

ஜப்பானில் பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டாலும் அடுத்த 5 ஆண்டு களுக்கு அதாவது 2020 வரை பற்றாக்குறை நீடிக்கும் என்று அங் கிருந்து வெளியாகும் பொருளாதார அறிக்கை தெரிவிக்கிறது.
நடப்பு நிதி ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைகிறது. இந்த காலகட்டத்தில் ஜப்பானின் பற்றாக்குறை 13,700 கோடி டாலராக இருக்கும் அதாவது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) இது 3.3 சதவீதமாக இருக்கும் என்று ஜப்பானிலிருந்து வெளியாகும் நிகிகி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பொருளாதாரம் வளர்ச்சியடைந் தாலும் பற்றாக்குறை 1.6 சதவீத அளவிலிருக்கும் என்றும் கணித்துள்ளது.
நாட்டில் பொருளாதார தேக்க நிலை நிலவுவதால் புதிய வரி விதிப்புகளை 2017-ம் ஆண்டு வரை அமல்படுத்துவதில்லை என்று பிரதமர் ஷின்சோ அபே முடிவு செய்துள்ளார்.
மதிப்பு கூட்டு வரி அல்லது நுகர்வோர் வரி 10 சதவீதம் விதிக்க முடிவு செய் யப்பட்டுள்ளது. இது 2017-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும்.
ஜப்பானில் ஆண்டுக்கு 3 சதவீத வளர்ச்சி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருந்தாலும் 1 சதவீத அளவுக்கு வளர்ச்சியடைந்தாலே பற்றாக்குறை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜப்பானின் பொருளாதாரம் மற்றும் பற்றாக்குறை சார்ந்த கொள்கை வகுக்கும் குழு விடம் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பொரு ளாதார வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வளர்ச்சியை ஊக்குவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானில் நுகர்வோர் வரி விதிப்பை 5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட்டது. இதனால் உள்நாட்டில் பொருள் நுகர்வு குறைந்து ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி சரிந்தது. இதை சரி செய்யும் விதமாக வரி விதிப்பை 2017 வரை உயர்த்துவதில்லை என்ற அறிவிப்பை பிரதமர் ஷின்சோ அபே வெளியிட்டார்.
அடுத்த ஆண்டு கோடைக் காலத்தில் வரி விதிப்பில் புதிய அணுகுமுறையைக் கடைப்பிடித்து தனது வரி வருமானத்தை அதிகரிக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.