

கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி 3.6 சதவீதம் என்ற நிலையில்தான் இருக்கிறது. அடுத்தகட்ட வளர்ச்சியை எதிர்நோக்கி இருக்கும் ஆட்டோ மொபைல் துறையினர் இந்த பட்ஜெட்டில்பல விஷயங்களை எதிர்பார்க்கி றார்கள்.
சர்வதேச அளவில் ஆறாவது துறையாகத் திகழும் ஆட்டோமொபைல் துறை எதிர்வரும் பட்ஜெட்டில் உற்பத்தி வரி குறைப்பினை பெரிதும் எதிர்நோக்கி காத்திருக்கிறது. கடந்த பிப்ரவரியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சமர்ப்பித்த பட்ஜெட்டில் உற்பத்தி வரி குறைக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு சமர்ப்பித்த இடைக்கால பட்ஜெட்டில் உற்பத்தி வரி குறைப்பினை டிசம்பர் வரை நீட்டித்தது. இப்போது கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு முந்தைய உற்பத்தி வரி இருக்கிறது என்பதால் உற்பத்தி வரி குறைப்பினை ஆட்டோமொபைல் துறையினர் பெரிதும் எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள். உற்பத்தி வரி பழைய நிலைமைக்கு சென்றுவிட்டதால் அனைத்து விதமான வாகனங்களின் விலையும் 4 முதல் 6 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. வரியைக் குறைப்பதன் மூலம் விற்பனையைப் பெருக்க முடியும் என்று இத்துறை தலைவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
தவிர கட்டுமானத்துறைக்கு செலவிடும் தொகையை மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.இந்த துறையில் செலவிடுவதன் மூலம் கனரக வாகனங்களுக்கு தேவை அதிகரிக்க வாய்ப்பு இருப்பது மட்டுமல்லாமல், ஆட்டோ உதிரி பாகங்களுக்கான தேவையும் உயரும் என்று இத் துறை எதிர்பார்க்கிறது.
மேலும், சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்த வேண்டும், பழைய கார்களை அழிப்பதற்கு புதிய திட்டங்கள் தேவை எனவும், இதன் மூலம் சுற்றுப்புற சூழலை பாதுகாப்பது, எரிபொருள் மீதம் ஆகும் எனவும் ஆட்டோ துறை எதிர்பார்க்கிறது.
பேட்டரியில் இயங்கும் கார்களுக்கான சலுகைகள் தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலையில் அது அவசியமானது என்று மஹிந்திரா நிறுவனத்தின் செயல் இயக்குநர் பவன் கோயங்கா தெரிவித்திருக்கிறார்.
டயர் துறை
நேரடியாக டயர்களை இறக்குமதி செய்வதற்கு அதிக இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என்று இந்த துறை எதிர்பார்க்கிறது. இதன் மூலம் உள்நாட்டு டயர் உற்பத்தி நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட முடியும் என்று இந்த துறை டயர் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
சைக்கிள்
சைக்கிளுக்கு 2 சதவீத அளவுக்கு வரி விதிக்கப்படுகிறது. இந்த உற்பத்தி வரியை முழுவதுமாக நீக்க வேண்டும் என்று சைக்கிள் தயாரிப்பார்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
இந்த உற்பத்தி வரி இந்த துறையை கடுமையாக பாதிக்கிறது. தவிர சீனாவில் இருந்து இறக்குமதியாகும் சைக்கிள்கள் இந்தியாவில் தயாராகும் சைக்கிள்களைவிட 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை குறைவாக இருக்கிறது. மேலும் இலங்கை, வங்க தேசம் ஆகிய நாடுகளில் இறக்குமதியாகும் சைக்கிள்கள் இந்த துறையை பாதிக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்கள்.