

எரிவாயு சிலிண்டர்களுக்கு நேரடியாக மானியம் அளிப்பதைப்போல (டிபிடி) உணவு மானியத்தையும் ரொக்கமாக அளித்தால் அரசுக்கு ரூ. 25 ஆயிரம் கோடி மீதமாகும் என்று கிரிசில் தரச்சான்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
உணவுப் பொருள்களைக் கொள்முதல் செய்வது, அவற்றை பாதுகாப்பது, அதை விநியோகிப்பது உள்ளிட்டவற்றுக்கு ஆகும் செலவு இதனால் மீதமாகும் என்றும் தெரிவித்துள்ளது.
உணவு மானியத்துக்கு அரசு செலவிடும் தொகை மீதமாவது ஒருபுறம் இருந்தாலும், நேரடியாக பணத்தை அளிப்பதன் மூலம் அதாவது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணத்தை அளிப்பதன் மூலம் மக்களின் நுகர்வு திறன் அதிகரிக்கும், இதனால் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்றும் கிரிசில் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
2015-16-ம் நிதி ஆண்டில் ஐந்து பேரடங்கிய குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ. 5,800 தொகை வங்கிக் கணக்கில் அளிக்கலாம். இதன் மூலம் அரசு தெரிவித்துள்ள உணவு மானியம் மற்றும் மானியம் அல்லாத பிற செலவுகளில் 5 சதவீதம் குறையும். கிராமப்பகுதிகளில் இந்த அளவுக்கு மானியம் மீதமாகும் என்றும் ஏழை மக்களின் செலவில் 10 சதவீதம் நகர்ப்பகுதிகளில் மிச்சமாகும் என்றும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதுபோன்று எவ்வித கட்டுப் பாடுகளும் இல்லாத பண மாற்றம் மூலம் பயனாளிகள் தங்களுக் குத் தேவையானதை எவ்வித கட்டுப்பாடும் இன்றி செலவழிக்க வழியேற்படும். இதனால் நுகர்வு அதிகரித்து பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்றும் அரசுக்கு கிரிசில் ஆய்வறிக்கை பரிந்துரைத்துள்ளது.
உயர் வருவாய் பிரிவினர் இந்த பணத்தை புரதம் நிறைந்த உணவுகளான பால், முட்டை, மீன், இறைச்சி மற்றும் ஆடைகள், காலணிகள் வாங்குவதற்கு செலவழிப்பர். இது தவிர வாடகை, போக்குவரத்துக்கும் பயன்படுத்துவர். மேலும் மருத்துவ செலவுகள் உள்ளிட்டவற்றையும் இதன் மூலம் ஈடுகட்ட முடியும் என்றும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
நேரடி பண பரிமாற்றம் என்பது முழுமையாக செயல்படுத்துவதற்கு நீண்ட காலம் ஆகலாம். இதன் மூலம் புரதம் நிறைந்த சாப்பாடு உள்ளிட்டவற்றுக்கு செலவழிப்பதோடு சுகாதாரம், கல்வி உள்ளிட்டவற்றுக்கும் செலவிட வழியேற்படும். இத்தகைய நடைமுறையானது எவருக்கும் தொந்தரவின்றி குறைந்தபட்சம் ஒருவருக்காவது பயன் உள்ளதாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்ட நிறைவேற்றம் முழு வெற்றியை பெறும் போது மக்களின் நுகர்வுத் திறனில் குறிப் பிடத்தக்க மாற்றம் ஏற்படும். அத்துடன் உரிய பயனாளிகள் பயன்பெறுவதானது இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப் படும்போதுதான் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.