

புதுடெல்லி: ராணுவ தளவாட உற்பத்தியில் உலகின் முதல் 100 நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 3 பொதுத் துறை நிறுவனங்கள் இடம்பிடித்து அசத்தியுள்ளன. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (சிப்ரி) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ராணுவ தளவாட உற்பத்தியில் உலகளவில் முன்னணியில் உள்ள 100 நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (எச்ஏஎல்), பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பிஇஎல்), மசாகன் டாக்ஸ் (எம்டிஎல்) ஆகிய நிறுவனங்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும் அதன் விற்பனை பங்களிப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. கடந்தாண்டு நிலவரப்படி சர்வதேச ஆயுத விற்பனையில் அந்த முன்று நிறுவனங்களும் இணைந்து 1.1% பங்களிப்பை மட்டுமே வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் ஆயுத விற்பனை கடந்த 2024-ல் 5.9% அதிகரித்து சுமார் ரூ.61 லட்சம் கோடியை எட்டியுள்ளது. உக்ரைன், காசா இடையே ஏற்பட்டுள்ள மோதல், சர்வதேச மற்றும் பிராந்திய அளவிலான புவிசார் பதற்றம் ஆகியவை ராணுவத்துக்கான செலவுகள் அதிகரிக்க முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
முதல் 100 நிறுவனங்கள் ஆயுத விற்பனை பட்டியலில் 39 நிறுவனங்களுடன் அமெரிக்காவே ஆதிக்கம் செலுத்துகிறது. இவற்றின் ஆயுத விற்பனை பங்களிப்பு 334 பில்லியன் டாலர். இதைத் தொடர்ந்து சீனா 8 நிறுவனங்களுடன் 88 பில்லியன் டாலர் விற்பனையைக் கொண்டு 2-வது இடத்தில் உள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த எச்ஏஎல் 3.8 பில்லியன் டாலர் விற்பனையுடன் 44-வது இடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து, பிஇஎல் 2.4 பில்லியன் டாலர் விற்பனையுடன் 58-வது இடத்திலும், எம்டிஎல் 1.2 பில்லியன் டாலர் விற்பனையுடன் 91-வது இடத்திலும் உள்ளன. அமெரிக்காவின் லாக்கீட் மார்ட்டின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.