ஹெச்எஸ்பிசி வங்கியில் ஸ்விஸ் போலீஸ் சோதனை

ஹெச்எஸ்பிசி வங்கியில் ஸ்விஸ் போலீஸ் சோதனை
Updated on
2 min read

ஸ்விட்சர்லாந்து போலீஸார் நேற்று ஹெஎஸ்பிசி வங்கி அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அந்நியச் செலாவணி பண பரிவர்த்தனை மோசடி தொடர்பாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

சமீபத்தில் வங்கியில் கணக்கு வைத்துள்ள 1,195 இந்தியர்களின் பட்டியலை ஹெச்எஸ்பிசி வங்கி வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக ஸ்விஸ் போலீஸார் சோதனை மேற்கொண் டுள்ளதால், இந்த நடவடிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறு கிறது.

வங்கியின் ஜெனீவா கிளையில் கணக்கு வைத்துள்ளவர்களின் பட்டியலை புலனாய்வு பத்திரிகை யாளர்கள் இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டனர். இந்தப் பட்டியலில் 1,195 இந்தியர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது.

வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு உதவியதாக ஹெச்எஸ்பிசி வங்கி மீது நடவடிக்கை எடுக்கும்படி அந்நாட்டின் அரசு வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து சோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

குற்றவியல் தண்டனைச் சட்ட விதிமுறைகளின்கீழ் வங்கி மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாக ஸ்விட்சர்லாந்து வழக்குரைஞர்கள் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

தேடுதல் நடவடிக்கையில் கிடைக்கும் தகவல்களின் அடிப் படையில் வழக்கு விசாரணை மேலும் விரிவுபடுத்தப்படும் என்று வழக்குரைஞர்கள் தெரிவித் துள்ளனர்.

கடந்த காலங்களில் நிகழ்ந்த தவறுகளுக்கு வருந்துவதாக சமீபத்தில் ஹெச்எஸ்பிசி வங்கி பத்திரிகைகளில் முழு பக்க விளம்பரம் வெளியிட்டிருந்தது.

வங்கியில் கணக்கு வைத்திருந்தவர்கள் பட்டியலில் மொத்தமுள்ள 1,668 இந்தியர்களில் வரி ஏய்ப்பு செய்தவர்களாகக் கருதப்படுபவர்கள் 1,195 பேர்களாவர். இவர்களது கணக்கில் 2007-ம் ஆண்டிலிருந்து 401 கோடி டாலர் (சுமார் ரூ. 25,420 கோடி) உள்ளது தெரியவந்துள்ளது.

இருப்பினும் குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் அனைத்துமே முறை கேடானவை என்று கருதத் தேவையில்லை.

2009-ம் ஆண்டுக்குப் பிறகு வங்கி விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளதால் முறை கேடான பணம் தங்கள் நாட்டு வங்கிகளில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என ஸ்விட்சர்லாந்து அரசு தெரிவித்தது. அத்துடன் சர்வதேச விதிமுறைகளின்படி வரி ஏய்ப்பு செய்யவதற்காக தங்கள் நாட்டு வங்கிகளில் கணக்கு வைப்பதையும் அனுமதிக்க வில்லை.

வெளியான பட்டியலில் மொத்தமுள்ள 2,699 கணக்குகளில் 1,688 கணக்குகள் இந்தியர்கள் நிர்வகிப்பதாகும். இவற்றில் 1,403 கணக்குகள் 1969-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தொடங்கப்பட்டவை. இந்தக் கணக்கில் சுமார் 87 கோடி டாலர் இருப்பதாக தெரிகிறது.

இந்தியர்களின் கணக்குகளில் 51 சதவீதம் தனிநபர் கணக்குகளாகும். எஞ்சியவை வெளிநாட்டு கணக்காக நிறுவனங்களுக்காக தொடங்கப்பட்டவை. மேலும் சில கணக்குகள் வெறும் எண்களைக் கொண்டவையாகும்.

முன்னதாக ஹெச்எஸ்பிசி வங்கியின் ஜெனீவா கிளையில் கணக்கு வைத்துள்ள 628 இந்தியர்களின் பட்டியலை பிரான்ஸ் வெளியிட்டது. பிரெஞ்சு அரசுக்கு ஹெச்எஸ்பிசி வங்கி அதிகாரி அளித்த ரகசிய தகவல் அடிப்படையில் இந்த கணக்கு விவரத்தை பிரான்ஸ் வெளியிட்டது.

பல ஆண்டுகளாக தங்கள் நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் விவரத்தை வெளியிடுவதில்லை என்ற கொள்கையை ஸ்விட்சர்லாந்து அரசு பின்பற்றி வந்தது. சமீப ஆண்டுகளாக சர்வதேச நெருக்கடி காரணமாக, இந்த விவரங்களை வெளியிட ஸ்விட்சர்லாந்து முடிவு செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in