

சென்னையில் செயல்படும் கொரிய நிறுவனமான ஹூண்டாய், புத்தாண்டில் பெரிய ரக எஸ்யுவி கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்நிறுவனம் ரூ. 1,500 கோடி முதலீடு செய்துள்ளது. இந்திய சந்தையில் 17 ஆண்டுகளாக இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துள்ள ஹூண்டாய் தனது சந்தையை விரிவுபடுத்தும் நோக்கில் ஹாட்ச்பேக் மற்றும் செடான் ரகக் கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் எஸ்யுவி காருக்கு ஜிஎஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் பிற்பாதியில் சாலைகளில் வலம் வரும். ரூ. 1,000 கோடி முதலீட்டில் இந்த கார் வடிவமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் எகோ-ஸ்போர்ட் மற்றும் ரெனால்ட் டஸ்டருக்குப் போட்டியாக இது இருக்கும். அதேசமயம் இரு நிறுவனத் தயாரிப்புகளின் விலையைக் காட்டிலும் குறைவான விலையை நிர்ணயிக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.
அடுத்து வெர்னா மற்றும் எலைட் ஐ20 ஆகிய கார்களின் மேம்பட்ட ரகத்தை அறிமுகப்படுத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டில் இந்நிறுவனம் பன்முக பயன்பாடுகளைக் கொண்ட கார்களை (எம்யுவி) அறிமுகப் படுத்த உள்ளது. அந்த கார் மாருதி எர்டிகா, டொயோடா இனோவா மற்றும் ஹோண்டா மொபிலியோ ஆகிய மாடல் கார்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த மாடல் கார் உருவாக்கத்துக்கு ரூ. 500 கோடியை ஹூண்டாய் முதலீடு செய்துள்ளது.
காம்பாக்ட் மற்றும் செடான் ரகக் கார்களில் ஹூண்டாய் நிறுவனத் தயாரிப்புகள் மிகச் சிறந்த சந்தையைப் பிடித்துள்ளது. எஸ்யுவி மற்றும் எம்யுவி பிரிவில் தடம் பதிப்பதற்காக ரூ. 1,500 கோடி முதலீடு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நிறுவனத்தின் விற்பனை பிரிவின் மூத்த துணைத் தலைவர் ராகேஷ் ஸ்ரீவாத்ஸவா தெரிவித்துள்ளார்.
ஹூண்டாய் நிறுவனத்தின் சாண்டா எப்இ ரக எஸ்யுவி கார்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்த ரகக் கார்கள் மாதத்துக்கு 175-தான் விற்பனையாகின்றன. இதற்கு சரியான விலை நிர்ணயிக் கப்பட்டால் இது அதிகம் விற்பனையாகும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக எஸ்யுவி மற்றும் எம்யுவி ரகக் கார்களுக்கு சந்தையில் சிறந்த கிராக்கி நிலவுகிறது. இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாகும் கார்களின் விலை உள்ளூர் நிறுவனத் தயாரிப்புகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் இருந்தால் அவற்றின் விற்பனை அதிகரிக்கும் என்று பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத் தெரிவித்தார்.
எஸ்யுவி மற்றும் எம்யுவி ரகக் கார்களின் வடிவமைப்பும், செயல்பாடும், விலையும் சரியாக நிர்ணயிக்கப்பட்டால் அவை சந்தையில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெறும் என்று இக்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது.