இந்தியாவில் தங்கத்தின் தேவை 14% குறைந்தது

இந்தியாவில் தங்கத்தின் தேவை 14% குறைந்தது
Updated on
1 min read

2014-ம் ஆண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 14 சதவீதம் குறைந்து 842.7 டன்னாக இருந்தது. தங்கத்தின் இறக்குமதிக்கு மத்திய அரசு அதிக கட்டுப்பாடுகள் விதித்ததே இதற்கு காரணமாகும்.

2013-ம் ஆண்டில் தங்கத்தின் தேவை 974.8 டன்னாக இருந்தது என்று உலக தங்க கவுன்சில் (டபிள்யூ.ஜி.சி.) தெரிவித்தி ருக்கிறது.

2013-ம் ஆண்டு தங்கத்தின் தேவை 2.57 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருந்தது. ஆனால் இப்போது ரூ.2.08 லட்சம் கோடியாகக் குறைந்தது.

அதே சமயத்தில் நகைக்காக தங்கம் பயன்படுத்துவது 8 சதவீதம் உயர்ந்திருக்கிறது. 2013-ம் ஆண்டில் 612.7 டன் அளவுக்கு நகைக்காக தங்கம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது 662.1 டன் அளவுக்கு தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.2014-ம் ஆண்டில் தங்க இறக்குமதி 769 டன்னாக இருந்தது. ஆனால் 2013-ம் ஆண்டில் 825 டன் அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது.

இதில் மறைமுகமாக இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு மட்டும் 175 டன்னாகும். அரசாங்கம் கொள்கை முடிவுகளை தளர்த்தி, வரியை குறைக்கும்போது மறைமுகமாக இந்தியாவுக்கு வரும் தங்கத்தின் அளவு குறையும் என்று உலக தங்க கவுன்சில் நிர்வாக இயக்குநர் (இந்தியா) பி.ஆர்.சோமசுந்தரம் தெரிவித்தார்.

முதலீட்டுக்காக தங்கம் வாங்குவதும் 50 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது. 2013-ம் ஆண்டு 362 டன் அளவுக்கு முதலீட்டுக்காக தங்கம் வாங்கப்பட்டது. ஆனால் 2014-ம் ஆண்டு 180 டன் அளவுக்கு குறைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in