Published : 17 Feb 2015 10:58 AM
Last Updated : 17 Feb 2015 10:58 AM

உலக அளவில் பிரபலமான குடும்ப நிறுவனம்

பொதுமக்கள் முதலீடே இல்லாமல், முழுக்க முழுக்க ஒரே குடும்பத்துக்குச் சொந்தமான உலகின் மிகப் பெரிய நிறுவனம் எது தெரியுமா? ஸ்வீடன் நாட்டில் இருக்கும் ஃபர்னிச்சர் கம்பெனி ஐக்கியா!

ஸ்வீடனில் அஹூனியார்ட் (Agunnaryd) எனும் நகரம். இதன் அருகே எல்ம்டார்ட் (Elmtaryd) என்னும் சிறிய பண்ணை இருக்கிறது. இங்கே ஒரு நடுத்தரக் குடும்பத்தில் இங்வார் காம்ப்ராத் (Ingvar Kamprad) பிறந்தார். அவர் பின்புலத்தில் பல சோகங்கள் உண்டு.

பலனில்லா உழைப்பு

இங்வாரின் தாத்தா ஜெர்மனியிலிருந்து பிழைப்பு தேடி ஸ்வீடனுக்குக் குடியேறினார். ஒரு பண்ணையில் வேலை பார்த்தார். அஹூனியார்ட் இருந்த பகுதி நிலம் அத்தனை வளமையானதல்ல. நிலத்தை ஆழமாகத் தோண்டவேண்டும், உரம் போடவேண்டும், நீர் பாய்ச்சவேண்டும், களை எடுக்கவேண்டும், பண்ணையில் பால் தரும் பசுக்கள் உண்டு. இவற்றைப் பராமரிக்கவேண்டும், பால் கறக்கவேண்டும். விளைபொருட்கள், பால் ஆகியவற்றை உள்ளூர்ச் சந்தையில் விற்பனை செய்யவேண்டும். முதுகு உடையும்படி உழைத்தால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும், இதனால், அஹூனியார்ட் மக்கள் அனைவருமே கடும் உழைப்பாளிகளாக இருந்தார்கள்.

இங்வாரின் தாத்தாவும் கடுமையாக உழைத்தார். எளிமையான வாழ்க்கை நடத்திப், பணம் சேமித்தார். இதை மூலதனமாகப் போட்டு, வங்கிக் கடன் வாங்கி எல்ம்டார்ட் பண்ணையை வாங்கினார். அவர் கெட்ட காலம், சில வருடங்கள் விவசாயம் பொய்த்தது. வங்கிக் கடனுக்கான வட்டியை அவரால் கட்ட முடியவில்லை. மானம் பெரிதென்று நினைத்த தாத்தா தற்கொலை செய்துகொண்டார்.

வாழ்க்கைப் பாடம்

இங்வாரின் பாட்டி இதைச் சவாலாக ஏற்றுக்கொண்டார். குடும்பத்தோடு இன்னும் கடுமையாக உழைத்தார். குடும்பம் தலை நிமிரத் தொடங்கியது. இந்தப் பின்புலத்தால், பணத்தைவிட மானம் பெரியது, பணத்தைச் சிக்கனமாகச் செலவிடவேண்டும், கடுமையாக உழைக்கவேண்டும், நேர்மையாக நடக்கவேண்டும் என்னும் விலை மதிப்பில்லாத வாழ்க்கைப் பாடங்கள் இங்வார் மனதில் ஆழமாகப் பதிந்தன.

சிறுவயதில் இங்வாருக்குத் தூக்கம் என்றால் மிகவும் பிடிக்கும். அதிகாலையில் அவர் அப்பாவும், அம்மாவும் ஆறு மணிக்கு எழுந்திருப்பார்கள், இங்வாரை எழுப்புவார்கள். அவர் எழுந்திருக்கவே மாட்டார். அம்மாவும், அப்பாவும் ``தூங்குமூஞ்சி” என்று தினமும் திட்டுவார்கள். தங்கள் மகன் உதவாக்கரை என்று முடிவு செய்துவிட்டார்கள்.

பரிசு ஏற்படுத்திய மாற்றம்

இப்போது ஒரு ஆச்சரியம் நடந்தது. இங்வாரின் அப்பா மகனின் பிறந்த நாளுக்கு அலாரம் கடிகாரம் வாங்கித் தந்தார். அம்மா, அப்பா ஆறு மணிக்குத்தானே கண் விழிப்பார்கள்? இங்வார் 5.50 – க்கு அலாரம் வைத்தார். எழுந்தார். அம்மா, அப்பாவை எழுப்பிவிட்டார். அவர்களோடு பண்ணைக்குள் போனார். மாடுகளுக்குத் தீனி வைப்பது, பால் கறப்பது, களை பறிப்பது என்று அத்தனை விஷயங்களையும் எட்டு வயதிலேயே தானாகச் செய்யக் கற்றுக்கொண்டுவிட்டார்.

தொழில் முனைவு

சிறுவயதிலேயே இங்வாரிடம் தொழில் முனைப்பு இருந்தது. ஸ்வீடனின் நிலப்பரப்பில் சுமார் 69 சதவிகிதம் காடுகள். ஆகவே, மரங்களைப் பயன்படுத்தி தீக்குச்சிகள், ஃபர்னிச்சர் தயாரிப்பு ஆகியவை முக்கிய தொழில்களாக இருந்தன. இங்வார் தன் பத்து வயதில் முதல் பிசினஸ் தொடங்கினார். தீக்குச்சிகளை மொத்த விலை வியாபாரிகளிடமிருந்து வாங்குவார். உள்ளூர் சில்லறைக் கடைகளுக்கு லாபத்தில் விற்பார்.

ஐக்கியா பிறந்த கதை

தீக்குச்சியில் தொடங்கிய வியாபாரம் நன்றாகப் பற்றிக்கொண்டது. இங்வார் தன் வியாபாரத்தை விரிவுபடுத்தினார். நகைகள், கடிகாரங்கள், உடைகள் எனப் பல பொருட்களை விற்கத் தொடங்கினார். ஆரம்பத்தில், இங்வார் அவரே கடைகளுக்குப் போய் விற்பார். இத்தோடு தபால் மூலமாக விற்கும் மெயில் ஆர்டர் பிசினஸ் தொடங்கினார். தன் கம்பெனிக்கு IKEA கார்ப்பரேஷன் என்று பெயர் வைத்தார். எப்படி இந்தப் பெயர் அவர் மனதில் தோன்றியது? Ingvar Kamprad என்னும் தன் பெயரிலிருந்து IK, தன் வீடு இருந்த பண்ணையான Elmtaryd என்பதிலிருந்து E, Agunnaryd என்னும் சொந்த ஊர்ப் பெயரிலிருந்து A. மொத்தத்தில் IKEA.

புதிது புதிதாக எந்தப் பொருட்களை விற்கலாம், வியாபாரத்தை வளர்க்கலாம் என்று இங்வாருக்குத் துடிப்பு அதிகம். ஸ்வீடன் காடுகள் அடர்ந்த நாடு என்பதால், மரங்கள் கணிசமாக இருக்கும். மர ஃபர்னிச்சர்கள் முக்கிய தொழிலாக இருந்தது. மேசை, நாற்காலிகள், சோபா செட்கள், டைனிங் டேபிள், கட்டில், தொட்டில் போன்ற மர சாமான்களை விற்க ஆரம்பித்தார். பிசினஸ் அமோகமாக வளர்ந்தது.

இங்வார் மிக எளிமையான மனிதர். பணம் கொட்டியபோதிலும், பழைய மாடல் காரைத்தான் பயன்படுத்தினார். விமானத்தில் முதல் வகுப்புப் பயணமே கிடையாது. இப்படி எளிமையில் திருப்தி கண்ட மனிதருக்குத் திருப்தி தராத ஒரே விஷயம் – ஐக்கியாவின் வளர்ச்சி. மர ஃபர்னிச்சர்கள் துறையில் ஐக்கியா உலகத்தின் நம்பர் 1 கம்பெனியாக வேண்டும் என்னும் வெறி அவருக்கு இருந்தது.

என்ன செய்யலாம்?

விற்பனையை அதிகரிக்க ஸ்வீடனில் ஃபர்னிச்சர்கள் விற்பனை ஏன் உச்சம் தொடவில்லை, அதற்கு என்ன செய்யலாம் என்று இங்வார் ஆராய்ந்தார். ஸ்வீடனில் மரம் மலிவாகக் கிடைத்தது. ஆனால், தச்சர்களின் கூலி மிக அதிகம். தச்சர்களுக்கு ஏகக் கிராக்கி. நல்ல மரவேலை செய்பவர்கள் கிடைப்பதே சிரமமாக இருந்தது. சாதாரணமாக மரத் தட்டுமுட்டுச் சாமான்கள் அளவில் பெரியவை. கடைகளிலிருந்து வாங்கினால், வீட்டுக்குக் கொண்டுவரும் போக்குவரத்துச் செலவு, ``தேங்காய் கால் பணம், சுமை கூலி முக்கால் பணம்” என்னும் நம் ஊர்ப் பழமொழியை உண்மையாக்குவதாக இருந்தது.இந்தக் காரணங்களால், ஸ்வீடன் நாட்டு மக்கள் மர ஃபர்னிச்சர்கள் வாங்குவதைத் தவிர்த்தார்கள், அல்லது தள்ளிப் போட்டார்கள். விற்பனை மந்தமானது.

இந்தத் தடைக் கற்கள் அத்தனைக்கும் தீர்வு கண்டுவிட்டால் ஃபர்னிச்சர் விற்பனையைப் பல நூறு மடங்கு அதிகரிக்கலாம் என்று இங்வார் மனதில் பொறி தட்டியது. ``ஃபர்னிச்சர் என்றால் விலை உயர்ந்த பொருள்” என்று மக்கள் மனங்களில் இருந்த பொசிஷனிங்கை முதலில் மாற்றவேண்டும் என்று முடிவுசெய்தார். தன் கம்பெனி பற்றி அவர் உருவாக்க முடிவு செய்த பொசிஷனிங்: ஐக்கியா,நன்கு டிசைன் செய்யப்பட்ட, எண்ணிலடங்காத வகைகளில் வீட்டு உபயோகப் பொருட்களை, எல்லோருக்கும் கட்டுப்படியாகக்கூடிய மலிவான விலையில் தரும் கடை.

இந்தப் பொசிஷனிங்கை நிஜமாக்க இரண்டு வித நடவடிக்கைகள் தேவை – கச்சிதமான டிசைன், விலைக் குறைப்பு. இவை இரண்டிலும் இங்வார் முழுமூச்சோடு இறங்கினார்.

புதிய உத்தி

இங்வார் மூளையில் ஒரு மின்வெட்டல். Foldable Furniture என்னும் மடக்கு மேசை, நாற்காலி, கட்டில்களை அறிமுகப்படுத்தினார். இவற்றின் கால்கள் போன்ற பல்வேறு பாகங்களைத் தனித் தனியாகக் கழற்றினார். ஒரு பொட்டலமாக்கினார். இவற்றோடு, ஒரு பாக்கெட்டில் பல்வேறு பாகங்களை இணைக்கும் ஸ்க்ரூக்கள், பாகங்களை இணைக்கும் எளிமையான, விலாவாரியான செயல்முறை ஒரு குட்டிப் புத்தகத்தில்.

வாடிக்கையாளர் ஐக்கியா கடைக்கு வருவார். மேசையைப் பொட்டலமாக வாங்குவார். காரில் பாந்தமாக இந்தப் பொட்டலம் உட்காரும். வழியில் எந்த உரசலும் ஏற்படாது. வீட்டுக்கு வந்து சில ஸ்க்ரூக்களை முடுக்குவார். மேசை ரெடி. தச்சருக்குத் தரும் கூலியில் ஏகப்பட்ட மிச்சம், வாடிக்கையாளருக்கு ஏகப்பட்ட சேமிப்பு.

பிற நாடுகளுக்கு

விலைகளைக் குறைக்க இங்வார் இன்னொரு வழியையும் கையாண்டார். கூலி குறைவான சீனா, போலந்து ஆகிய நாடுகளுக்குத் தயாரிப்பை அவுட்சோர்ஸ் செய்தார். இன்று ஐக்கியாவின் 90 சதவிகித விற்பனை அவுட்சோர்ஸ் செய்த உற்பத்திப் பொருட்களிலிருந்து வருகிறது.

பிரம்மாண்ட வளர்ச்சி

ஐக்கியாவுக்கு இன்று 46 நாடுகளில் 351 கடைகள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் பல லட்சம் சதுர அடிகள் பரப்புள்ள பிரம்மாண்ட விற்பனையகங்கள். 12,000 – துக்கும் மேற்பட்ட ஃபர்னிச்சர் வகைகள் விற்பனையாகின்றன. மொத்த ஆண்டு விற்பனை 28 பில்லியன் டாலர்கள் (சுமார் 1,72,624 கோடி ரூபாய்). விரைவில் இந்தியாவிலும் ஐக்கியா கடைகள் திறக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

இங்வார் காம்ராத் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்? அவருக்கு இப்போது வயது 89. 2010 – இல், வாரன் பஃபட், பில் கேட்ஸ் இருவரையும் பின்தள்ளி, இங்வார் உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்தார். அடுத்த வருடமே, மகனிடம் பிசினஸை ஒப்படைத்தார். தன் சொத்துகளில் பெரும்பகுதியை அறக்கட்டளைகளுக்கு எழுதிவைத்தார்.தான் காணும் கனவுகள் நிஜமாவதைப் பார்க்கும் பாக்கியம் ஒரு சிலருக்கே கிடைக்கும். அந்த அதிர்ஷ்டசாலிகளில் இங்வார் முக்கியமானவர்.

- slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x