தொடர் சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை

தொடர் சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை
Updated on
1 min read

கடந்த 7 வர்த்தக தினங்களாக சரிவைச் சந்தித்து வந்த பங்குச் சந்தைகள் டெல்லி சட்டப் பேரவை முடிவுக்குப் பிறகு எழுச்சி பெற்றன. வர்த்தக முடிவில் பங்குச் சந்தை 128 புள்ளிகள் அதிகரித்ததில் குறியீட்டெண் 28355 புள்ளிகளாக உயர்ந்தது. ஒரு கட்டத்தில் தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் 8500 புள்ளிகளைக் கடந்தது. வர்த்தகம் முடிவில் 39 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 8565 புள்ளிகளாக நிலைபெற்றது.

ஆட்டோமொபைல், வங்கித்துறை மற்றும் உலோக பங்குகளை வாங்கும் போக்கு அதிகமாக காணப்பட்டதும் பங்குச் சந்தை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.

முக்கியமான 30 முன்னணி நிறுவனப் பங்குகளில் அதிகபட்சமாக டாடா மோட்டார்ஸ் பங்கு 4 சதவீதம் அதிகரித்தது. இதற்கு அடுத்தபடியாக ஐசிஐசிஐ வங்கிப் பங்கு 3 சதவீதம் உயர்ந்தது.

டாடா ஸ்டீல், டாடா பவர், ஹெச்டிஎப்சி வங்கி, கெயில், கோல் இந்தியா, இன்போசிஸ், த ஐடிசி லார்சன் அண்ட் டூப்ரோ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, எஸ்பிஐ, ஸ்டெர்லைட், பிஹெச்இஎல் ஆகிய நிறுவனப் பங்குகளும் கணிசமான அளவுக்கு உயர்ந்தன.

அதேசமயம் ஹெச்டிஎப்சி, என்டிபிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி, சன் பார்மா, ஹிந்துஸ்தான் யுனி லீவர் உள்ளிட்ட 12 முக்கிய நிறுவனப் பங்குகளின் விலைகள் வீழ்ச்சியடைந்தன.

டெல்லி சட்டப் பேரவை தேர்தல் கணிப்புகள் பாஜக-வுக்கு எதிராக அமைந்ததால் திங்கள்கிழமை பங்குச் சந்தையில் 490 புள்ளிகள் வரை சரிவு காணப்பட்டது. திங்களன்று மட்டும் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ. 660 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர்.

ஒரு வாரமாக பங்குச் சந்தையில் நிலவி வந்த ஸ்திரமற்ற நிலைக்கு முதலீட்டாளர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

ஆசிய பிராந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றம் மற்றும் இறக்க நிலை நீடித்தது.

மும்பை பங்குச் சந்தையில் டாடா ஸ்டீல் 2.8%, எஸ்பிஐ 2.6%, ஸ்டெர்லைட் 2.6%, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 2.5%, கெயில் இந்தியா 2.2%, கோல் இந்தியா 2.1% அளவுக்கு உயர்ந்தன.

பங்குச் சந்தையில் மொத்தம் 1,402 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. 1,333 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. மொத்த பங்கு வர்த்தகம் ரூ. 3,883 கோடியாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in