Published : 28 Feb 2015 08:42 AM
Last Updated : 28 Feb 2015 08:42 AM

இந்தியாவின் வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கை தகவல்

வரும் நிதி ஆண்டின் வளர்ச்சி 8.1 சதவீதம் முதல் 8.5 சதவீதமாக இருக்கும் என்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொரு ளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டுக்கான வளர்ச்சி 7.5 சதவீதம் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

அதிக வளர்ச்சிக்கு நான்கு விஷயங்கள் தேவை என்று இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட் டுள்ளது. முதலாவது பொருளாதார சீர்த்திருத்தங்கள் செய்வது அவசியம். மேலும் கச்சா எண்ணெய் விலை குறைவது, பணவீக்கம் குறைந்துவருவதால் நிதிகொள்கை எளிமையாக இருக்கும். இந்த காரணங்களால் வளர்ச்சி உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை குறைவதன் காரணமாக, இந்தியர்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். இதனால நுகர்வு அதிகரித்து வளர்ச்சி அதிகரிக்கும். மேலும் கச்சா எண்ணெய் விலை குறையும் போது நிறுவனங்களின் லாப வரம்பு அதிகரித்தது. மேலும் சில நிறுவனங்களின் மூலப்பொருட்களின் விலை குறைவதால் மொத்த விலை குறியீட்டு எண் குறைந்தது.

குறைவான கச்சா எண்ணெய் விலை, எளிதான கடன் மற்றும் நிதிகொள்கை, குறைவான பணவீக்கம் ஆகியவை நடுத்தர கால வளர்ச்சியை தீர்மானிக்கும். நடுத்தர காலத்தில் இந்தியாவின் நிதி நிலைமையை பொறுத்து வளர்ச்சி இருக்கும் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பணவீக்கம்

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது உள்ளிட்ட சில காரணங்களால் பணவீக்கம் குறைந்தது. ஆனால் நீண்ட கால அளவில் பணவீக்கம் குறையவேண்டும் என்றால் விவசாய துறையை ஊக்குவிக்க வேண்டும். அந்த துறைக்கு மானியம் சரியாக சேரவேண்டும், உணவு கொள்கையில் மாற்ற வேண்டும்.

பருவ மழை, கச்சா எண்ணெய் விலை, ரூபாய் மதிப்பு, அமெரிக்க நிதிக்கொள்கையில் மாற்றம் ஆகிய காரணங்களால் பணவீக்கம் உயர வாய்ப்பிருக்கிறது என்றும் பொருளாதார ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

நிதிப்பற்றாக்குறை

நடப்பு நிதி ஆண்டில் நிதிப்பற்றாக்குறையை 4.1 சதவீதத்துக்குள் குறைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை போதுமான அளவுக்கு வருவாய் அதிகரிக்கவில்லை என்றால் தேவையில்லாத செலவுகள் குறைக்கப்படும்.

வருமானத்தை அதிகரிக்க ஜிஎஸ்டி மற்றும் இதர வரி சீர்த்திருத்தங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடுத்தர கால நிதிப்பற்றாக்குறை இலக்கான 3 சதவீதத்தை இந்தியா எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்திருக்கும் திட்டங்கள்.

சாதகமற்ற சூழ்நிலை காரணமாக பல திட்டங்கள் இன்னும் கிடப்பில் இருக்கின்றன. டிசம்பர் மாத இறுதி நிலவரப்படி 8.8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் கிடப்பில் இருக்கின்றன. இதில் உற்பத்தி துறை சார்ந்த திட்டங்கள் கிடப்பில் இருக்கின்றன.

அரசு துறையை பொறுத்தவரை கட்டுமான திட்டங்கள் கிடப்பில் இருக்கின்றன. இதில் முதல் 100 பெரிய திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் 83 சதவீத திட்டங்களை நிறைவேற்றமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள்

வங்கிகளின் சூழல் மாறுவதற்கு 4 டி மாடல் என்னும் திட்டம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வங்கிகள் வைத்திருக்கும் எஸ்.எல்.ஆர் விகிதம் படிப்படியாக தளர்த்தப்படவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இதனால் வங்கிகளின் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

முன்னுரிமை கடன்கள் விகிதத்திலும் மாற்றம் செய்யவேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தவிர முன்னுரிமை கடன் பட்டியலில் இன்னும் சில துறைகளை சேர்க்கவேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நடப்பு கணக்கு பற்றாக்குறை

சர்வதேச அளவில் முக்கிய பொருட்களின் விலை மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் அடுத்த நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1 சதவீதத்துக்குள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இது 1.3 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

$ ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி சீர்திருத்தங்கள் வருமானத்தை அதிகரிக்கும்.

$ அந்நிய செலாவணி கையிருப்பை ஒரு லட்சம் கோடி டாலராக உயர்த்தவேண்டும்.

$ சீனாவுக்கு பிறகு அதிக ஏற்றம் பெற்றது இந்திய பங்குச்சந்தை.

$ மானியத்தின் மொத்த அளவு 3.77 லட்சம் கோடி ரூபாய்.

$ ‘நிதி ஆயோக்’ கூட்டாட்சி தத்துவத்தை மேலும் வலுப்படுத்தும்.

$ தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த இது சரியான நேரம்.

$ இ-காமர்ஸ் துறை அடுத்த ஐந்தாண்டுகளில் 50% வளர்ச்சி அடையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x