Published : 12 Jan 2015 09:23 am

Updated : 12 Jan 2015 11:42 am

 

Published : 12 Jan 2015 09:23 AM
Last Updated : 12 Jan 2015 11:42 AM

சுப்பா ராவ்: மறக்கப்பட்ட மேதை

இந்திய அறிவியல் மேதை ஒருவர் புறக்கணிக்கப்பட்டதன் துயர வரலாறு!

அண்மையில் ஒரு கருத்தரங்கில் எல்லாப்ரகத சுப்பாராவைப் பற்றி ஓர் அமெரிக்க விஞ்ஞானி குறிப்பிட்டபோது அங்கிருந்த பலர், ‘யாரது?’ என்று கேட்டார்கள். அப்போது எழுந்த எனது வருத்தத்தின் விளைவே இந்தக் கட்டுரை.


ஆந்திரத்தில் உள்ள பீமாவரத்தில் 12.1.1895-ல் பிறந்தார் சுப்பா ராவ். பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது தந்தை இறந்ததால், படிப்பில் கவனம் செல்லவில்லை. என்றாலும், ஏதாவது பெரிய சாதனைகளைச் செய்து பெயரும் புகழும் பெற வேண்டுமென்ற ஆர்வம் அவருக்கு இருந்தது. தனது 13-வது வயதில் காசிக்குப் போய் வாழைப்பழ வியாபாரம் செய்து நிறையப் பணம் சம்பாதிக்க முயற்சி செய்தார்.

ஆனால், அவருடைய தாயார் அவரைத் திரும்ப அழைத்துவந்து, சென்னையில் ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்த்துவிட்டார். ஒருவழியாக மூன்று படையெடுப்புகளுக்குப் பின் மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார் சுப்பா ராவ். நண்பர்களும் கஸ்தூரி சூரியநாராயண மூர்த்தி என்ற உறவினரும் பண உதவி செய்ததால் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். பிற்பாடு, அந்த உறவினரின் மகளைத் திருமணமும் செய்துகொண்டார்.

பட்டம் இழந்தார்

காந்தியின் விதேசிப் பொருள் பகிஷ்கரிப்புப் போராட்டத்தால் கவரப்பட்டு, கதர் துணியாலான கோட்டுகளை அணிந்து, கல்லூரிக்கு வரத் தொடங்கினார். அவருக்கு அறுவையியல் துறை ஆசிரியராக இருந்த பிராட்ஃபீல்டுக்கு அது அதிருப்தியைத் தந்தது. தேர்வுகளில் சுப்பா ராவ் சிறப்பாக விடையளித்திருந்தபோதிலும் அவருக்கு எம்.பி.பி.எஸ். பட்டம் கிடைக்க விடாமல் தடுத்து, எல்.எம்.எஸ். என்ற கீழ்நிலைச் சான்றிதழை வழங்கச் செய்துவிட்டார். அடுத்து, சுப்பா ராவ் சென்னை மருத்துவ சேவை அரசுப் பணியையும் பெற விடாமல் பிராட்ஃபீல்ட் முட்டுக்கட்டை போட்டார்.

சென்னையில் இருந்த டாக்டர் லட்சுமிபதியின் ஆயுர்வேதக் கல்லூரியில் உடற்கூறியல் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார் சுப்பா ராவ். ஆயுர்வேத மருந்துகளின் நோய் தீர்க்கும் திறன்களால் கவரப்பட்ட சுப்பா ராவ், மேலைநாட்டுப் பகுப்பாய்வு முறைகளில் பரிசோதித்து ஆயுர்வேதத்தை நவீனப்படுத்த முனைந்தார்.

உயிரி வேதியியலில் பட்டம்

ராக்ஃபெல்லர் கல்விக்கொடைத் திட்டத்தின் உதவியுடன், இந்தியாவுக்கு வந்திருந்த ஓர் அமெரிக்க மருத்துவருடன் தற்செயலாக நிகழ்ந்த சந்திப்பு அவருடைய மனதை மாற்றியது. அறக்கொடை ஒன்றின் ஆதரவையும் மாமனாரின் பண உதவியையும் பெற்று சுப்பா ராவ் 1922-ம் ஆண்டு அக்டோபர் இறுதியில், அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகருக்குப் போய்ச் சேர்ந்தார்.

ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் சேர்ந்து, வெப்பமண்டல நோய் மருத்துவத்தில் டிப்ளமா பட்டம் பெற்றார். அதன் பின்னர், மருத்துவத் தொடர்பில்லாத உயிரி வேதியியல் பயின்றார். அடுத்து, அதே பள்ளியில் ஓர் இளநிலை ஆசிரியராகச் சேர்ந்தார். அவருக்கு உயிரி வேதியியலில் ஆர்வம் மேலிட்டு, அத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றார். திசுக்களிலும் உடல் திரவங்களிலும் பாஸ்பரஸின் செறிவை அளவிட ஓர் உத்தியை சுப்பா ராவ் கண்டுபிடித்தார். சில குறிப்பிட்ட வளர்சிதை மாற்றக் கோளாறுகளைக் கண்டறிய அவருடைய உத்தி இன்றளவும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. தசைச் செயல்பாடுகளில் பாஸ்போ கிரியேட்டின் அடினோசைன் டிரைபாஸ்பேட் ஆகியவற்றின் பங்குபற்றி அவர் கண்டுபிடித்த விவரங்கள் அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் உயிரி வேதியியல் பாடநூல்களில் இடம்பிடித்திருக்கின்றன.

அவருடைய ஆய்வு வழிகாட்டியாக இருந்த சைரஸ் ஃபிஸ்கி, சுப்பா ராவின் பங்களிப்பை மறைத்து அதற்கான பெருமையைத் தனதாக்கிக்கொண்டார். அதன் காரணமாக, சுப்பா ராவுக்கு ஹார்வர்ட் பள்ளியில் நிரந்தரமான பணி கிடைக்காமல் போயிற்று.

பாஸ்பரஸ் கொள்கை தவறு

அடுத்து, சுப்பா ராவ் பாஸ்பரஸின் வளர்சிதை மாற்றத்தைப் பற்றி ஆய்வு செய்தார். அதற்கு முன்பே ஆர்ச்சிபால்ட் ஹில், ஆட்டோ மெயர்ஹாஃப் என்ற இரு ஆய்வர்கள் அதை ஆராய்ந்து ஒரு கொள்கையை உருவாக்கி, அதற்காக 1922-ம் ஆண்டில் நோபல் பரிசையும் வென்றிருந்தார்கள். சுப்பா ராவ் அந்தக் கொள்கை தவறானது என்று நிரூபித்தார். அதன் காரணமாக உயிரி வேதியியல் ஆய்வு வட்டாரத்தில் பெரும் சர்ச்சை எழுந்தது. சுப்பா ராவின் கண்டுபிடிப்புக்கான அங்கீகாரம் கிடைப்பதும் தாமதமாயிற்று.

தசைகளுக்குத் தேவையான ஆற்றல் பாஸ்போ கிரியேட்டின், அடினோசைன் டிரைபாஸ்பேட் ஆகியவற்றிலிருந்தே கிடைக்கிறது என்று சுப்பா ராவ் நிரூபித்தார். அதற்கான பெருமையையும் ஃபிஸ்கியே தனதாக்கிக்கொண்டார். எனினும், அவருடைய சக ஆய்வர்களுக்கு சுப்பா ராவின் பங்களிப்பு தெரிந்தேயிருந்தது. பத்தாண்டுகளுக்கும் மேலாக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சுப்பா ராவுக்குப் பயிற்சியும் உறைவிடமும் அளித்தபோதிலும் அவருக்குத் தேவையான ஆய்வக வசதிகளை வழங்கவில்லை. இதனால் மனம் கசந்த சுப்பா ராவ், அங்கிருந்து விலகி லெடர்லி ஆய்வகத்தில் பணியில் சேர்ந்தார்.

கீமோதெரபியின் முன்னோடி

அங்கு அவர் வைட்டமின்களைப் பற்றியும் நுண்ணுயிர்க் கொல்லிகளைப் பற்றியுமான ஆய்வுகளில் பங்கேற்றார். பன்றியின் கல்லீரலிலிருந்து ஃபோலிக் அமிலத்தைப் பிரித்தெடுக்கும் முறையைக் கண்டுபிடித்தார். அடுத்து ஒரு நுண்ணியிரிக் கரைசலை நொதிக்க வைத்து, அதிலிருந்து ஃபோலிக் அமிலத்தைப் பிரித்தெடுக்கச் செலவு குறைவான ஒரு முறையை உருவாக்கினார். அதையடுத்து வேதிமுறையில் ஃபோலிக் அமிலத்தைச் செயற்கையாக உற்பத்தி செய்யும் முறையையும் கண்டுபிடித்தார்.

ஃபோலிக் அமிலம் ரத்த சோகைக் கோளாறைக் குணப்படுத்த உதவும். சிட்னி ஃபார்பர் என்ற ஆய்வருடன் சேர்ந்து மித்தோட்ரெக்சேட் என்ற புற்றுநோய் எதிர்ப்பு மருந்தை உருவாக்கினார். புற்றுநோய்க்கான கீமோதெரபிக்காக முதன்முதலாக உருவாக்கப்பட்ட வேதி மருந்து அதுவே. இன்றளவும் அது பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. உலக சுகாதார நிறுவனத்தால் (W.H.O.) யானைக்கால் வியாதியைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் ஹெட்ராசான் என்ற மருந்தையும் சுப்பா ராவ் கண்டுபிடித்தார்.

மண் மாதிரிகளின் சேகரம்

இரண்டாம் உலகப் போர் முடிந்து, ஊர் திரும்பிக்கொண்டிருந்த அமெரிக்கப் படை வீரர்களைத் தாம் சென்ற இடங்களில் இருந்தெல்லாம் மண் மாதிரிகளைச் சேகரித்து வருமாறு லெடர்லி ஆய்வகம் கோரியது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட பல்லாயிரம் மண் மாதிரிகளிலிருந்து சுப்பாராவும் பெஞ்சமின் டுக்கர் என்ற தாவரவியல் நிபுணரும், நுண்ணுயிரிகளை அழிக்கும் திறன் பெற்ற கிருமிகளையும் பூஞ்சைகளையும் பிரித்தெடுத்தனர். அவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மண் மாதிரிகளை அதுவரை எந்த ஆய்வர்களும் பகுப்பாய்வு செய்ததில்லை என்ற வகையில், அது ஒரு உலக சாதனை என்று பாராட்டப்பட்டது.

குழந்தைகளைக் காத்தவர்

குழந்தைகளைப் பீடிக்கும் லூகோமியா ரத்தப்புற்று நோயைக் குணப்படுத்தும் எதிர்ஃபோலிக் அமிலம் ஒன்றை சுப்பா ராவ் உருவாக்கியதன் மூலம், பல குழந்தைகளை மரணத்திலிருந்து மீட்க உதவியிருக்கிறார்.

இவ்வளவு சாதனைகளைச் செய்த பின்னரும், சுப்பா ராவ் எல்லாப் பெருமையும் சக ஆய்வர்களுக்கே என்று சொல்லி ஒதுங்கிக்கொண்டார். அதன் காரணமாக, அவருக்கு ஏராளமான வருமான வாய்ப்புகள் கைநழுவிப்போயின. அவருக்கு வியாபார சாமர்த்தியமே கிடையாது என்று ஒரு காப்புரிமை வழக்கறிஞர் சலித்துக்கொண்டார். எனினும், மருத்துவ அறிஞர்கள் எல்லோருமே அவரது பங்களிப்பை அங்கீகரித்தார்கள். சுப்பா ராவுடன் பணியாற்றியவரான ஜார்ஜ் ஹிட்சிங்ஸ் 1988-ம் ஆண்டில் ஜெர்ட்ரூட் எலியான் என்பவருடன் உடலியக்கவியலுக்கான நோபல் பரிசைப் பங்கிட்டுக்கொண்டவர். சுப்பா ராவின் கண்டுபிடிப்புகளை ஃபிஸ்கி மறைத்துவைத்ததன் காரணமாக, அவர் கண்டு

பிடித்து வைத்திருந்த பல நியூக்ளியோடைடு வகைச் சேர்மங்களைப் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் புதிதாகக் கண்டுபிடிக்க நேர்ந்தது என்று ஹிட்சிங்ஸ் புலம்பியிருக்கிறார். சுப்பா ராவின் தன்னலமற்ற இந்தக் குணமே, நோபல் பரிசை அவர் வெல்லும் வாய்ப்புகளை இழக்கச் செய்தது. நோபல் பரிசுக்குரியவர்களைத் தேர்வு செய்யும் ஸ்டாக்ஹோம் கரோலின்ஸ்கா ஆய்வுக் கழகத்தில் பேராசிரியராக இருந்த எரிக் ஜோர்ப்ஸ், மருத்துவ வேதியியல் களத்தில் முக்கியமான சாதனைகளைப் படைத்தவர்களில் ஒருவர் சுப்பா ராவ் எனப் புகழ்கிறார்.

அமெரிக்காவின் சையனமிட் ஆய்வகம் தான் கண்டுபிடித்த பூஞ்சை ஒன்றுக்கு சுப்பா ராவின் பெயரைச் சூட்டியுள்ளது. சுப்பா ராவ் 1948 ஆகஸ்ட் 9-ம் நாள் நியூயார்க்கில் காலமானார். அப்போது அவருக்கு 53 வயதுதான். “டாக்டர் சுப்பா ராவைப் பற்றி நீங்கள் கேள்விப்படாமல் இருக்கக் கூடும். ஆனால், அவர் வாழ்ந்ததால்தான் நீங்கள் இன்று உயிருடன், தேக நலத்துடன் வாழ்கிற வாய்ப்பு கிட்டியிருக்கிறது. நீங்கள் இன்னும் பல காலம் உயிர் வாழ்வதற்குக்கூட அவர் காரணமாக இருக்கக்கூடும்” என்று டோரன் ஆன்ட்ரிம் என்னும் மருத்துவ நிபுணர் 1950, ஏப்ரல் மாதத்திய ‘ஆர்கோசை’ என்ற சஞ்சிகையில் எழுதியிருக்கிறார்.

- கே.என். ராமசந்திரன்,
பேராசிரியர், ஓய்வு

இந்திய அறிவியல் மேதைஎல்லாப்ரகத சுப்பாராவ்சுப்பா ராவ்கீமோதெரபி

You May Like

More From This Category

More From this Author

பிரமிடுகளின் உள்ளே!

கருத்துப் பேழை