Published : 24 Jan 2015 01:41 PM
Last Updated : 24 Jan 2015 01:41 PM

பேச வைக்கும் விளம்பரமே பிரபலமாகும்!

வாய் வழி பரவும் பிராண்ட் செய்தியான பஸ்ஸ் மார்க்கெட்டிங் பற்றி போன வாரம் பேசினோம். மார்க்கெட்டர் மீடியாவில் சொல்வதை விட, விளம்பரச் செயல்கள் மூலம் கூறுவதை விட தெரிந்தவர் பேசுவதையே நாம் காது கொடுத்துக் கேட்கிறோம். பிடித்தவர் சொல்வதைத் தான் கேட்டு நடக்கிறோம்.

என்னதான் சொல்லுங்கள், உலகிலேயே சிறந்த மீடியா மனிதர்களின் வாய் தானே! கார் விளம்பரம் டீவியில் வந்தால் கண்டுகொள்ளாத நாம், பக்கத்து வீட்டுக்காரர் அதே காரில் சென்றால் கண் கொட்டாமல் கவனிக்கிறோம். கண்டவரிடத்திலெல்லாம் கதை கதையாய் விவாதிக்கிறோம்!

மரபணு சார்ந்த செயல்

பேசுவதும் பஸ்ஸ் பரப்புவதும் நம் மரபணுக்களில் இருக்கிறது என்கிறார் ‘வெர்மாண்ட் பல்கலைக் கழக’த்தின் ‘டாக்டர் பெர்ண்ட் ஹைன் ரிச்’. இவர் ரேவன் என்னும் அண்டங் காக்கைகளை ஆராய்பவர். குளிர் நடுக்கும் ‘மெயின்’ மாநிலத்தில் ரேவன் எப்படி இரை தேடு கிறது என்ற ஆராய்ந்தார் ஹைன்ரிச்.

இறந்த மாட்டின் உடலை பனியில் பரப்பி மறைந்திருந்து கவனிக்கத் துவங்கினார். சில நாட்களுக்குப் பிறகு எங்கிருந்தோ வந்த ஒரு ரேவன் மாட்டின் உடலைப் பார்த்தது. குளிர் காலம் முழுவதும் உணவளிக்க போதுமானதாக இருந்தும் அதை உண்ணாமல் ரேவன் பறந்து விட்டது. ஹைன்ரிச்சிற்கு மகா ஆச்சரியம்.

சில நாட்களுக்குப் பிறகு அதே ரேவன் மீண்டும் வந்தது. இம்முறை பெரிய ரேவன் படையுடன். அனைத்தும் சில நாட்கள் அங்கு டேரா போட்டு மாட்டை முழுவதுமாக உண்டு மெயின் முழுவதும் கேட்கும் அளவிற்கு ஏப்பம் விட்டு பறந்து சென்றன.

வாழ்வாதாரத்துக்கு…

முதலில் வந்த ரேவன் நினைத்திருந்தால் மாட்டை குளிர் காலம் முழுவதும் தான் மட்டும் தின்று ஜீவிதம் நடத்தியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. தான் மட்டுமே இரை தேடி காலம் முழுவதும் பிழைக்க முடியாது, அனைவரும் சேர்ந்தால் பலர் கண்களுக்கு பல இடங்களில் உணவு கிடைக்கும், வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக காலம் தள்ளலாம் என்ற உணர்வே அதன் செயலுக்குக் காரணம்.

இந்த ஆராய்ச்சியை பல முறை செய்து அதே முடிவைத்தான் பெற்றார் ஹைன்ரிச். எறும்புகளிலும், வண்டுகளிலும் கூட இந்த குணத்தை காண முடியும். பேசுவதும் பஸ்ஸ் பரப்புவதும் வெட்டியாய் பொழுது போக்க மட்டுமல்ல. வாழ்வாதாரத்திற்கே நாம் செய்வது’ என்கிறார் ஹைன்ரிச்.

பிடித்த விஷயத்தை ஒருவரிடம் கூறினால் பிடிக்காததை ஐந்து பேரிடம் கூறுவோம். இது பேசப்படும் பொருளுக்கேற்ப மாறுபடலாம், பார்த்த படம், சாப்பிட்ட ஹோட்டல் சரியில்லை யென்றால் பலரிடம் கூறும் நாம் வாங்கிய ஊதுவத்தி சுமாரென்றால் பலரிடம் சொல்வதில்லை. ‘எமோஷனல் இன் வால்வ்மெண்ட்’ உள்ள பொருள், பிராண்ட் பற்றி பலரிடம் பேசுவோம் என் கிறார் ஆராய்ச்சியாளர் ‘ஜான்குட்மென்’.

கதை அவசியம்

உங்கள் பிராண்டைப் பற்றி வாய் வழியே வாடிக்கையாளர் செய்தி பரப்ப சரியான கதை வேண்டும் என்கிறார் ‘இமானுஎல் ரோஸென்’. பிராண்ட் பற்றி சிலாகித்து பார்ப்பவரெல்லாம் பேச பிராண்ட் கதை எப்படி இருக்கவேண்டும் என்பதை ‘The Anatomy of Buzz’ என்ற புத்தகத்தில் விவரித்திருக்கிறார்.

பிராண்ட் பற்றி மர்ம மாயை உருவாக்குங்கள்

பிராண்டில் பூச்சாண்டி படம் போட்டு பயமுறுத்தும் ரேஞ்சுக்கு மர்ம மாயை உண்டாக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பிராண்ட் பற்றிய ஒரு மிஸ்ட்ரியை உருவாக்கினால் போதும். அது மக்கள் கவனத்தை ஈர்க்கிறது. ‘இப்படம் ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவியது’ என்று ஒரு படம் கூறினால் ‘யாரைப் பற்றியதாக இருக்கும்’ என்று மண்டை குடைந்து அப்படத்தைப் பார்க்க தோன்றுகிறதல்லவா. அது போன்ற மாயையை பிராண்டிற்குத் தோற்று வித்தால் பிராண்டை பலர் விவாதிப் பார்கள்.

‘கோகோ கோலா’வின் சுவைக்கு காரணம் ‘7X’ என்ற ஒரு சீக்ரெட் ஃபார்முலா என்றும் அது உலகில் ஏழு பேருக்குத் தான் தெரியும் என்றும் அந்த ஃபார்முலா கோகோ கோலா ஆபிசில் ரகசிய லாக்கரில் பூட்டி வைக்கப் பட்டிருக்கிறது என்றும் ஒரு கதை உலகம் முழுவதும் பிரசித்தம். இது உண்மையா? உட்டாலங்கடியா? யார் கண்டது. ஆனால் கோகோ கோலா பற்றி உலகமே பரபரப்பாக பேச இந்த மாயை உதவியது!

எதிர்பார்ப்பை அதிகப்படுத்துங்கள்

ஆயிரம் சொல்லுங்கள், எதிர்ப் பார்த்துக் காத்திருப்பதில் எரிச்சலான இன்பம், சோகமான சுகம் இருக்கத்தான் செய்கிறது. உங்கள் பிராண்ட் பற்றிய ஒருவித எதிர்பார்ப்பை உருவாக்கினால் அதுவே மக்கள் விவாதித்து பேசும் விஷயமாகிறது. அமெரிக்காவில் பத்திரி கைகளில் தினம் ஒரு விளம்பரம் வந்தது: ’65 மில்லியன் வருடங்கள் காத்திருந்தீர்கள்.

இன்னும் சில நாட்கள் மட்டுமே’. என்ன, ஏது, யார் என்று மக்கள் மண்டையைப் பிய்த்துக்கொள்ள கடைசியில் ’உங்கள் காத்திருத்தல் இன்று முடிகிறது’ என்ற விளம்பரம் டைனோ சார்களைப் பற்றிய ‘ஜுராசிக் பார்க்’ திரைப்படம். டைனோசார் லெவலுக்கு பெரியதாய் பேசியே இப்படத்தையும் பெரியதாக்கினார்கள் மக்கள்.

பிராண்டின் பின்னணியை பிரபலப்படுத்துங்கள்

உங்கள் பிராண்டிற்கு பின்னலான பின்னணி இருந்தால் அதை முதல் காரியமாக முன்னணிப்படுத்துங்கள். இதை Take people behind the scenes என்பார்கள் ஹாலிவுட்டில். ’இந்த படத்தை இப்படி எடுத்தோம்’, ’இக்காட்சியை இப்படி படமாக்கினோம்’ என்று கூறும்போது அது பேசப் படும் விஷயமாகி பிராண்டை பிரபலப் படுத்துகிறது. ‘எந்திரன்’ படத்தை விட அது படமாக்கப்பட்ட விதத்தை விவரித்த டீவி நிகழ்ச்சி சுவாரசியமாய் அமைந்து அப்படத்தைப் பற்றி மக்கள் பேச வைத்து பார்க்கவும் வைத்தது.

அதிர்ச்சி அளியுங்கள்

நாய் மனிதனைக் கடித்தால் செய்தி யல்ல. மனிதன் நாயைக் கடித்தால் தலைப்புச் செய்தி! மக்களுக்கு பிராண்ட் பற்றி ஒரு ஷாக் கொடுத்தால் அது கவனத்தை ஈர்த்து மற்றவரிடம் பேச வைக்கும். அதற்காக நாயைக் கொண்டு வாடிக்கையாளர்களை கடிக்க வைத்துக் தொலைக்காதீர்கள்!

மிஸ்ட்ரி பட மன்னன் ‘ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்’ தான் இயக்கிய ‘ஃப்ரென்ஸி’ படத்தை பிரபலப்படுத்த தத்ரூபமாக தன் உருவ பொம்மை ஒன்றைச் செய்து அதை லண்டன் தேம்ஸ் நதியில் மிதக்கச் செய்தாராம். ஊரே பரபரப்படைந்து, பதைபதைப்புடன் அதை பற்றி பலவாறு பேச அதனாலேயே அப்படம் பிரபலமடைந்து பெரிய ஹிட்டானது!

பேச ஒரு பிரபலத்தைத் தாருங்கள்

கதைக்கு எப்படி ஹீரோ, ஹீரோயின் தேவையோ அது போல் பிராண்ட் பற்றிய செய்திக்கு சூடான கதையும் சூப்பரான கதாபாத்திரத்தையும் உருவாக் கினால் பிராண்ட் சூப்பர் ஹிட்டாகும்.

‘ஆர்எம்கேவி’ தன் 50,000 கலர் புடவை பற்றிய செய்தியை காட்டுத்தீ போல் பரவச் செய்ய தேர்ந்தெடுத்த கதாபாத்திரம் ‘ஜோதிகா’. ஜோதிகா-சூர்யா காதல் அரசல் புரசலாக பேசப்பட்ட காலத்தில் ஜோதிகாவின் திருமண பட்டுப் புடவையின் கலரை சஜஸ்ட் செய்யுங்கள் என்று மக்களை கேட்க வைத்து அவர்கள் கூறிய அத்தனை கலர்களின் கலவையாக 50,000 கலர் புடவையை அறிமுகப்படுத்தி, ஜோதிகாவை அதை விளம்பரத்தில் அணிய வைத்து முத்தாய்ப்பாக ‘பட்டு புடவை ரெடி, அப்ப மாப்பிள்ளை?’ என்று கேட்கச் செய்தனர். வெட்டிப் பேச்சுக்கு விட்டில் பூச்சியாய் விழும் தமிழ் கூறும் நல்லுலகம் சும்மா இருக்குமா? ஒவ்வொரு தமிழனும் ஆளுக்கு 50,000 முறைக்கு மேல் பேசியே ஆர்எம் கேவியை பிரபலப்படுத்தித் தள்ளி விட்டார்கள்!

இது போல் மக்கள் மத்தியில் பிராண்ட் என்னும் தீ பரபரப்பு செய்தியாகப் பரவ என்ன செய்யவேண்டும்? சரியானவர்களைப் பிடித்து அவர்களிடத்தில் பற்றவைக்கவேண்டும். அதைத் தெரிந்து கொள்ள நீங்கள் அடுத்த வாரம் வரை காத்திருக்கவேண்டும்!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x