள் தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் செயல்படுவ தோடு, மத்திய அரசின் சுமையும் குறையும் என்று அறிக்கை தெரிவிக்கிறது. அனைத்து நிதி தேவைகளும் வரி வருவாய் மூலம் பங்கீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான மாநில அரசுகள், மத்திய அரசு மேற்கொள்ளும் மக்கள் நலத் திட்டங்களை படிப்படியாகக் குறைக்குமாறு வலியுறுத்தியுள்ளன. அதேபோல அத்தகைய திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை குறைக்குமாறும் வலியுறுத்தியதாக நிதிக் கமிஷன் அறிக்கை தெரிவிக்கிறது.

கூட்டாட்சி தத்துவ அடிப் படையில் நிதி ஆயோக் உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழு நிதிக்குழு பரிந்துரையை ஏற்றுள்ளது. அதன்படி வரி வருவாயில் மாநிலங்களுக்கு 42 சதவீதத்தை அளிக்க ஒப்புக் கொள்ளப்பட்டதாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்விதம் அதிக அளவு வரி வருவாய் உயர்த்தப்படுவதால் மாநிலங்களுக்கு கூடுதலாக நிதி கிடைக்கும். இதற்கு முன்பு இந்த அளவுக்கு உயர்த்தப்பட்டதில்லை. நிதிக் குழு வழக்கமாக ஒரு சதவீதம் அல்லது 2 சதவீத அளவுக்குத்தான் வரி வருவாய் பகிர்வை உயர்த்தும். இப்போது 10 சதவீத உயர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2014-15-ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரி வருவாயை விட 2015-16-ம் நிதி ஆண்டில் ஒதுக்கப்படும் அளவு 45 சதவீதம் கூடுதலாக இருக்கும்.

பொதுவாக கிராம பஞ்சாயத்துகள் மற்றும் கிராம ஒன்றியங்களுக்கான ஒதுக்கீட்டை இரண்டு விதமாக அளிக்கலாம் என நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. அதாவது அடிப்படை ஒதுக்கீடு மற்றும் அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையிலான ஒதுக்கீடு என இரண்டு வகையாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டு அடிப்படையில் மார்ச் 31, 2020-ம் ஆண்டு வரை பஞ்சாயத்து அமைப்புகளுக்குக் கிடைக்கும் ஒதுக்கீடு ரூ. 2.88 லட்சம் கோடியாக இருக்கும். மத்திய அரசு சார்ந்த திட்டங்களில் 30 திட்டங்களை மாநிலங்களுக்கு மாற்றலாம் என நிதிக்குழு கண்டறிந்துள்ளது. திட்டங்களின் முக்கியத்துவம் கருதி அவற்றில் 8 திட்டங்களை மத்திய அரசின் நிதியில் செயல் படுத்துவதிலிருந்து விலக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இவை தவிர சரக்கு சேவை வரி, பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவது, பொதுமக்கள் உபயோகிக்கும் பொருள்களுக் கான கட்டண நிர்ணயம் மற்றும் பொதுத்துறை நிறுவன செயல்பாடு ஆகியவற்றை உரிய கால இடைவெளியில் அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பரிந் துரைத்துள்ளது.

மத்திய அரசு ஏற்பு

நிதிக்குழு பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களை மாற்ற நினைக்கும் மாநில அரசுகள் அந்த திட்டங்கள் குறித்த விவரத்தை அளிக்குமாறு மாநிலங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

மாநில முதல்வர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசின் நலத்திட்டங்களை மாற்றுவதற்கு மாநிலங்கள் தயங்க வேண்டாம் என்றும், தங்கள் மாநில வளர்ச்சிக்கு உகந்த திட்டங்களை வடிவமைத்து அனுப்புமாறும் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x