

ஆடம் கிரான்ட் மிகவும் இளவயதிலேயே வார்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டவர். 40 வயதுக்கு குறைவான பேராசிரியர்களில் உலகளவில் பிஸினஸ் வீக் என்ற பத்திரிகையால் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றிக்கு ஒரு புரட்சிகரமான வழியை தன்னுடைய “GIVE AND TAKE” என்ற புத்தகத்தில் பரிந்துரைக்கிறார்.
“கொடுப்பவர்கள் மற்றும் எடுப்பவர்கள்” என்ற இரு கூறான மனிதர்களைப் பற்றி விளக்கமாக எழுதியுள்ளார். குழுக்களை ஒருங்கிணைத்தல், உற்பத்தித்திறன் பெருக்கம் ஆகியவைகளை அணுகுமுறைகளாக ஏற்படுத்திக்கொண்டால் மற்றவர்களுக்குக் கொடுப்பது என்பது புரட்சிகரமான விளைவு.
கடின உழைப்பு, அதிர்ஷ்டம், திறமை இவை மூன்றும் இணையும் பொழுது, ஒவ்வொருவரும் பணியாற்றும் இடத்தில் வியக்கத்தக்க விளைவுகளை ஏற்படுத்துவார்கள். ஆனால், ஆடம் கிரான்ட் நான்காவது முக்கிய காரணி
யாக மற்றவர்களையும் தன்னோடு இணைத்து உயர்வதற்கான முக்கிய வழியாக “கொடுப்பதை” பற்றி பேசுகிறார்.
‘கொடுப்பதும் எடுப்பதும்’ நாம் வெற்றி பெரும் வழிகளை பெரிதும் மாற்றுகின்றன. கொடுப்பதும் எடுப்பதும் ஆகிய பழக்கங்கள் நம்முடைய உறவுகளில் உடன் பணியாற்றுபவர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் போட்டியாளர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றுள், எடுப்பதைக் காட்டிலும் கொடுப்பதே சிறந்தது என்று எடுத்துக்காட்டுகளோடு 370 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் ஆசிரியர்
குறிப்பிடுகிறார். அவ்வாறு மற்றவர்
களுக்கு கொடுத்து உயர்ந்த கதைகளை HOLYWOOD -ல் இருந்து வரலாறு வரை எடுத்துக்காட்டி விளக்குகிறார்.
Financial Time என்ற பத்திரிகை “கொடுப்பது எடுப்பது” என்ற புத்தகம் சரியான நேரத்தில் அழகாக அளந்து, தளாராத நம்பிக்கையை வளர்த்து, புதுமையான மாற்றத்தை நம்முள் ஏற்படுத்தும் என குறிப்பிடுகிறது. 9 வித்தியாசமான தலைப்புகளில் கொடுப்பதையும் எடுப்பதையும் விலாவாரியாகக் கூறி நாம் ஏன் கொடுப்பவர்களாக மாற வேண்டும் என ஆதாரங்களை அடுக்குகிறார்.
ஆஸ்திரேலியா, சிலி, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், மலேசியா, ஹாலந்து, தென் ஆப்ரிக்கா, ஸ்வீடன் மற்றும் வட அமெரிக்க நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான நபர்களிடம் இருந்து பெற்ற தரவுகளை வரிசைப்படுத்தி, கொடுப்பவர்கள் மற்றும் எடுப்பவர்கள் பற்றிய குணாதிசயங்கள் விரிவாக கூறப்பட்டுள்ளன.
கொடுப்பவர்கள் விரும்பும் குணாதிசயங்கள்
* அடுத்தவரின் நலனுக்காக உழைத்தல்
* நம்பிக்கைக்கு உரியவராக இருத்தல்
* பாதிக்கப்பட்டவர்களுக்காக சமூக நீதி வேண்டி போராடுதல்
* அடுத்தவரின் தேவைகளை பற்றி அறிந்து உணர்ந்து நடத்தல்
எடுப்பவர்கள் விரும்பும் குணாதிசயங்கள்
* பணம் மற்றும் இடம், பொருட்களை குவித்தல்
* ஆதிக்கம் செலுத்துதல், மற்றவர்களை அடிபணியச் செய்தல்
* வாழ்க்கையில் சந்தோஷத்தை நுகர்ந்து கொண்டே இருத்தல்
வெற்றியடைதல், எப்பொழுதும் அடுத்தவரைக்காட்டிலும் கூடுதலாக பெற்றுக்கொண்டே இருத்தல்.
மேற்கூறியவை அனைத்து நாடுகளி லும் கொடுப்பது ஒன்றே வாழ்வின் சீரிய நோக்கம் என்பதாக குறிப்பிடுக்கிறார்கள். ஆனால் ஆசிய, கிழக்கு ஆசிய மற்றும் வளைகுடா நாடுகளில் இவை வேறுபட்டு காண்பதற்கு ஏராளமான சாத்தியக் கூறுகள் உள்ளன.
நிதி நிறுவன பணியாளர் ஒருவரிடமிருந்து தான் கண்ட குணாதிசயங்களை பற்றி ஆசிரியர் குறிப்பிடுகிறார். “கணக்கிலடங்காத மணி நேரங்களில் உடன் பணியாளர்களுக்கு வழிகாட்டுதல், பெண்களின் தலைமை பொறுப்புக்கான போராட்டத்தில் முன்முயற்சி எடுத்தல், தொண்டு நிறுவனங்களுக்காக பணம் சேர்த்தல் ஆகியவைகளில் ஈடுபடும் பொழுது மற்றவர்களுக்குக் கிடைக்கும் பயனை எண்ணி நான் செய்யும் சேவையை எண்ணி மகிழ்கிறேன்” என்பதாகக் கூறுகிறார்.
இந்த மகிழ்ச்சி மற்றவர்களுக்குக் கொடுப்பதில்தான் தோன்றுமே ஒழிய மற்றவரிடமிருந்து பெறுவதில் வராது. இன்னும் சொல்லப் போனால் கொடுப்பவர்களுக்கு எதை எல்லாம் கொடுக்கிறார்களோ அதை எல்லாம் விட அதிகமாக வந்து சேரும். சுய தேவைகளை காட்டிலும் மற்றவர்களுடைய ஆர்வத்தையும் தேவைகளையும் பூர்த்தி செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் எடுப்பவர்களோ இந்த போட்டி உலகத்தில் தெரு நாய் சண்டை போன்ற தோற்றத்தை காண்கிறார்கள். கொடுப்பவர்கள் தனக்கு கிடைப்பதைக் காட்டிலும் அதிகமாக கொடுக்கிறார்கள். ஆனால் எடுப்பவர்கள் தன்னைத்தானே மையப்படுத்தி சுயநலவாதிகளாக இருக்கிறார்கள். கொடுப்பவர்கள் மற்றவர்களை மையப்படுத்தி கொடுப்பதில் இன்பம் காண்கிறார்கள்.
கொடுப்பவர்கள் எதைப்பற்றியும் சிந்திக்காமல் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனப்பாங்கில் சொந்தமாக அதிக செலவு செய்து நீண்ட கால நிகழ்வுகளுக்கு உதவி செய்கிறார்கள். எடுப்பவர்களோ லாபம், தான் அடைய போகும் பயன்கள் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். இவை இரண்டுக்கும் நடுவில், தான் என்ன செய்கின்றோமோ அதையே மற்றவர்கள் தமக்கு திருப்பி செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்களை அறிமுகப்படுத்துகிறார். பெரும்பான்மை யானவர்கள் இந்த வட்டத்துக்குள் வந்து விழுகிறார்கள்.
நிறுவனங்களில் கொடுப்பவர்களைக் காட்டிலும் எடுப்பவர்களே அதிகம் உள்ளனர். எடுப்பவர்களின் உத்திகள் மற்றவர்களை ஈர்த்து திட்டமிட்ட சூழ்ச்சிகளால் தன் வசதிக்கேற்ப கையாளும் தந்திரங்களை வளர்த்துக்கொள்கின்றனர். தங்களுடன் பணியாற்றுபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் இதை உபயோகிக்கிறார்கள். இதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு கேன்லே என்ற முன்னாள் ENRON நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி ஆவார். எடுப்பவர்கள் மேலே மேலே எழுந்து உச்சத்திற்கு போவதை போலத் தோன்றும். அந்த மாயையில் அவர்கள் கீழே விழும்பொழுது பாதாளத்தில் சென்று விழுகிறார்கள்.
ஜேக் வெல்ஷ் (Jack Welsh) என்ற ஜி.இ. குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஒவ்வொரு ஆண்டும் மிகவும் குறைவான உற்பத்தி திறனை வெளிப்படுத்தும் 10 விழுக்காடு ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி வந்தார். இது போன்ற ஏக போக அதிகாரமிக்க சாட்டை அடி அணுகுமுறைகள் கொடுப்பவர்கள் கொடுப்பதைத் தவிர்க்கும், எடுப்பவர்கள் எடுத்துக்கொண்டே இருப்பது அதிகரிக்கும்.
ஏதோ ஒரு வணிகரீதியான உடை அணிந்து HARVARD பல்கலைக்கழகத்திற்கு சென்று நிகழ்வுகளை மேல்தட்டு ஆங்கிலத்தில் விவரிப்பது மட்டுமே தலைமைச் செயல் அதிகாரியின் தலையாய கடமை அல்ல, மாறாக உடையிலோ ஏற்ற இறக்க பேச்சிலே படாடோப பாணியிலோ இயங்கும் தலைமை செயல் அதிகாரிகள் கொடுப்பது என்ற மனப்பாங்கை குழிதோண்டி புதைத்துவிடுவார்கள். பணியிலிருந்து விலகிய பின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி நினைவில் இருந்தே வெளியேறிவிடுவார்கள்.
பில் ஜாக்சன் என்ற கூடைப்பந்து பயிற்சியாளர் மைக்கேல் ஜோர்டன் என்ற தன்மைய ‘எடுக்கும்’ மன நிலைமையில் இருந்த கூடைபந்தாளரை ‘கொடுக்கும்’ மனநிலை பற்றி புரியவைத்தார். அதை புரிந்துகொண்ட மைக்கேல் ஜோர்டன் உடன் விளையாடுபவர்களுக்கு உத்திகளையும், முறைகளையும் தெளிவுற எடுத்துரைத்தார். விளைவாக, சிக்காக்கோ புல்ஸ் என்ற கூடைபந்து குழு வெற்றியை தவிர எதையும் பார்க்கவில்லை. கொடுப்பவர்கள் வெல்வார்கள், கொடுப்பவர்கள் கூடி நின்றால் கோடி நன்மை என்பதை மேலும் உறுதிசெய்கின்றது.
கொடுப்பவர்கள் வெற்றி அடையும் பொழுது அந்த நிகழ்வுகளும் செய்திகளும் பரவுகின்றது. அடுக்கடுக்காக அடுத்த நிலைகளுக்கும் சென்று சேர்கிறது. அந்த வெற்றி சிறு சிறு அலைகளை ஏற்படுத்தி சுற்றி இருக்கும் மனிதர்களை வெற்றி கரையை நோக்கி தள்ளி மகிழ்கிறது.
நாமும் ஏன் எடுப்பதை நிறுத்தக் கூடாது? மாறாக கொடுப்பதை கூட்டிக்கொண்டே செல்ல அந்த மனப்பாங்குக்கு நம்மை நேர்படுத்துதல் அவசியம். நூலாசிரியரின் கருத்து பரப்புரையாகவோ, மத சொற்பொழிவாகவோ, நீதிபோதனையாகவோ இல்லை. மாறாக, ஆவணங்களின் அடிப்படையிலும் நிகழ்வுகளின் வெளிப்பாட்டிலும் கூர்ந்த அறிவுசார் கண்ணோட்டத்தின் ஒளி பிளம்பாக வெளிப்படுகிறது. கொடுத்து பாருங்கள் ஒரு வாய்ப்பை GIVE AND TAKE என்ற இந்த புத்தகத்திற்கு!
rvenkatapathy@rediffmail.com