சஹாரா குழுமத்துக்கு கடன் தரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

சஹாரா குழுமத்துக்கு கடன் தரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
Updated on
1 min read

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சஹாரா குழுமத்துக்கு 200 கோடி டாலர் கடன் தர அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர். இது தொடர்பான ஒப்பந்தம் பிப்ரவரி மாதம் 20-ம் தேதி கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.

மிரா கேபிடல் குழுமம் இந்த நிதி திரட்டும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த கடனானது சஹாரா குழுமத்துக்காக அல்ல. அந்நிறுவனத்தின் ஹோட்டல்கள் மற்றும் சொத்துகளுக்காக வழங்கப்படுவதாக அந்நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சரண்ஷ் சர்மா குறிப்பிட்டார்.

இப்போது அளிக்கப்படும் கடன் தொகையை சஹாரா நிறுவனம் திருப்பி அளிக்காத பட்சத்தில் அந்த சொத்துகளை இந்நிறுவனம் கையகப்படுத்திவிடும். அமெரிக்காவில் வசிக்கும் சர்மா, இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக தற்போது இந்தியாவில் தங்கியுள்ளார்.

சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதோ ராய் முதலீட்டாளர்களிடம் திரட்டிய நிதியை திருப்பி அளிக்க முடியாததால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீனில் வெளியே வர வேண்டுமெனில் இவர் 160 கோடி டாலரை செலுத்த வேண்டும். நீதிமன்றத்தின் சிறப்பு அனுமதியின்பேரில் சஹாரா குழுமத்துக்குச் சொந்தமான நிறுவனங்களை விற்பனை செய்து நிதி திரட்டும் பணியில் ராய் ஈடுபட்டார்.

நியூயார்க்கிலுள்ள பிளாஸா ஹோட்டல், லண்டனில் உள்ள கிராஸ்வெனோர் ஹோட்டல், மும்பையிலுள்ள சஹாரா ஸ்டார், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஆம்பி வேலி ரிசார்ட்ஸ் ஆகியன இக்குழுமத்துக்குச் சொந்தமான ஹோட்டல்களாகும்.

மிரா கேபிடல் குழுமத்தில் அமெரிக்கா மற்றும் லண்டனைச் சேர்ந்த 5 முதலீட்டாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள 5 ஹோட்டல்களை விற்பனை செய்வதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளன. இந்த சொத்துகளை விற்பது அல்லது இவற்றை அடமானம் வைத்து கடன் பெறுவது உள்ளிட்ட நடைமுறைகள் நிறைவேற குறைந்தது 90 முதல் 180 நாள்களாகும். இருப்பினும் இந்த நடைமுறையை 30 நாள்களுக்குள் முடிக்க அட்டர்னி ஒப்புக் கொண்டுள்ளார். இதன்படி நிதி பரிமாற்ற நடவடிக்கை பிப்ரவரி 20-ம் தேதி கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in