நேரம் நல்ல நேரம்

நேரம் நல்ல நேரம்
Updated on
2 min read

ஒவ்வொரு முறை ரயில் நிலையம் சென்று திரும்புகையிலும் கவனிப்பேன். ரயில் பாதி பிளாட்பாரம் தாண்டும்போது அதன் கடைசி பெட்டி பெருக்கல் குறியை பார்த்தவாறு அதை பிடிக்க குறைந்தது நாலைந்து பேராவது ஓடிக் கொண்டிருப்பார்கள். சிலர் அதில் வெற்றியும் கொள்வார்கள்.

ரயிலோ, பஸ்ஸோ, விமானமோ அதை கடைசி நிமிட கிளைமாக்ஸில் ஏறுவதை வழக்கமாக கொண்டுள்ள நண்பர் ஒருவருடன் பயணம் செய்ய நேர்ந்தது. என் அவசரத்தனம் அவரிடம் முற்றிலும் தோற்றுப்போய், கடைசிக் காட்சியில் மனம் மாறி கணவனுடன் சேர ஓடும் தமிழ் பட கதாநாயகி போல ஓட்டமாய் ஓட நேர்ந்தது.

படித்துப் படித்து சீக்கிரம் கிளம்பலாம் என்றாலும் அதை தாமதப்படுத்தி வண்டியை விட்டுப் பிடிப்பதில் தான் மனுஷனுக்கு என்ன சுகம்? அட்ரினலின் சுரக்கணும். வாழ்க்கையில் த்ரில் வேண்டும். பதைபதைப்பும் பின் கிளர்ச்சியாய் ஒரு வெற்றியும் கிக் கொடுக்கிறது இல்லையா? அதை இழக்கலாமா?

இவர் இப்படி என்றால் என் உறவினர் ஒருவர் இருக்கிறார். அவர் 9 மணி வண்டிக்கு ஏழு மணிக்கே தவம் கிடப்பார் பிளாட்பாரத்தில். கல்யாண ரிசப்ஷன் என்றால் கல்யாண கோஷ்டிகள் வருவதற்கு முன்னரே வெயில் தாழ்வதற்கு முன் பரிசுப் பொருளுடன் போய் நிற்பார். ஆனால் லேட்டாக வந்த மாதிரியே ஒரு முக பாவம் வைத்திருப்பார்.

நேர நிர்வாகம் பற்றி யோசிக்கும் போதெல்லாம் அது எவ்வளவு தவறான சொல்லாடல் என்று தோன்றும். நேரத்தை யாரும் நிர்வாகம் செய்ய முடியாது. நம்மைத்தான் நாம் நிர்வாகம் செய்ய முடியும். அதுவும் முடிந்தால்! நம்மை நாம் எப்படி நிர்வாகம் செய்கிறோம் என்பதற்கு நேரம் ஒரு சாட்சி அவ்வளவுதான்.

மனம்தான் நேரத்தை தன் இஷ்டத்திற்கு வளைத்து வளைத்து கையாள்கிறது. காதலிக்காக பல மணி நேரக் காத்திருப்பு, ஆள் வந்ததும் நொடியாய்த் தெரிகிறது. ஒத்துவராத மேலதிகாரிக்காக ஒரு சில நிமிடங்கள் காத்திருக்கும்போது அது பாதி வாழ்க்கை போனதுபோல ஆயாசமாக இருக்கிறது. காலத்திற்கு இப்படி ஒரு ஜவ்வுத்தன்மையை மனம் கொடுக்கிறது.

மாரடைப்பு வருபவர்களுக்கு என்று ஒரு ஆளுமை இருப்பதாகவும் இவர்களை டைப்- ஏ பர்சனாலிடி என்றும் மருத்துவ உளவியல் கூறுகிறது. இவர்கள் என்றும் நேர நெருக்கடியை உணர்பவர்கள், சீக்கிரம் ஜெயிக்கணும் என்று நினைப்பவர்கள், ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்ய முயல்பவர்கள். இன்றைய நம் வாழ்க்கை முறைக்கும் இருதய நோய்க்கும் தொடர்பு எல்லோரும் அறிந்ததே. யோசித்துப் பார்த்தால் இந்த ஆளுமைப் பண்புகள் நிறுவனங்கள் ஊக்குவிப்பவை.

ஆனால் டைப் ஏ வெற்றிக்கு உத்தரவாதமில்லை. மாறாக, அவசரமில்லாத, போட்டி உணர்வு இல்லாமல், ஒரு வேலையை ஒரு நேரத்தில் தெளிவாக செய்யும் டைப்- பி பர்சனாலிடிகளும் சாதிக்கிறார்கள் என்றும் மருத்துவ உளவியல் கூறுகிறது.

நாம் எப்படி நேரத்தைக் கையாள்கிறோம் என்பதில் நம் திறமை மட்டுமல்ல ஆரோக்கியமும் அடங்கியிருக்கிறது.அதனால் நேரத்தை கட்டுபடுத்த நினைக்காமல், நம் உடல், மனம், உறவுகள், வேலை இவைகளை கட்டுப்படுத்தினால் அது நாம் வாழும் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிக்கும்.

தொழில் உலகில் நேரம்தான் செல்வம். அதனால் குறைந்த நேர முதலீட்டில் நிறைய பலன்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அதனால்தான் எல்லா வேலைகளும் நேரத்துடனும் சம்பளத்துடனும் கணக்கிடப்படுகிறது. நேர விரயம் செல்வ விரயம் என்ற கணக்கு வந்தது இப்படித்தான். இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் வேலை நேரத்தில் நிறைய விரயங்களை கண்டு கொள்ளலாம்.

8 மணி நேர வேலை நேரத்தில் எவ்வளவு நேரம் நிஜமான ஆக்கபூர்வ வேலை என்றால் தொழிலாளர்களை விட வெள்ளை சட்டை எக்ஸ்யுக்யூட்டிவ்கள் தான் அதிக விரயம் செய்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு நிறுவனம் தன் அலுவலகத்திற்கு வரும் பார்வையாளர்களின் வருடாந்தர எண்ணிக்கையை கணக்கிட்டது. அவர்களின் சராசரி காத்திருப்பு நேரம், சந்திக்கும் நேரம், சந்திக்கும் விஷயம், சந்திப்பால் பலன் என எல்லாம் கணக்கிட்டதில் திடுக்கிட்டது.

காத்திருப்பு நேரத்தினால் சம்பந்தப்பட்டவர்களின் நேரமும் உற்பத்தித்திறனும் விரயமாவது ஒரு புறம். தேவையில்லாத சந்திப்புகளாலும், நிறைவு பெறாத விஷயங்களுக்காகவும் அந்த நிறுவன மேலாளர்கள் செலவு செய்த நேரத்தையும் அதற்கான சம்பள மதிப்பையும் கணக்கிட்டதில் சென்ற ஆண்டு மட்டும் ஒன்றரை கோடி ரூபாய் என்று தெரிய வந்தது.

இந்த பார்வையாளர்களின் தகவல்களைக் கணிப்பதற்கே ஒரு மென்பொருள் தயார் செய்து வெற்றிகரமாக நிறுவனங் களுக்கு விற்று வருகிறார் என் பெங்களூர் நண்பர் ஒருவர். அரசு நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் இவைகளில் பார்வையாளர்கள் காத்திருப்பு மிக மிக அதிகம்.

இது தவிர பிரயாணங்களில் வாகனங்களுக்காக காத்திருத்தல், சாலையில் நெரிசலில் காத்திருத்தல் என கணக்கிட்டுப் பார்த்தால் விரயக் கணக்கு தலை சுற்றும் அளவு இருக்கும், செலவு என்றால் சுருக்கென உணரும் நம் மக்கள் வருமானம் இழப்பு/ வாய்ப்பு இழப்பு என்றால் கண்டு கொள்வதில்லை.

பொழுதுபோக்கு என்ற சொல்லே நேர விரயம்தான். பொழுதை ஆக்கும் விளையாட்டு, நாடகம், இலக்கியம், கலை எல்லாம் உங்கள் வாழ்க்கைக்கு மதிப்பு சேர்ப்பவை. ஆனால், என்ன செய்வது என்று தெரியாமல் டி.வி, ஃபேஸ்புக், மொபைல் கேம் என எல்லா இலக்கில்லா பொழுதுபோக்குகளும் கண்டிப்பாக விரயங்கள்தான். வளர்ந்த நாடுகள் அனைத்திலும் நேரத்தை மதிக்கிறார்கள். தங்கள் நேரமாகட்டும். பிறர் நேரமாகட்டும். வளரும் நாடான நாம் நேரத்தை மதிப்போம். உலகம் நம்மை மதிக்கும்!

gemba.karthikeyan@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in