

கட்டுமான துறையில் வளர்ந்து வரும் நிறுவனமான அல்லையன்ஸ் குழுமம் தனது தொழில் விரிவாக்கத்திற்கு ரூ.200 கோடி நிதி திரட்டியுள்ளது.
சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களில் அடுக்கு மாடி வீடுகள் கட்டி விற்பனை செய்து வரும் இந்த நிறுவனம் தனது கடன் பத்திரங்கள் வழி இந்த முதலீடுகளை திரட்டியுள்ளது. இன்டோஸ்டார் கேபிடல் பைனான்ஸ் மற்றும் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனங்களிடமிருந்து இந்த நிதியை திரட்டியுள்ளது.
இது குறித்து செய்தியாளர் களிடம் பேசிய இந்த நிறுவனத்தின் தலைவர் மனோஜ்சாய் நம்புரு, அல்லையன்ஸ் நிறுவனம் 600 சதுர அடி முதல் 1300 சதுர அடி வரையிலான குறைந்த விலை வீடுகளில் கவனம் செலுத்திவருகிறது. அடுக்குமாடி வீடுகள் தவிர தனி வீடுகளிலும் கவனம் செலுத்துகிறோம் என்றார். சர்வதேச தரத்தில், சர்வதேச கட்டுமான வல்லுனர்கள் உதவியுடன் கட்டிடங்களை கட்டினால் மக்கள் வாங்க தயாராக இருக்கிறார்கள் என்றார்.
மேலும் கடந்த வருடத்தில் ரியல் எஸ்டேட் சந்தை தேக்கமான இருந்தாலும் அல்லையன்ஸ் நிறுவனத்துக்கு பாதிப்பில்லை என்றும் வரும் நாட்களில் மிகச் சிறப்பாக இருக்கும் என்றார். பல கட்டுமான நிறுவனங்கள் வீடுகளை கட்டி விற்க முடியாத நிலைமை இருந்தாலும், நாங்கள் புதிய திட்டங்களை தொடங்கினோம். வீடுகளை விற்பனை செய்வதில் தேக்கம் அடையவில்லை என்று குறிப்பிட்டார்.
இந்த நிறுவனம் சென்னையில் பாடி, ஒரகடம், திருவள்ளூர், பல்லாவரம், பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களில் புதிய அடுக்குமாடி வீடு கட்டும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.