ஐரோப்பிய சந்தையில் பேட்டரி கார் அறிமுகம்: மஹிந்திரா திட்டம்

ஐரோப்பிய சந்தையில் பேட்டரி கார் அறிமுகம்: மஹிந்திரா திட்டம்
Updated on
1 min read

ஆட்டோமொபைல் துறையில் முன்னணியில் உள்ள மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் பேட்டரியில் இயங்கும் கார்களை அடுத்த 6 மாதத்திற்குள் ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இங்கு பேட்டரி கார்களுக்கு மிகுந்த கிராக்கி நிலவுகிறது. இதைக் கருத்தில் கொண்டு பேட்டரியில் செயல்படும் கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமைச் செயலர் பிரவீண் ஷா தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை பூர்த்தி செய்யும் வகையில் தங்களது கார் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

பெங்களூருவைச் சேர்ந்த மெய்னி குழுமத்தின் ரேவா பேட்டரி கார் நிறுவனத்தை மஹிந்திரா குழுமம் கையகப்படுத்தியது. 2013-ம் ஆண்டு இந்தியாவில் இ20 என்ற பெயரிலான பேட்டரி கார்களை அறிமுகப்படுத்தியது. இருப்பினும் இந்த காருக்கு இந்தியச் சந்தையில் பெருமளவில் வரவேற்பில்லை. இதனால் ஆண்டுக்கு ஆயிரம் கார்கள் மட்டுமே விற்பனை ஆவதாக ஷா தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இத்தகைய பேட்டரி கார்கள் அண்டை நாடான பூடானில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இங்கிலாந்து, ஐஸ்லாந்து, நார்வே ஆகிய பகுதிகளில் பேட்டரி கார்களுக்கு அதிக கிராக்கி நிலவுவதாக அவர் கூறினார்.

தங்கள் நிறுவனத்தின் இ20 பேட்டரி கார் தவிர `ஹாலோ’ என்ற பெயரிலான- ஸ்போர்ட்ஸ் மாடல் கார் தயாரிப்பதற்கான முயற்சிகளில் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஹாலோ பேட்டரி கார் கடந்த ஆண்டு ஆட்டோ கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த கார் 8 விநாடிகளில் 100 கி.மீ. வேகம் செல்லும். முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 200 கி.மீ. தூரம் ஒடக் கூடியது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in