

ஸ்மார்ட்போன் விற்பனையில் இந்திய சந்தையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் பொது பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) தயாராகி வருகிறது. இந்த பங்கு வெளியீடு மூலம் 50 கோடி டாலர் திரட்ட முடிவு செய்திருக்கிறது.
இதற்கான ஏற்பாடுகள் வரும் ஏப்ரல் மாதத்துக்கு பிறகு ஆரம்பிக்கப்படும் என்று தெரிகிறது. 2008-ம் ஆண்டு ஸ்மார்ட்போன் விற்பனையில் நுழைந்தது மைக்ரோமேக்ஸ். இந்நிறுவனம் சிறிய அளவில் தன்னிடம் இருக்கும் பங்குகளை விற்கும் என தெரிகிறது. ஐபிஓ வெளியிடும் பணியை கோல்ட்மேன் சாக்ஸ் அல்லது மார்கன் ஸ்டான்லி நிறுவனத்திடம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தன்னு டைய செயல்பாட்டு லாபத்தில் 14 மடங்கு அளவுக்கு மதிப்பீடு கிடைக்கும் என்று மைக்ரோமேக்ஸ் எதிர்பார்க்கிறது. இது குறித்து மைக்ரோமேக்ஸ் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
2010-ம் ஆண்டே ஐபிஓ வெளியிடும் திட்டத்தில் இந்த நிறுவனம் இருந்தது. ஆனால் அப்போது சந்தை சூழ்நிலைகள் சரி இல்லாததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் 25 சதவீத சந்தையை வைத்திருக்கிறது. மைக்ரோமேக்ஸ் இரண்டாவது இடத்தில் 20 சதவீத சந்தையை பிடித்திருக்கிறது.