Published : 18 Jan 2015 03:08 PM
Last Updated : 18 Jan 2015 03:08 PM

சின்ன பறவை சொன்ன செய்திகள்

வலைதளங்களில் முகநூலை போல ‘ட்விட்டர்’ என்ற குறுஞ்செய்தி தளம் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகிறது. தங்களுக்குத் தேவையான செய்திகளை குறைந்த வார்த்தைகளில் மற்றவர்களை எளிதில் சென்று சேரும்விதமாக பிஸ் ஸ்டோன்(BIZ STONE) என்பவர் கூட்டாக வடிவமைத்தார். இவர் வாழ்க்கையில் எடுத்த முயற்சிகளையும் உருவாக்கி கொண்ட வாய்ப்புகளையும், வெற்றி அடைந்தே தீருவேன் என்ற தீர்மானமான எண்ணங்களையும் புத்தக வடிவில் எழுதியிருக் கிறார்.

இந்த புத்தகம் படிப்பவர்களை ஊக்குவிப்பது மட்டுமின்றி படித்து முடித்த பிறகு அந்த ஆசிரியரின் விசிறியாகவே மாற்றிவிடும். ஏழ்மையில் இருந்து பணம் கொழிக்கும் செல்வந்தராக மாறிய கதை இது. ஆனாலும் செல்வந்தர்களை விரட்டிச் சென்று பிடித்தது அல்ல. செல்வத்தை தேடி அலைந்தது அல்ல. மாறாக தன்னைத்தானே போட்டியாக எண்ணி அறைகூவல் விடுத்து, செய்யும் வேலையை நேசித்து, உலகில் உள்ள அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணமே செல்வந்தர்கள் வரிசையில் கொண்டு சேர்த்தது.

உலகை மாற்ற வேண்டும், மக்களை இணைக்க வேண்டும் என்ற தனியாத தாகத்தால் மிக பெரிய சமூக வலைதள அமைப்பான ட்விட்டர் என்ற குறுச்செய்தி முறையை ஏற் படுத்தியது மட்டும் அல்லாமல் ஜெல்லி என்ற தேடுபொறியையும் உலகிற்கு அளித்தார். இந்த புத்தகத்தில் ஏராளமான செய்திகளை தன்னுடைய கடந்த காலத்தில் இருந்து பாடமாக மற்றவர்களுக்கு அளித்துள்ளார்.

மிக முக்கியமான நான்கு கருத்துகள் கீழ் வருமாறு

# வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன

# வானளாவிய படைப்பாற்றல் திறன்

# உணர்வுகளில் முதலீடு

# கட்டுப்பாடுகளை தழுவ வேண்டும் (பயந்து விலகுதல் கூடாது)

வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன

வெற்றி அடைய வேண்டுமானால் விதியின் வழியை தானே வரைய வேண்டும் என தீர்மானித்தார். வாய்ப்புகள் உருவாக்கப்படு கின்றன என்பதை தன்னுடைய செயல் மூலம் பிஸ் எடுத்துக்காட்டினார். யாருக்காகவும் எதற்காகவும் அவர் காத்து இருக்கவில்லை. தனக்குதானே வாய்ப்புகளை உற்பத்தி ஆக்கிய விதம் உயர் பள்ளியில் ஆரம்பித்த ‘லேக்ரோஸ்’ குழுமம் மூலமும், லிட்டில் பிரவுன் என்ற குழுமத்தில் பெட்டிகள் அடுக்கி கொண்டிருந்ததிலிருந்து புத்தகங்களை வடிவமைத்த விதத்திலும் வெளியாகிறது. சரியான இடத்தில் சரியான நபர்களோடு இணைத்துகொண்டதன் மூலம் தனக்கு வேண்டிய வாய்ப்புகளை தானே உருவாக்கி கொண்டார், ஆனால் அவ்வாறு உருவாக்கி கொண்ட வழிகளும் முறைகளும் எளிதானவை அல்ல.

மிக பெரிய பொருளாதார சிக்கல் மற்றும் தன்னை பற்றிய எதிர்பாராத சிக்கல்களும் வாய்ப்புகள் உற்பத்தி ஆவதை வெகுவாகத் தடுத்தன. அவர் கூறியதை போல, “அடுத்தவர் கதவை திறக்கும் வரை காத்திருக்காதே உனக் கான கதவை நீயே செய்து திறந்துக் கொண்டு செல்” என்ற வார்த்தைகள் மிகவும் முக்கியத்துவம் மற்றும் சக்தி வாய்ந்தவை ஆகும்.

வானளாவிய படைப்பாற்றல் திறன்

பிஸின் வாழ்நாள் முழுவதும் அவரது படைப்பாற்றல் திறனை காணலாம். அவர் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முறை, அவரின் திறமைகளை ஊக்குவித்து படைப்பாற்றலை வெளிக்கொணர்ந்தது. படைப்பாற்றல் அவருடைய DNA-வில் கலந்து இருந்தது. ஊக்குவித்தல் இல்லாதிருக்கும் போது முயற்சிகளை மேற்கொண்டு படைப்பாற்றலை வெளிக்கொண்டு வர முயற்சி செய்தார்.

படைப்பாற்றல் திறன் காரணமாக பள்ளி யிலிருந்து வெளிவந்த போதும், புத்தக வடிவமைப்பிலும், GOOGLE என்ற தேடுபொறி அமைப்பில் இருந்து பல்லாயிரக்கணக்கான பங்குகளை இழந்த போதும், ‘ஒடியோ’ என்ற புதிய நிறுவனத்தை நிறுவினார். இதன் மூலம் ஊக்குவிக்கப்பட்டு, ட்விட்டர் மற்றும் ஜெல்லியை உருவாக்கினார். படைப்பாற்றலை வெளிக்கொணர்தல் சரியான வழியில் ஒருவரை கொண்டு சேர்க்கும் என்பதற்கு இவரது வாழ்வு ஒரு எடுத்துக்காட்டு.

உணர்வுகளில் முதலீடு

யார் ஒருவர் விரும்பியதை செய்யாமல் இருக்கிறார்களோ, தன்னைத்தானே சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் இருக்கிறார்களோ அவர்கள் மற்ற எதை சரியாகச் செய்தாலும் வீழ்வதை தவிர வேறு வழியே இல்லை. GOOGLE-லில் இருந்து வெளியேறி ‘ஒடியோ’ என்ற குழுமத்தை துவக்கிய போது Podecasting முறைக்கு உலகை திசைமாற்றினார். APPLE நிறுவனம் ‘Podcasting’ சேவையை துவக்கிய பொழுது, பிஸ் அதை எதிர்கொள்வதற்காக ‘Hackathon’ என்ற செயல்முறையை கொண்டு வந்தார். ஒடியோ குழுமத்தில் இருப்பவர்கள் இரண்டு வாரத்திற்கு எதைப் பற்றியும் கவலைப் படாமல் அவர்களுக்கு பிடித்தமான வேலையைச் செய்யலாம். இந்த Hacathon என்பது தான் ட்விட்டர் துவங்க மூலமாயிற்று. யார் ஒருவர் திருப்தியான ஒரு பணியை செய்கின்றாரோ அவர் சிறப்பான பணியை செய்து முடிப்பார் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

கட்டுப்பாடுகளை தழுவ வேண்டும்

கட்டுப்பாடுகளை தழுவுதல் என்பது நம்ப முடியாதது ஆக இருக்கலாம். உடல் சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த, தனக்குதானே விதித்துக் கொள்ளக்கூடிய கட்டுப்பாடுகள் சிலரை செயல்படாமல் தடுக்கும். ஏனென்றால் அவைகளை ஆத்திரமூட்டும், எதிர்க்கும் காரணிகளாக சிலர் அடையாளம் கொள்வார்கள். அதை சேர்த்து எடுத்து எதிர்த்து எழுந்தால் வெற்றி என்பதற்கு பிஸ் அவர்களின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு. தன் வாழ்வில் ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்தும் அவைகளை எதிர்த்து வென்று மற்றும் தழுவி உடன் சென்று சாதித்தது வரலாறு. பலம் இழந்தவர்கள் பலம் மிகுந்தவர்களாகவும் வாழ்க்கையில் ஏற்படும் தடுப்புகளை எதிர்கொள்பவர்களை வெற்றியின் முகப்பு வரவேற்கும்.

இந்த புத்தகத்தை ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்விக்கு ஒரு வெற்றி பெற்ற மனிதன் தன் சுய சரிதையை எழுதியிருக்கும் போது அதில் நமக்கு கிடைக்கும் கருத்துக் குவியல்களும், கற்பனைத் தாக்கங்களும் நம் வாழ்விலும் நேரலாம் என்ற நம்பிக்கை. அது வாழ்விலும் தொழிலும் வெற்றிக்கு வழிகாட்டலாம் என்ற எண்ணம். நீங்கள் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தினால் அந்த வாய்ப்பை முதல் முதலாக பயன்படுத்திக் கொள்வது நீங்களாகவே இருக்கலாம் (பக்கம் 11).

பிரம்மாண்ட வெற்றி அடைய பிரம்மாண்ட மான தோல்வியை தாங்கும் பக்குவம் வேண்டும். அதாவது உயிரைக் கொடுத்தாவது இலக்கை அடைய முயற்சித்தல் முக்கியம். அந்த முயற்சிக்கு உருவமும், உணர்வும் ஏற்படுத்துதல் இன்றியமையாதது (பக்கம் 82).

உள்ளுணர்வுகளை நம்புங்கள்; என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்; உங்கள் திறமைகளை நம்பிக்கை வைத்து வெற்றியை அடையுங்கள் (பக்கம் 154).

இந்த 202 பக்க சந்தோஷமான, அறிவு சார்ந்த ஊக்குவிக்கும் திறன் உள்ள புத்தகம் தெரிந்துகொள்ள முடியாத பல விஷயங்களை உணர்வு பூர்வமாக உணரச் செய்கின்றது. ட்விட்டர் என்ற வலைதள அமைப்பு ஏற்படுவதற்கு காரணமாக இருந்தவர் அடைந்த வெற்றி, தோல்வி, தளர்ச்சி, கம்பீரம் ஆகியவை ஒவ்வொரு இடத்திலும் பளீரென ஜொலிக்கிறது. இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் பொழுது நிச்சயமாக நீங்கள் ஏமாற மாட்டீர்கள். ஏனென்றால் இந்த புத்தகத்தின் தாரக மந்திரமே மற்றவர்களுக்கு உதவுங்கள் என்பதுதான். உலகளாவிய பச்சாதாபம் மனிதகுல வெற்றிக்கு முக்கிய காரணி என்ற நம்பிக்கையை விதைக்கிறார். சில நேரங்களில் நெருடலாக தோன்றும், சில நேரங்களில் வேகமாக பாயும் ஏனென்றால் கலாச்சார தலைமுறை வித்தியாசங்கள் வெகு அழகாக இந்த புத்தகத்தில் வெளிப்படுகிறது.

rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x