

ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து கடந்த 10 நாட்களாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ் புத்தாண்டான திங்கள்கிழமையன்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 184 உயர்ந்து காணப்பட்டது.
சென்னையில் கடந்த பத்து நாட் களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 184 உயர்ந்து ஒரு பவுன் ரூ. 22 ஆயிரத்து 480க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. 23 உயர்ந்து கிராமுக்கு ரூ. 2 ஆயிரத்து 810க்கு விற்பனையானது. அதே நேரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 170 குறைந்து ரூ. 43, 165 க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த சனிக்கிழமை ஒரு பவுன் தங்கம் ரூ. 22 ஆயிரத்து 296க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 2 ஆயிரத்து 787 க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஏப்ரல் மாதம் 3 ம் தேதி முதல் முதல் கடந்த 14 ம் தேதி வரையிலான நாட்களில் 9 ம் தேதி மட்டும் தங்கத்தின் விலை ரூ. 88 குறைந்தது. கடந்த பத்து நாட்களில் மிக அதிகமாக 5 ம் தேதி பவுன் ரூ. 104 உயர்ந்தது.
இது குறித்துத் தமிழ்நாடு தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் ஜெயந்தி சல்லானி கூறுகையில்:- உலகச் சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. இந்தியாவிலும் முகூர்த்த நாட்கள் தொடங்கியுள்ளதால் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இனி வரும் காலங்களிலும் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.