

கோல் இந்தியாவின் 10 சதவீத பங்குகளை விலக்கிகொள்ள மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக அடிப்படை விலையாக ஒரு பங்குக்கு 358 ரூபாய் நிர்ணயம் செய்யப் பட்டிருக்கிறது.
இந்த பங்கு விற்பனை மூலம் 22,600 கோடி ரூபாய் திரட்ட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பங்கு நேற்று வர்த்தகத் தின் முடிவில் 375.15 ரூபாயில் முடிவடைந்தது. இந்த விலையில் இருந்து 5 சதவீதம் குறைவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
ஐந்து சதவீத பங்குகளை பொது வெளியீட்டின் மூலமும், மீதமுள்ள ஐந்து சதவீத பங்குகளை ஓ.எப்.எஸ் முறையிலும் விற்க திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்த விற்பனையில் சிறு முதலீட்டாளர்களுக்கு 20 சதவித பங்குகள் ஒதுக்கப் பட்டிருக்கின்றன. பங்கு விலையில் இவர்களுக்கு மேலும் 5 சதவீத தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கோல் இந்தியா நிறுவனத்தில் அரசாங்கத்தின் பங்கு 89.65 சதவீதமாக இருக்கிறது. 2010- ம் ஆண்டு பொது பங்கு வெளியீட்டின் மூலம் இந்த பங்கு சந்தைக்கு வந்தது. அப்போது 15 மடங்கு அளவுக்கு முதலீட்டாளர்கள் ஆர்வம் இருந்தது. அப்போது ஒரு பங்கு 245 ரூபாய்க்கு வெளியிடப்பட்டது.
பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் மூலம் நடப்பு நிதி ஆண்டில் 43,425 கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு முடிவு செய்திருந்தாலும் இதுவரை 1,715 கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசு திரட்டி இருக்கிறது.
இதற்கிடையே தொழிற் சங்கங்கள் இந்த பங்கு விலக்க லுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.