Published : 19 Feb 2015 13:41 pm

Updated : 19 Feb 2015 19:34 pm

 

Published : 19 Feb 2015 01:41 PM
Last Updated : 19 Feb 2015 07:34 PM

நாங்கள் போர் புரிவது இஸ்லாத்துக்கு எதிராக அல்ல: ஒபாமா

"நாங்கள் இஸ்லாத்துக்கு எதிராக போர் புரியவில்லை. எங்களது போர் இஸ்லாத்தின் மரபைத் திரித்தவர்களுக்கு எதிரானது" என்று அமெரிக்க அதிபர் ஒபாமா பேசினார்.

வெள்ளை மாளிகையில் புதன்கிழமை நடந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கான உச்சி மாநாட்டில்தான் ஒபாமா இவ்வாறு பேசியுள்ளார்.

இந்தியா உட்பட 60 நாடுகள் பங்கேற்கும் இந்த மாநாடு மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

ஒபாமா பேசியது:

"நாங்கள் இஸ்லாத்துக்கு எதிராக போர் புரியவில்லை. எங்களது போர் இஸ்லாத்தின் மரபைத் திரித்தவர்களுக்கு எதிரானது. ஐ.எஸ்.ஐ.எஸ்., அல் காய்தா போன்ற அமைப்பினர் இஸ்லாத்தை பாதுகாக்கும் போராளிகள் என்ற போர்வையில் தங்களுக்கென அடையாளத்தை, அங்கீகாரத்தை தேடிக் கொள்ள கடும் பிரயத்தனம் செய்து வருகின்றனர்.

இதன் காரணமாகவே ஐ.எஸ்.ஐ.எஸ். இஸ்லாமிய நாடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவும் ஏனைய பிற மேற்கத்திய நாடுகளும் இஸ்லாத்துக்கு எதிராகப் போர் புரிந்து வருவதாகவும் அவதூறு பரப்பி வருகிறது. இதைக் கூறிதான் ஐ.எஸ். படைக்கு ஆள் திரட்டப்படுகின்றனர். இளைஞர்கள் இப்படித்தான் மூளைச் சலவை செய்யப்படுகின்றனர்.

முஸ்லிம் சமூகத்துக்கு வெளியில் இருப்பவர்கள் தீவிரவாதிகளின் பொய் பிரச்சாரத்தை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். இஸ்லாமும் - மேற்கத்திய நாடுகளும் எதிரும் புதிருமானவை, நவீன வாழ்வியலும் இஸ்லாமும் ஒத்துப்போகாதவை போன்ற அவதூறு பிரச்சாரங்களைப் புறந்தள்ள வேண்டும்.

அவர்கள் முன்வைக்கும் எந்த ஒரு வாதத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது. ஏனெனில் அவர்கள் சொல்வது பொய். அவர்கள் எதிர்பார்க்கும் அங்கீகாரத்தை ஒருபோதும் நாம் அளித்துவிடக் கூடாது. அவர்கள் மதத் தலைவர்கள் அல்ல வெறும் தீவிரவாதிகள்.

ஐ.எஸ்.ஐ.எஸ்., அல் காய்தா அமைப்புகள் இஸ்லாம் கோட்பாடுகளை அடிக்கடி மேற்கோள் காட்டுகின்றன. எனவே, தீவிரவாதிகளை ஒடுக்குவதில் முஸ்லிம் சமுதாயத்துக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது என நம்புகிறேன்.

தீவிரவாதிகளின் சித்தாந்தத்தை உலகம் முழுதும் உள்ள பலநூறு கோடி இஸ்லாமியர்களே நிராகரித்துள்ளனர். எனவே இஸ்லாமியர்களுக்காக தாங்கள் குரல் கொடுப்பதாக அவர்கள் நினைத்துக் கொள்வது தவறான பார்வை. அவர்கள் இஸ்லாத்தை எந்த வகையிலும் பிரதிநிதுத்துவம் செய்யவில்லை.

அவர்கள் கடவுளின் பெயரால் அப்பாவிகளை கொலை செய்யும் பைத்தியக்காரர்களே. கடவுளின் பெயரால் அப்பாவிகளை கொல்பவர்கள் கிறிஸ்துவம், யூதம், புத்தமதம், இந்து மதம் என எந்த மதத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க முடியாது. பயங்கரவாதத்துக்கு எந்த ஒரு மதமும் பொறுப்பல்ல. ஆனால், மத அடையாளத்தைச் சுமக்கும் சிலரே வன்முறைக்கும், பயங்கரவாதத்துக்கும் காரணமானவர்களாவர்.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைப் போன்ற தீவிரவாத அமைப்புகள் இஸ்லாத்தின் அடையாளம் அல்ல என என்னைப் போன்றோர் நம்புவது போல முஸ்லிம் தலைவர்களும் நம்ப வேண்டும். மேற்கத்திய நாடுகள் இஸ்லாத்தை ஒடுக்க முனைப்புடன் இருக்கின்றன என தவறான பார்வையை விட்டொழிக்க வேண்டும். மேற்கத்திய கலாச்சாரத்துக்கும், இஸ்லாத்துக்கும் இடையே இயல்பான பகை ஏதுமில்லை என புரிந்து கொள்ள வேண்டும்.

ஐ.எஸ்., அல்குவைதா அமைப்புகள் சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன. அப்பாவிகளுக்கு எதிரான இந்த அமைப்புகளின் தாக்குதல் எவ்வகையிலும் இஸ்லாத்தையோ அல்லது முஸ்லிம்களையோ பாதுகாக்காது என்பதை அனைவருமே வெளிப்படையாகப் பேச வேண்டும்.

தீவிரவாதத்தால் சிரியா, இராக்கை ஐ.எஸ்.ஐ.எஸ். சீர்குலைத்து வருகிறது. அப்பாவி மக்கள் தலை துண்டிக்கப்பட்டு, உயிருடன் எரித்துக் கொல்லப்படுகின்றனர். இது மன்னிக்க முடியாத கொடூரம்.

ஒட்டாவா, சிட்னி, பாரீஸ், கோபென்ஹேகன் என பல இடங்களில் தீவிரவாதிகள் கோரத் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். சவால் நிறைந்த இந்தச் சூழலில், அமெரிக்கா முழு பலத்துடன் களத்தில் இறங்கியுள்ளது. எங்களது சகாக்களுடன் இணைந்து பயங்கரவாதத்தை வேரறுக்க திட்டம் தீட்டி வருகிறோம்.

பயங்கரவாதிகளை எதிர்கொள்வதில் மிகப் பெரிய சவால் இருக்கிறது. பயங்கரவாதிகள் அவ்வப்போது தங்கள் தாக்குதல் வழிமுறைகளை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, கூடுதல் கண்காணிப்பு தேவைப்படுகிறது. ஆனால், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தப் போரில் வெற்றி பெறுவோம் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உலக நாடுகளின் ஒத்துழைப்பு இந்த நம்பிக்கையை மேலும் பலப்படுத்தியுள்ளது.

ஒபாமாபயங்கரவாதம்மதம்ஐ.எஸ்.ஐ.எஸ். அல்குவைதா

You May Like

More From This Category

More From this Author