Published : 28 Feb 2015 08:55 AM
Last Updated : 28 Feb 2015 08:55 AM

ஐந்திருந்தால் அமோக வெற்றி!

என்ன தான் தொழிலதிபர்களை தமிழ் சினிமாக்கள் வில்லனாய் சித்தரித்தாலும், அரசியல்வாதிகள் பிசினஸ்மேன்களை அமெரிக்க ஏகாதிபத்திய கைக்கூலிகள்’ என்று வர்ணித்தாலும், பலருக்கும் பிசினஸ் பண்ணத்தான் ஆசை இருக்கிறது.

பி அண்ட் ஜி (பிராக்டர் அண்ட் கேம்பிள்) லெவலுக்கு இல்லையென்றாலும் எதாவது தொழில் தொடங்கவேண்டும் என்ற விருப்பம் இருக்கவே இருக்கிறது. ஆயிரம் சொல்லுங்கள், பிசினஸ்மேன் என்ற அடைமொழி அடை அவியலாய் இனிக்கத்தான் செய்கிறது.

சரி, தொழில் தொடங்கி வெற்றி பெற என்ன வேண்டும்?

அசாத்திய தில், அபரிமிதமான லக், அதிகளவு பணம், அமோக ஆதரவு அனைத்தும் வேண்டும். இதைப் பெறுவது எப்படி என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டு இந்த கட்டுரையை படிப்பவர் எனில், ஐ ஆம் சாரி, இக்கட்டுரை இதைப் பற்றியதல்ல.

உங்களிடம் தொழில் துவங்கும் அளவிற்கு ஒரு ஐடியா இருந்து, அந்த ஐடியா சரியா தவறா என்று சரி பார்ப்பது எப்படி என்ற சந்தேகம் இருந்தால், அந்த ஐடியா பிசினஸ் துவங்க ஏதுவானதா, ஏமாற்றம் அளிக்குமா என்ற ஐயம் இருந்தால், மேலே படிக்கவும். இதைத்தான் பத்தி பிரித்துப் பார்க்கப் போகிறோம்.

தொழில் துவங்க நீங்கள் வைத்திருக் கும் ஐடியாவை செயல்படுத்தும் முன் நான்கு ‘எஸ்’ (S) இருக்கிறதா பாருங்கள் என்கிறார் ‘பீட்டர் காஸ்கா’.

Entrepreneur என்ற பத்திரிகையில் பிசினஸ் ஐடியாவிற்கு நான்கு எஸ்களின் ஆசி பரிபூரணமாய் இருந்தால் பயமில்லாமல் பிசினஸ் பண்ணலாம் என்று விளக்குகிறார்.

Solution (சொல்யூஷன்)

பிசினஸ் ஐடியாவின் அடிநாதம் இது. வாடிக்கையாளருக்கு ஏதோ ஒரு ஆசை, பயம், ஆபத்து, நம்பிக்கை, எண்ணம் இருக்கலாம். அது நிறைவேறாத தேவையாக இருக்கலாம். அல்லது பாதி மட்டும் நிறைவேறி மீதி நிறைவேறாமல் நிற்கலாம். இதை ‘பெயின் பாயின்ட்ஸ்’ (Pain points) என்பார்கள்.

இதற்கு தீர்வளிக்கும் வகையில் உங்கள் ஐடியா இருக்கவேண்டும். இருந்தே தீரவேண்டும். வாடிக்கையாளர் பெயின் பாயிண்டிற்கு சொல்யூஷனாய் உங்கள் ஐடியா இருந்தால்தானே உங்கள் பொருள் அவருக்குப் பயன்படும். அப்பொழுது தானே உங்கள் பொருளை வாங்குவார்.

ஒரு காலத்தில், போகும் இடமெல்லாம் போன் பேச எஸ்டிடி பூத்தை தேடவேண்டியிருந்தது ஒரு பெயின் பாயிண்ட். செல்போன் அதற்கு சொல்யூஷனாய் அமைந்தது. ட்ரிங் ட்ரிங் என்று வெற்றி பெற்றது. பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகளுக்கு மடக்கென்று சமைத்து படக்கென்று பரிமாற பதார்த்தம் இல்லாதிருந்தது ஒரு பெயின் பாயிண்ட். ‘மேகி’ அதற்கு சொல்யூஷனாய் அமைந்தது. டூ மினிட்ஸில் வெற்றி பெற்றது.

அதற்காக உங்கள் சொல்யூஷன் புதியதாக, அதுவரை மார்க்கெட் பார்த்திராத புதிய பொருளாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை. ஏற்கெனவே மக்கள் உபயோகித்து வரும் பொருளில் கூட பெயின் பாயின்ட்ஸ் இருக்கலாம். அவர்கள் தேவையை முழுமையாக தீர்க்காமல் இருக்கலாம். அந்த தேவையை முழுமையாய் பூர்த்தி செய்யும் சொல்யூஷனாக உங்கள் ஐடியா இருந்தாலும் வெற்றி பெறலாம்.

உங்கள் ஐடியா வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்யாததாக இருந்தாலோ, ஏற்கனவே வாடிக்கை யாளர் தேவையை முழுமையாய் பூர்த்தி செய்யும் பொருளைப் போலவே இருந்தாலோ அதை குப்பையில் போடுங்கள். அந்த ஐடியாவை நம்பி இறங்கினால் உங்கள் தொழிலும் அதே குப்பைத் தொட்டிக்குத் தான் போகும். உஷார்.

System (சிஸ்டம்)

சொல்யூஷன் மட்டும் இருந்து பயனில்லை. சொல்யூஷனுக்கு உண் டான பொருளையோ சேவையையோ குறையின்றி தயாரித்து வாடிக்கை யாளருக்கு முறையாக அளிக்க முடியுமா என்பதும் முக்கியம்.

சொல்யூஷனை முழுவதுமாக வாடிக்கையாளருக்கு அளிக்க முடியவில்லை என்றால் மற்றவர்கள் துணை கொண்டு அளிக்கமுடியுமா என்று சிந்தித்து செயலில் இறங்குங்கள். பாட்டிலில் மட்டுமே ஷாம்பு விற்ற காலத்தில் அதை முதலில் விலை குறைந்த சாஷேவில் விற்கும் ஐடியாவை செயல்படுத்தியது ‘வெல்வெட்’ ஷாம்பு. சிறிய கம்பெனியான தன்னால் நாடெங்குமுள்ள லட்சக்கணக்கான கடைகளுக்கு சென்று விற்க முடியாது என்று உணர்ந்து

`கோத்ரெஜ்’ கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்து அவர்களின் பரந்த விரிந்த சேல்ஸ் நெட்வர்க் மூலம் பிராண்டை நாடெங்கிலும் உள்ள கடைகளை சென்றடைந்தது.

நல்ல ஐடியா மட்டுமே போறாது. அதை தயாரித்து, விற்க நிர்வாக அமைப்பு அவசியம். சரியான சிஸ்டம் இல்லாத கம்பெனி வெற்றி பெறாது. ஒழுங்கான நிர்வாக அமைப்பில்லாமல் எந்த ஐடியாவையும் பிசினஸ் ஆக்காதீர் கள். பிசினஸ் அதன் பாரத்திலேயே விழும். உங்கள் ஐடியாவை வேறு ஒருவர் காப்பி அடித்து பிசினஸ் துவங்கி சக்கைப் போடு போடுவார். நீங்களே அவரிடம் கைகட்டி வேலைக்குச் சேர வேண்டி வரலாம். தேவையா இது.

Strategy (ஸ்ட்ரேடஜி)

எங்கு செல்லவேண்டும் என்று முடி வெடுத்து அங்கு எப்படி செல்லவேண்டும் என்றும் தீர்மானிக்கவேண்டும். இதற்குத் தேவை உத்தி, ஸ்ட்ரேடஜி. உங்கள் ஐடியாவை பொருளாக்க போதிய பணத்தை ரெடி செய்து விட்டீர்களா? பிசினஸ் பிளான் தயாரித்தீர்களா?

ஐடியாவை எப்படி பிராண்டாக்குவது, செலவினங்கள் என்னென்ன, இலக்கை நிர்ணயம் செய்வது, எதிர்பார்த்த லாப நஷ்ட கணக்கு போன்ற அனைத்தையும் கணக்கிடத் தேவை பிசினஸ் பிளான். பாங்கிலோ, வென்சர் கேபிடல் ஃபண்டிடமோ கடன் பெறுவதற்கு மட்டுமல்ல, உங்கள் பிசினஸை வழிநடத்தவும் கூட பிசினஸ் பிளான் அவசியம்.

தெளிவான உத்தியில்லாமல் பிசினஸ் துவங்குவது பாவம். எந்த கங்கையில் குளித்தாலும் அந்த பாவம் போகாது. நஷ்டமும் தீராது. ஐடியாவை பொருளாக்கி, பிராண்டாக்கி, பிசினஸாக்கி செயல்படுத்தும் போது `பிளான் பி’ ஒன்றையும் வடிவமைத்து வையுங்கள். முதல் உத்தி வேலை செய்யவில்லையென்றால் அதன் பின் புதிய உத்தியை தேடி அலையமுடியாது. பேக் அப் பிளான் தேவை. இது தான் பிளான் பி. நான்கு டயர்கள் இருந்தும் ஸ்டெப்னி வைத்து கார் ஓட்டுவதைப் போல.

Spine (ஸ்பைன்)

பிசினஸ் ஆரம்பிப்பது ஊசியில் நூல் கோர்ப்பது போல. எடுத்த மாத்திரத்திலேயே ஊசி துவாரத்தில் நூலை செலுத்தமுடியாது. நான்கு முறை கையைக் குத்திக் கொண்டு முயலவேண்டியிருக்கிறது. குத்துகிறதே என்று கவலைப்பட்டால் கிழிந்த சட்டையைத் தான் போட்டுக்கொண்டு அலையவேண்டும். பிச்சைக்காரனைப் போல் தெரிவீர்கள். பரவாயில்லையா!

ஆரம்பித்த முதல் நாள் முதலே பிசினஸ் பிய்த்துக்கொண்டு பறக்காது. பிரயத்தனப்படவேண்டும். போராடவேண்டும். இதற்குத் தேவை தைரியம், போராடும் குணம், மன உறுதி. முதுகெலும்பில்லாதவன் முன்னேற முடியாது. முதுகெலும்பைத் தான் ஆங்கிலத்தில் ஸ்பைன் என்பார்கள்.

பல்பை கண்டுபிடிக்கும் முயற்சியில் தாமஸ் ஆல்வா எடிசன் சுமார் இரண்டாயிரம் முறை தோற்றார். இத்தனை முறை தோற்று விட்டீர்களே, இது தேவையா என்று கேட்ட போது அவர் சொன்னார்: ‘நான் தோற்கவில்லை. பல்ப் செய்ய தேவையில்லாத இரண்டாயிரம் முறைகளை கண்டுபிடித்தேன். அதை சரியாய் செய்யும் ஒரே வழியையும் கண்டுபிடித்துவிட்டேன்.’

நல்ல ஐடியா கொண்டு தொழில் துவங்க நினைத்தால் எடிசன் கூறியதை டேபிளில் எழுதி வையுங்கள். எடிசனைப் போல் போராடுங்கள். நான்கு ‘S’ இருக்கிறதா என்று செக் செய்து உங்கள் ஐடியாவை பிசினஸ் ஆக்குங்கள். அப்படிச் செய்தால் தானாக வந்து சேரும் ஐந்தாவது ‘S’….. Success!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x