

டெக் மஹிந்திரா நிறுவனம் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஆலோசனை மற்றும் சேவை நிறுவனமான சோஃப்ஜென் நிறுவனத்தை வாங்கியது. இந்தியாவில் ஐந்தாவது பெரிய ஐடி சேவை நிறுவனமாகத் திகழும் டெக் மஹிந்திரா, தங்களது வங்கி சேவைக்கு இந்த கையகப்படுத்துதல் பக்கபலமாக இருக்கும் என்று கூறியுள்ளது.
இந்த கையகப்படுத்துதலில் மதிப்பு குறித்து தெரிவிக்கப்பட வில்லை. ஆனால் இதற்கான பரிமாற்ற நடவடிக்கைகள் மார்ச் மாதத்துக்குள் முடியும் என்று எதிர்பார்ப்பதாக டெக் மஹிந்திரா செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. 1999ல் ஜெனீவாவில் ஆரம்பிக்கப்பட்ட சோஃஃப்ஜென் நிறுவனம் தனிநபர் முதலீடுகள், வர்த்தக மற்றும் சில்லரை வங்கி சேவைகளுக்கான தீர்வு களை அளித்து வருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 450 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்த கையகப்படுத்துதல் மூலம் டெக் மஹிந்திரா நிறுவனம் பொதுவான திட்டத்தை அறிவிக்கும் அளவுக்கு தகுதிபெறும் என்றும் நிதி சார்ந்த பொதுவான சேவை, சில்லரை மற்றும் தனிநபர் வங்கி, முதலீடு சார்ந்த வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த வாய்ப்பின் மூலம் எங்களது வங்கித் துறையை நவீனப்படுத்தவும், வங்கி தகவல் பரிமாற்ற சேவையில் திறமையாகவும் செயல்பட முடியும் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சிபி. குர்னானி.
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சில்லரை மற்றும் வணிக வங்கி துறைகளில் முக்கிய நிறுவனமாக வளர்ந்துள்ளோம். டெக் மஹிந்திராவுடன் இணைவதன் மூலம் புதிய தளங்களில் வாடிக்கையாளர்களைச் சந்திக்க உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார் சோஃப்ஜென் நிறுவனத்தின் தலைவர் டெம்ப்பிட்ஸ். இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கை டெக் மஹிந்திரா நிறுவனத்தின் தொழில் உத்தியில் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. 2014 - 15 நான்காவது காலாண்டில் 5 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நிறுவனமாக வளர இலக்கு வைத்துள்ளது. 2009ல் சத்யம் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து இதுவரை 6 நிறுவனங்களை மஹிந்திரா கையகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.-