

குறைந்த கட்டண விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மீண்டும் கட்டண குறைப்பு அறிவிப்பை வெளியிட் டுள்ளது. இதன் மூலம் 5 லட்சம் இருக்கைகளை முன்பதிவு மூலம் பதிவு செய்ய முடிவுசெய்துள்ளது. டிக்கெட் கட்டணம் ரூ. 1,499-ல் ஆரம்பமாகிறது. இந்த கட்டண சலுகை குறுகிய காலத்துக்கு மட்டுமேயாகும்.
சூப்பர் சேல் எனப்படும் இந்த கட்டண சலுகை மூன்று நாள்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். பிப்ரவரி 15-ம் தேதி முதல் ஜூன் 30 வரையான காலத்தில் பயணம் மேற்கொள்ள இந்த மூன்று நாள்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஏர் ஏசியா நிறுவனம் கட்டண சலுகையை 7 நாள்கள் அளிப்பதாக இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இதையடுத்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் இப்போது கட்டண சலுகையை அறிவித்துள்ளது.
ஜனவரி மார்ச் மற்றும் ஜூலை செப்டம்பர் காலாண்டுகளில் பொதுவாக பயணம் மேற்க் கொள்வோர் எண்ணிக்கைக் குறைவாக இருக்கும். இந்த காலகட்டங்களில் விமான நிறுவனங்கள் கட்டண சலுகையை அறிமுகம் செய்து பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.
2015-ம் ஆண்டு முதல் முறையாக இந்த கட்டண சலுகை அறிவிக்கப்பட்டது. பயணத்தை முன்னதாகவே திட்டமிடுவோருக்கு இது மிகவும் லாபகரமானது. இந்த சலுகை அளிக்காவிடில் விமானங்கள் பயணிகள் இல்லாமல் வெறுமனே பறக்க வேண்டியிருக்கும். அந்த நிலை மாற வேண்டும் என்பதற்காகவும் நிறுவன வருவாயை அதிகரிப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாக நிறுவனத்தின் வர்த்தக அதிகாரி கனேஸ்வரன் அவிலி தெரிவித்தார். இத்தகைய சலுகை ரயில் மற்றும் பஸ் பயண கட்டணத்தைவிடக் குறைவானது. முன்கூட்டியே பயணத்தை திட்டமிடுவோர் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
நிறுவனத்தை மறு சீரமைக்கும் வழியாக சூப்பர் சேல் 2015 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் வரத்து குறைவாக உள்ள சீசனில் அதைப் போக்க இதுபோன்ற சலுகையை அளிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். இது வாடிக்கையாளர்களுக்கும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும் என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சஞ்ஜீவ் கபூர் கூறினார்.