Published : 09 Jan 2015 10:50 AM
Last Updated : 09 Jan 2015 10:50 AM

மஹிந்திராவின் புதிய ‘கஸ்டோ’

இந்தியாவின் பிரசித்திபெற்ற வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா தனது புதிய ஸ்கூட்டியான கஸ்டோவை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் டிராக்டர், கார் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பத் துறை, நிதிச் சேவை, சுற்றுலா என பல்வேறு துறைகளில் கால் பதித்துள்ளது. 1,650 கோடி டாலருக்குச் சொந்தமான மஹிந்திரா 100 நாடுகளில், 2 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது. டிராக்டர், கார் போன்ற வர்த்தக மற்றும் பயன்பாட்டு வாகனங்களைத் தாண்டி, சாமானியர்களுக்கான இரண்டு சக்கர வாகன உலகிலும் மஹிந்திரா அடியெடுத்து வைத்துள்ளது.

இதுவரை சென்ஞ்சுரா, சென்ஞ்சுரா ராக்ஸ்டார், பான்டெரோ உள்ளிட்ட கியர் பைக்குகளை அறிமுகப்படுத்திய மஹிந்திரா நிறுவனம் கைன், ஃ பிளைட், டியூரோ டி இசட், ரோடியோ ஆர் இசட், ரோடியோ யுஇசட் -ஒ25 உள்ளிட்ட ஸ்கூட்டர்களையும் தனது தயாரிப்பாக சந்தைப்படுத்தி வருகிறது. மஹிந்திரா ஸ்கூட்டர்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது மஹிந்திரா கஸ்டோ என்னும் புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மஹிந்திரா கஸ்டோ வட இந்தியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, தற்போது தென்னிந் தியாவில் அறிமுகப்படுத்தி வருகிறது மஹிந்திரா. இந்த அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற மஹிந்திரா இரண்டு சக்கர வாகனங்களின் தலைமை இயக்க அதிகாரி விரென் பொப்லி கூறியது: இந்தியா மிகவும் வேகமாக நகர்மயம் ஆகி வருகிறது. இன்றைக்கு எல்லோருக்கும் வாகனங்களின் தேவை அவசியமாகிவிட்டது.

இதில், ஆண் பெண் என்ற வேறுபாடுகள் இல்லை. இதனடிப்படையில்தான் மஹிந்திரா நிறுவனம் தனது இரு சக்கர வாகனங்களை தயாரிக்க ஆரம் பித்தது. என்னதான் வெளிநாட்டு நிறுவனங்கள் 500 சிசி, 1000 சிசியில் சூப்பர் பைக்குகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தினாலும், சாமான்யர்களுக்கான வாகன தேவையை பூர்த்தி செய்வதில் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது.

கிராமம், நகரம் இரண்டுக்கும் பொதுவான இரு சக்கர வாகனங்களின் தேவையை அதிகரித்திருக்கிறது. பெரு நகரங்களில் 100 சிசி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவர்கள் இப்போது 150 சிசி , 200 சிசி மோட்டார் சைக்கிளுக்கு மாறிவிட்டனர். இந்த இடைவெளியை நிரப்புவதே எங்கள் குறிக்கோள் என்ற அடிப்படையில் இரு சக்கர வாகனங்களை உருவாகினோம்.

சந்தையில் நிற்க வேண்டுமென்றால் எதையாவது புதிதாக செய்ய வேண்டும். எனவே, இந்தியா முழுவதும் மக்களிடையே நேரே சென்று ஆய்வு நடத்தினோம்.

பிரதமரின் ``மேக் இன் இந்தியா’’ திட்டத்தை மனதில் கொண்டு இத்தாலி தரத்துக்கு இணையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனமாகும். மகாராஷ்ட்ராவின் புனேவில் உள்ள தொழிற்சாலையில் முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்ட இந்த வாகனம், வட இந்தியாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது.

இந்த ஸ்கூட்டியின் முக்கிய சிறப்பம்சமே இதன் இருக்கை தான். கியர் வண்டிகள் என்பது ஆண்களுக்கானது மட்டும்தான். ஆனால் ஒரு ஸ்கூட்டரை குடும்பத்தில் எல்லோரும் தங்களின் தேவைக்காக பயன்படுத்தலாம். இதனடிப்படையில் இந்தியாவிலேயே முதன்முறையாக சீட்டின் உயரத்தை உட்காரும் ஆளுகேற்ப மாற்றியமைக்க கூடிய வசதி கஸ்டோவில் உள்ளது. கார்களில் மட்டுமே சீட் அட்ஜஸ்மெண்ட் வசதி இருந்த நிலையில் ஸ்கூட்டரிலும் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

கஸ்டோ வி.எக்ஸ் ஸ்கூட்டரில் ரிமோட் ஃபிளிப் சாவி மற்றும் அடையாளம் காணும் விளக்கையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த வண்டியின் என்ஜின் 110 சிசி திறன் கொண்ட 4 ஸ்ட்ரோக் என்ஜினாகும். இதன் நவீன ஸ்பார்க் பிளக் நீடித்த ஆற்றலை வழங்குவதால், லிட்டருக்கு 63 கி.மீ வரை ஓடும்.

இது தவிர 12 இஞ்ச் அளவிலான ட்யூப் இல்லா டயர்கள், முன் சக்கரத்தின் டெலஸ்கோபிக் சஸ்பென்சன் ஏர் ஸ்பிரிங்குகள் போன்றவை இதுவரை எதிலும் இல்லாதவை. வாகன ஓட்டிகள் சுலபமாக கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காக மைய புவி ஈர்ப்பு விசையை சமமாக வைத்திருக்கும்படியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

செல்ஃப் ஸ்டார்ட்டர் இருந்தாலும், கிக்கரும் இடம் பெற்றுள்ளது. மற்ற வண்டிகளில் போல் இல்லாமல், முன்னாள் நின்று உதைத்து ஸ்டார்ட் செய்யும் சிறப்பம்சம் இந்த வாகனத்துக்கு உண்டு. மேலும் ஸ்கூட்டர்களின் அடிப்பாகம் சில நேரங்களில் தரையை தொடுகின்ற நிலை ஏற்படும்.ஆனால் கஸ்டோவின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 165 மி.மீ என்பதால் அந்த பிரச்சினை கிடையாது.

தமிழகம் முழுவதும் கஸ்டோ விற்பனைக்காக 130 டீலர்கள் உள்ளனர். இதில் 95% டீலர்கள் சர்வீஸும் செய்து தருவார்கள். தமிழகத்தில் அறிமுகச்சலுகையாக ரூ 48,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வடமாநிலங்களை விட ரூ 2 ஆயிரம் ரூபாய் குறைவாகும். வண்டியின் விற்பனையின் போதே சர்வீசிங் கூப்பனையும் கொடுக்கிறோம். மஹிந்திரா கஸ்டோவை உகாண்டா, டாஸ்மேனியா, நேபாளம், வங்கதேசம் மற்றும் இலங்கையிலும் அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x