

கருப்புப் பணத்தை பதுக்க சகல வசதிகளையும் செய்து கொடுத்ததாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் எச்.எஸ்.பி.சி. வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டூவர்ட் கலீவர் தனது சுவிஸ் வங்கி கணக்கில் மில்லியன் டாலர்கள் தொகையை வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே கடந்த ஆண்டு இவரது சம்பளம் 8.03 பிரிட்டிஷ் பவுண்டுகளிலிருந்து 7.62 மில்லியன் பவுண்டுகளாகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில் பிரிட்டன் ஊடகங்கள் சில சி.இ.ஓ. ஸ்டூவர்ட் கலீவருக்கே சுவிஸ் வங்கிக் கணக்கில் மில்லியன் டாலர்கள் தொகை இருப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடையாது என்று கூறியுள்ளது.
தி கார்டியன் இதழ் வெளியிட்டுள்ள புலனாய்வுச் செய்தியில் எச்.எஸ்.பி.சி. வங்கி சி.இ.ஓ. ஸ்டூவர் கலீவருக்கு அதன் சுவிஸ் வங்கிக் கிளையில் கணக்கு இருப்பதாகவும் அதில் அவர் 7.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையை வைத்திருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
அதாவது 2007ஆம் ஆண்டு பனாமா என்ற பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் பெயரில் கலீவர் கணக்கில் இந்தப் பெரும் தொகை இருந்ததாக கார்டியன் இதழ் கூறியிருந்தது.
இந்தச் செய்தி வெளியானவுடன் எச்.எஸ்.பி.சி. வங்கி, இந்தக் கணக்கை அவர் தான் பெற்ற போனஸ் தொகைகளுக்காக வைத்திருக்கிறார் என்று கூறியது. அதாவது 1998ஆம் ஆண்டு கலீவர் ஹாங்காங்கில் இருந்த போது இந்த சுவிஸ் வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டது என்றும், போனஸ் தொகைகளுக்கான வரிகளை முறையாகச் செலுத்தி வந்துள்ளார் என்றும் கூறிய எச்.எஸ்.பி.சி., 2003ஆம் ஆண்டுதான் கலீவர் ஹாங்காங்கிலிருந்து லண்டன் வந்தார் என்று தெரிவித்தது.
இந்நிலையில் கடந்த வாரத்தில் பிரிட்டன் ஊடகங்கள் கலீவர் வெளியிட்டதாக மன்னிப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் அவர் சுவிஸ் வங்கியின் கடந்த கால செயல்பாடுகளுக்காக அவர் வருத்தம் தெரிவித்ததாகக் கூறப்பட்டிருந்தது.
இந்த சர்ச்சைகளினால் எச்.எஸ்.பி.சி. வங்கிகளின் ஆண்டு லாப விகிதம் 17% குறைந்துள்ளது. இந்த வங்கியின் சுவிஸ் நடவடிக்கைகள் பெரும் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டதாக கலீவர் தெரிவித்துள்ளார்.