Published : 08 Feb 2015 12:23 PM
Last Updated : 08 Feb 2015 12:23 PM

வேலைக்கு ஆள் தேவையில்லை!

நல்ல பணியாளர் எங்களிடம் நிலைத்து இருக்கவே மாட்டேன் என்கின்றார்கள் என்ற ஒரு குறையை பலர் சொல்லக் கேட்டிருப்போம். எங்களிடம் பணிபுரியும் போது சாமான்யராகத்தான் அவர் இருந்தார். அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை அந்தக் கம்பெனிக்குப் போனவுடன் ரொம்பவும் சிறப்பாகச் செயல்பட ஆரம்பித்துவிட்டார். ஒருவேளை அவர்கள் நல்ல சம்பளம் கொடுப்பதனால் அவருக்குள் இருக்கும் திறமையெல்லாம் வெளிப்படுகின்றதோ?! என்றும் பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். பணம் என்பது மட்டுமே பணியாளரைச் சிறந்தவர்களாக மாற்றிவிடுவதில்லை. பணிபுரிவதற்கு சிறந்த இடமாக பணி செய்யும் இடத்தை மாற்றியமைப்பதில்தான் வெற்றியின் ரகசியமே இருக்கின்றது என்பதைச் சொல்லி, சிறந்த பணியிடத்தை ஏற்படுத்தித்தருவது எப்படி என்பதைச் சொல்லும் புத்தகம்தான் ‘தி பெஸ்ட் ப்ளேஸ் டு வொர்க்’ எனும் ரான் பிரீட்மேன் எழுதியுள்ள புத்தகம்.

வேலை, வேலை, வேலை!

வெறுமனே பணத்தை அள்ளிக் கொடுப்பதாலோ அல்லது பணத்தை இறைத்து அலுவலகத்தை இழைப்பதாலோ அது சிறந்த பணிபுரியும் இடமாக மாறிவிடாது என்று அதிரடியாக ஆரம்பிக்கும் பிரீட்மேன், சொன்னதைச் செய்யும் இடமாக பணியிடங்கள் இருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. தவறுகளைக் குறைத்து, தரத்தை உறுதி செய்து, உற்பத்தியை பெருக்கி தொழில் நடத்தி வெற்றி பெற்றதெல்லாம் அந்தக்காலம். அந்தக்காலத்தில் பணியாளர் தான் பார்க்கும் வேலை குறித்து என்ன நினைக்கின்றார் என்பதைப் பற்றியெல்லாம் யாருமே சிந்தனை செய்யாத காலம். ஏனென்றால், அன்றைக்கு இருந்த பணிகள் அப்படிப்பட்டவை. வேலை நடந்தால் சரி. இவ்வளவு நேரத்தில் ஒரு பணியாளரிடம் இருந்து இவ்வளவு வேலை வாங்கிவிட்டால் போதும் என்ற உற்பத்தித்திறன் என்ற ஒரே அளவீடு மட்டுமே இருந்த காலம் அது. இன்றைக்கு நிலைமை அப்படியில்லை.

டிஜிட்டல் பொருளாதாரம்!

இன்றைய டிஜிட்டல் பொருளாதாரத்தில் கூர்மையான அறிவு, விவேகம், படைப்பாற்றல், பணியிடத்தில் கூட்டாய்ச் சேர்ந்து பல விஷயங்களுக்கு முயற்சித்தல் என பல்வேறு உளவியல் சார்ந்த விஷயங்கள் பணியாளர்களுக்கு தேவைப்படுகின்றது. ஏனென்றால் இன்றைய சூழலில் எல்லாப்பணியாளர்களுமே நிறுவனத்தின் திட்டமிடுதல் மற்றும் செய்யும் வேலைகளில் புதுமைகளைப் புகுத்துதல் போன்றவற்றில் ஓரளவுக்கேனும் பங்கேற்கும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்துவருகின்றோம். இன்றைய பொருளாதாரத்தில் உற்பத்தித்திறன் என்பது பணியாளர் என்ன நினைக்கின்றார் என்பதனைச் சார்ந்தே இருக்கின்றது என்பதால் உளவியலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பது அவசியமாகின்றது என்கின்றார் பிரீட்மேன். வெறும் பணத்தை மட்டுமே செலவழிப்பது என்றில்லாமல் பணியாளர்கள் திறம்பட செயல்படுவதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுக்க முயல்வதே சிறந்த பணியிடத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகும் என்கின்றார் ஆசிரியர். இந்தவகையில் சிறந்த பணியிடத்தை ஏற்படுத்திக்கொடுப்பது எப்படி என்பதைச் சொல்லும் புத்தகம்தான் இது.

முயற்சியைக் கொண்டாடுவோம்!

நல்ல பணியிடத்தில் எப்போதுமே வெற்றி ஒரேயடியாய் கொண்டாடப்படுவதில்லை. முயற்சிகளே கொண்டாடப்படுகின்றது என்று சொல்லும் ஆசிரியர் வெற்றி ஒரேயடியாக விருது வழங்கி கொண்டாடப்பட்டால் தோல்வி அனாதையாகிவிடும். வெற்றி அடையாவிட்டால் அங்கீகாரம் இல்லை என்பதை உணர்ந்து புதிய முயற்சிகள் எடுப்பது தடைபடவே செய்யும். அதனாலேயே வெற்றியைக் கொண்டாடாமல் அதிக அளவில் புதிய முயற்சிகள் எடுப்பவர்களை கொண்டாடும் நிறுவனங்களே சிறந்த பணியிடங்களாக திகழ்ந்து வெற்றிபெறுகின்றன என்கின்றார் பிரீட்மேன். சிறந்த பணியிடத்தை உருவாக்க வேண்டுமா? பணியாளர்களை புதியவிஷயங்களில் ஈடுபடச் சொல்லி ஊக்குவியுங்கள். ரிஸ்க் எடுப்பவருக்கு ரிவார்ட் கொடுங்கள். வெற்றி என்பதை மேல் நோக்கி செல்லுகின்ற கோடு என்றே நாம் நினைத்துக்கொண்டிருக்கின்றோம். அதுதான் மிகப்பெரிய தவறு. ரிஸ்க் எடுத்து புதிய முயற்சிகள் பலவும் செய்யப்பட்டு அவை தோல்வியடைந்து சாதனைக் கோடு கீழ்நோக்கிப் பாதளத்திற்கு போய்க்கொண்டேயிருந்தாலுமே ஒரு சூழலில் ‘J’ (ஜே) கர்வ் எனப்படும் ஆங்கில ஜே எழுத்தைப் போல் சாதனைக் கோடு தோல்வியிலிருந்து அதிவேகமாக மீண்டுவரவே செய்யும் என்பதை உணர வேண்டும் என்கின்றார்.

அலுவலக வடிவமைப்பு!

அலுவலகத்தின் வடிவமைப்பு குறித்து விளக்கமாகச் சொல்லியிருக்கும் ஆசிரியர் ஒரு அலுவலகத்திலேயே பல வேலைகளுக்கு பல்வேறு விதமான செயல்பாடுகள் தேவைப்படும். சில வேலைகளை முடிக்க அமைதியான சூழலும் ஒட்டுமொத்த கான்சென்ட்ரேஷனும் தேவைப்படும். சில வேலைகளை முடிக்க உடனடியாக மற்றவர்களை தொடர்புகொள்வதும் தொடர்ந்து மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருப்பதும் தேவைப்படும். இதற்குத் தகுந்தாற்போல் அலுவலகத்தின் வடிவமைப்பை செய்யுங்கள் என்று சொல்லும் ஆசிரியர், பணிபுரியும் இடத்தில் பெறும் அனுபவம் தலை சிறந்ததாக இருக்கும் அளவுக்கு பார்த்துக்கொள்வதில் நிறுவனம் எப்போதுமே கண்ணும்கருத்துமாக இருக்கவேண்டும் என்பதையும் தெளிவாக விளக்குகின்றார். இதெல்லாம் கதையாக அல்லவா இருக்கின்றது. நம்மில் யாராவது அலுவலகத்தின் அமைப்பு எப்படியிருக்கின்றது. இன்ட்டீரியர் டெக்கரேஷன் எல்லாம் எப்படி இருக்கின்றது என்றெல்லாம் கவலைபடுகின்றோமா என்ன? தினமும் போகின்றோம். கொடுத்த வேலையைப் பார்க்கின்றோம். திரும்புகின்றோம். கம்பெனி என்ன லாபம் பார்க்காமலா இருக்கின்றது என்று நீங்கள் கேட்கலாம். இது குறித்த ஆய்வுகள் சொல்வது என்ன தெரியுமா? இன்ட்டீரியர் மற்றும் டெக்காரை சூப்பராக மாற்றுங்கள், கவனிக்காதவர்களும் ரசித்து கவனிப்பார்கள். அவர்களுடைய திறன் உயரும் என்பதைத்தான் என்கின்றார் பிரீட்மேன்.

கிரியேட்டிவிட்டி!

கிரியேட்டிவ்வாக இருங்கள். கிரியேட்டிவ்வாக இருங்கள் என்று அனைவரையும் கேட்டுக்கொள்வதன் மூலம் கிரியேட்டிவிட்டியை வளர்க்க முடியாது. எப்போதுமே வேலை, வேலை, வேலை என்றிருக்கும் பணியாளரிடம் கிரியேட்டிவிட்டி எங்கே முளைக்கும். கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய உதவுங்கள். ரிலாக்ஸிங்கா, எங்க தொழிலில் அதற்கு வாய்ப்பே இல்லை, டார்கெட், டெட்லைன் என்று போட்டுத்தாக்கும் தொழில் சார் எங்க தொழில். கடந்த ஐந்து வருடத்தில் மூன்று முறை சுற்றுலா செல்ல முயற்சித்து பாதியில் திரும்பியதுதான் பாக்கி. சனி, ஞாயிறு கிழமைகளிலும் இன்பாக்ஸை வெறித்துப்பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம் என்கின்றீர்களா உங்கள் பணியாளர்கள். அப்புறம் எங்கே கிரியேட்டிவிட்டி முளைக்கப்போகின்றது. பேசாமல் அலுவலகத்தில் விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்கின்றார் ப்ரீட்மேன். என்ன சம்பளம் கொடுத்து விளையாட்டா என கொந்தளிக்கின்றீர்களா? கிரியேட்டிவிட்டி என்பது தொடர்ந்து வேலை பார்த்துக்கொண்டேயிருக்கும் ஒரு நபரை விட்டு பத்து மீட்டர் இடைவெளிவிட்டே இருக்கும். கொஞ்சம் ரிலாக்ஸ்டாய் செய்யும் வேலையை விட்டுவிட்டு வேறு எதையாவது செய்யும் போதுதான் அன்கான்ஷியஸாய் பளிச் பல்புகள் மூளையில் எறியும் என்கின்றார் ஆசிரியர்.

சிங்கங்கள் சிங்கிளாய் செயல்படக்கூடாது!

அடுத்து ஆசிரியர் சொல்வது பணிபுரியும் இடத்தில் ஒன்றாய் செயல்படுவதற்கு உண்டான சூழலை உருவாக்கித்தருவதற்கான முயற்சியை. நிர்வாகம் முதலில் பணியிடம் என்பது பல்வேறு சூழ்நிலையில் இருந்து வரும் மனிதர்களை ஒரே நோக்கமுள்ள ஒரு குழுவாய் மாற்றுவது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்கின்றார். அதற்கு உண்டான சூழலை உருவாக்க வேண்டும். அதற்காக அனைவரின் பிறந்த நாளன்றும் கம்ப்யூட்டர் ஜெனரேட்டட் வாழ்த்து மெயிலோ, நானூறு ரூபாய் பட்ஜெட்டில் ஒரு பிறந்த நாள் கேக்கை வாங்கி வெட்டியோ எல்லோரையும் ஒன்றாக்கிவிடலாம் என்று கனவு காணாதீர்கள் என்கின்றார் ஆசிரியர். புதியதாய் வருபவரிடம் பேசுவதற்கான வாய்ப்பு அனைவருக்கும் இருக்கவேண்டும். கம்ப்யூட்டரின் உள்ளே பொழுதுக்கும் தலையை நுழைத்துக்கொண்டிருக்கும் ஒருவரால் புதியதாய் வருபவரை ஏறெடுத்தும் பார்க்கவே முடியாது போகும். அனைவரும் பேசிக்கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்தும் வண்ணம் நிர்வாகம் ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். புதியதாய் வந்து வேலைக்குச் சேர்ந்திருக்கும் சேல்ஸ்மேனிடம் பேசுவது வேஸ்ட் ஆப் டைமாக அப்போதைக்கு தெரியும் என்றாலும் நீண்ட நாள் அடிப்படையில் அதற்கு அன்றாடம் ஒதுக்கும் நேரம் மிகவும் உதவுவதாய் இருக்கும் என்கின்றார் ஆசிரியர். நட்பு என்பது சட்டங்களைத்தாண்டி உற்பத்தியை பெருக்க வல்லது என்பதை உணருங்கள் என்கின்றார் நூலாசிரியர்.

இப்படி பல நுணுக்கமான விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பிரீட்மேன், பணியாளர்களை பணி ரீதியாகவும், தனிமனித வாழ்க்கையிலும் வெற்றிபெறச்செய்ய உதவும் விஷயங்களைச் செய்து தரும் சூழலை பணியிடத்தில் உருவாக்குவதன் மூலமே சிறந்த பணியிடத்தை உருவாக்கி தொழிலில் அபரிமிதமான வெற்றி காண முடியும் என்று முடிக்கின்றார். இப்படிப்பட்ட பணியிடத்தை நிர்மானித்தால் அங்கே வெற்றிபெறத்தான் ஆள் தேவையே தவிர வேலை பார்க்க ஆள் தேவையேயில்லை இல்லையா? தொழில் முனைவோர் அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம் இது.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x