

பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் 2.5% உயர்வு
பஞ்சாப் நேஷனல் வங்கி டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 2.5 சதவீதம் உயர்ந்து 774.6 கோடியாக உள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் 755.41 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 5.97 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 4.96 சதவீதமாக இருந்தது. இதே போல நிகர வாராக்கடனும் 3.82 சதவீதமாக அதிகரித்தது.
டிசம்பர் காலாண்டில் மொத்த வருமானம் 12,904 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 11,922 கோடி ரூபாயாக இருந்தது.
நிறுவனத்தின் செயல்பாடுகள் மோசமாக இருந்ததால் பங்குகளில் விலையில் கடும் சரிவு ஏற்பட்டது. வர்த்தகத்தின் முடிவில் 7.79 சதவீதம் சரிந்து 176 ரூபாயில் முடிவடைந்தது.
இந்தியன் வங்கி நிகர லாபம் ரூ.278 கோடி
இந்தியன் வங்கியின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 5 சதவீதம் உயர்ந்து 278 கோடி ரூபாயாக இருக்கிறது.
கடந்த வருடம் இதே காலாண்டில் 264.5 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் 4,112 கோடி ரூபாயிலிருந்து 4,321 கோடி ரூபாயாக உயர்ந்தது.
நிகர வட்டி வரம்பு 2.47 சதவீதமாக இருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 4.52 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 2.74 சதவீதமாகவும் இருக்கிறது.
முடிவுகள் சந்தை எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லாததால் கடந்த இரண்டு நாட்களில் 6 சதவீத அளவுக்கு இந்த பங்கு சரிந்தது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 182 ரூபாயில் முடிவடைந்தது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிகரலாபம் 31% உயர்வு
டிசம்பர் காலாண்டில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 31 சதவீதம் உயர்ந்து 90.18 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிகர லாபம் 68.80 கோடி ரூபாயாக இருந்தது.
நிகர விற்பனையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 2,034 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது 2,612 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
மேலும் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான வேணு ஸ்ரீனிவாசனின் பதவிக் காலம் மேலும் ஐந்தாண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 0.75 பைசா வழங்க இயக்குநர் குழு முடிவெடுத்திருக்கிறது. இந்த தொகை வரும் பிப்ரவரி 13க்கு பிறகு வழங்கப்படும்.