ரயில்வே பட்ஜெட்: தொழில்துறை வரவேற்பு

ரயில்வே பட்ஜெட்: தொழில்துறை வரவேற்பு
Updated on
1 min read

இந்திய தொழில்துறையினர் ரயில்வே பட்ஜெட்டை வரவேற்றி ருக்கிறார்கள். இது அக்கறையான பட்ஜெட் என்று இந்திய தொழிலகக் கூட்டமைப்பின்(சிஐஐ) இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி தெரிவித்தார். வாடிக்கையாளர்கள், சுற்றுப்புறச் சூழல், பொருளாதாரம் என பல வகையில் அக்கறையோடு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்று சந்திரஜித் பானர்ஜி தெரிவித்தார்.

இன்னொரு முக்கிய அமைப்பான ஃபிக்கியும் இந்த பட்ஜெட்டை வரவேற்றிருக்கிறது. இந்த பட்ஜெட் உத்தி சார்ந்து புதுமையாக இருக்கிறது. மேலும் அடுத்த ஐந்தாண்டுகளில் 8.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பது வரவேற்கத்தக்கது என்று ஃபிக்கியின் பொதுச்செயலாளர் ஏ.திதார் சிங் தெரிவித்தார்.

தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில்துறையினரின் தேவைகளை பூர்த்தி செய்ய இந்த ரயில் பட்ஜெட்டில் முயற்சித்திருப்பது தெரிகிறது என்று அசோசேம் அமைப்பின் தலைவர் ராணா கபூர் தெரிவித்தார்.

கடந்த சில வருடங்களாக பணவீக்கம் அதிகமாக இருக்கும் போது, பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பது நல்ல முடிவு என்று பி.ஹெச்.டி. சேம்பர் ஆப் காமர்ஸின் தலைவர் அலோக் பி ஸ்ரீராம் தெரிவித்தார். மேலும் இருவழி பாதைத் திட்டங்கள் மூலம் புதிய முதலீடுகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது வளர்ச்சிக்கும் வழி வகுக்கும் என்றார். ரயில் நிலையங்களில் வை-பை அமைப்பது, ஆன்லைன் புக்கிங் வசதியை மேம்படுத்தி இருப்பது உள்ளிட்ட காரணங்களால் இந்திய ரயில்வே துறை அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி செல்கிறது என்று மேக்மைடிரிப் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

வாடிக்கையாளர் வசதிக்காக மொபைல் செயலி (ஆப்ஸ்) உருவாக இருப்பது, எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்புவது ஆகிய காரணங்களால் இந்தியாவில் எம்-காமர்ஸ் துறை அடுத்த சில ஆண்டுகளில் சிறப்பாக இருக்கும் என்று மேக் மை டிரிப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷ் மாகோவ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in