

கடனுக்கான வட்டிக் குறைப்பு நடவடிக்கை எதையும் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளாது என்று தரச்சான்று நிறுவனமான கிரிசில் தெரிவித்துள்ளது.
முன்னர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை காலாண்டு நிதிக் கொள்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. ஆனால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நிதிக் கொள்கையை ஆய்வு செய்யலாம் என உர்ஜித் படேல் குழு ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதமே 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக் கொள்கையை வெளியிடுவதென ஆர்பிஐ முடிவு செய்தது.
இதன்படி ஏப்ரல் 1-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கை ஆய்வை வெளியிடுகிறது.பணவீக்கம் குறைந்து வரும் நிலையில் இனிமேலாவது பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று தொழில் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் வட்டிக் குறைப்பு நடவடிக்கையை ஆர்பிஐ மேற்கொள்ளாது என்று கிரிசில் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் குறியீட்டெண் அட்டவணைப்படி பணவீக்க விகிதம் 8 சதவீத அளவுக்கு 2015-ல் கட்டுப்படுத்த ஆர்பிஐ இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்டும் வரை கடனுக்கான வட்டி விகிதத்தை ஆர்பிஐ குறைக்காது என்று கிரிசில் வெளியிட்ட அறிவிப்பு தெரிவித்துள்ளது.
காய்கறிகள் விலை குறைந்ததன் காரணமாக நுகர்வோர் விலைக் குறியீட்டெண் சரிந்ததாக கிரிசில் குறிப்பிட்டுள்ளது. அதேசமயம் ஒட்டுமொத்தமாக நுகர்வோர் குறியீட்டெண் கடந்த மூன்று மாதங்களில் 3.1 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது. இருப்பினும் பிரதான நுகர்வோர் விலைக் குறியீட்டெண் இன்னமும் 8 சதவீத அளவிலேயே உள்ளதாக கிரிசில் சுட்டிக் காட்டியுள்ளது.
பருவ நிலை காரணமாக காய்கறிகளின் விலைகளில் ஏற்றத் தாழ்வு இருந்தபோதிலும், பிற உணவுப் பொருள்களின் விலை தொடர்ந்து அதிகமாகவே இருந்து வந்துள்ளது. இந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்தது. அதேபோல பொருள்களின் தேவை குறைவாகவே உள்ளது என்றும் கிரிசில் தெரிவித்துள்ளது.
இருப்பினும் எல்நினோ காரணாக பருவ நிலையில் மாறுபாடு ஏற்பட்டு மழை பெய்வதில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது உள்ளிட்ட காரணிகளையும் கிரிசில் சுட்டிக் காட்டியுள்ளது.
மிக முக்கியமான பொருள்கள் அடங்கிய பணவீக்கம் 8 சதவீத அளவிற்கு வரும் வரை ரிசர்வ் வங்கி தனது நடவடிக்கைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் மேற்கொள்ளும் என்று கிரிசில் தெரிவித்துள்ளது.
வங்கியாளர்கள் கருத்து
உணவுப் பொருள்கள் விலை குறையாதபட்சத்தில் வட்டிக் குறைப்பு நடவடிக்கையில் ஆர்பிஐ இறங்காது என்று ஹெச்எஸ்பிசி வங்கி தலைவர் நைனா லால் கித்வாய் தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் கூட 0.25 சதவீதம் வட்டியை உயர்த்தியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பணவீக்கத்தைப் பொறுத்தே ஆர்பிஐ நடவடிக்கைகள் அமையும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கித் தலைவர் கே.ஆர். காமத் தெரிவித்தார். இப்போதைய சூழலில் வட்டியை உயர்த்தாது என்று நிச்சயம் நம்பலாம் என்று பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.