

சுந்தரம் பைனான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் ஆர்.எஸ்.ஏ. குழுமம் இணைந்து உருவாக்கிய கூட்டு நிறுவனம்தான் ராயல் சுந்தரம் அலையன்ஸ் இன்ஷூரன்ஸ் கம்பெனி.
இந்த நிறுவனத்தில் சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்துக்கு 74 சதவீத பங்குகளும் ஆர்.எஸ்.ஏ குழுமத்துக்கு 26 சதவீத பங்குகளும் இருக்கின்றது.
இதில் ஆர்.எஸ்.ஏ. குழுமம் தன்வசம் இருக்கும் 26 சதவீத பங்குகளையும் விற்க முடிவெடுத்திருக்கிறது. இந்த 26 சதவீத பங்குகளை 450 கோடி ரூபாய் கொடுத்து சுந்தரம் பைனான்ஸ் நிறுவனமே வாங்க முடிவெடுத்திருக்கிறது.
ராயல் சுந்தரம் அலையன்ஸ் நிறுவனம் 2000-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனம் பொதுகாப்பீட்டு துறையில் செயல்பட்டு வருகிறது. இதில் மருத்துவ காப்பீடு, மோட்டார் காப்பீடு, விபத்து காப்பீடு, பயணக்காப்பீடு உள்ளிட பல காப்பீடுகளை வழங்குகிறது.
இந்த பங்கு பரிமாற்றத்துக்கு பிறகு நிறுவனம் முழுவதும் சுந்தரம் பைனான்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் வசம் 100 சதவீத பங்குகள் இருக்கும். இணைப்புக்கு பிறகு சுந்தரம் பைனான்ஸ் வசம் மட்டும் 75.90 சதவீத பங்குகள் இருக்கும். 2014-ம் நிதி ஆண்டில் இந்த நிறுவனம் 1,437 கோடி ரூபாய் அளவுக்கு பிரீமியம் வசூல் செய்தது.
ஆர்.எஸ்.ஏ குழுமம் உலகம் முழுவதும் இருக்கும் தன்னுடைய தொழில்களை மறு ஆய்வு செய்தது. இதில் சில தொழில்களில் இருந்து விலகுவதாக அறிவித்தது. அதில் இந்தியாவும் ஒன்றாகும்.