

வலுவான நிதிக் கொள்கைகளை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்த்து வளர்ச்சிக்கு வித்திடவும் மானியங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
2015-16 நிதியாண்டுக்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், ஜேட்லியின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
சென்னையில் நடைபெற்ற வர்த்தக கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய ஜேட்லி, "ஜனவரி 1-ம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் நேரடியாக பயனாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இச்சூழலில், வலுவான நிதிக் கொள்கைகளை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்த்து வளர்ச்சிக்கு வித்திடவும் மானியங்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.
இந்தியாவில் பெருமளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு வரி விதிப்பில் பல முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த பல்வேறு மாநில அரசுகளும் இசைவு தெரிவித்துள்ளன. இந்த வரியை அமல் படுத்துவதால் எந்த ஒரு மாநில அரசும் ஒரு ரூபாய் அளவுக்குக் கூட நஷ்டப்படாது என உறுதியளிக்கிறேன்" என தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் இயங்கும் செலவு நிர்வாக கமிட்டி, மானியங்களை ஒழுங்குபடுத்தி வருவாயை பெருக்க மத்திய நிதியமைச்சகத்துக்கு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைகளை வரும் பட்ஜெட்டில் அரசு அமல் படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணெய், உரம் ஆகிய பொருட்களுக்கு அரசு வழங்கி வரும் மானியம் பல லட்சம் கோடியை கடந்துள்ளது. இந்நிலையில், மானியங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் என ஜேட்லி கூறியுள்ளார்.
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, மானியங்களை ஒழுங்கபடுத்த வேண்டும் என்பதை ஜேட்லி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.