

விமானங்களுக்கு கூடுதல் வாடகை செலுத்தியதாக கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் மீது பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) குற்றம் சாட்டியுள்ளது.
மொரீஷியஸைச் சேர்ந்த இரண்டு விமான நிறுவனங்களுக்கு கூடுதல் வாடகை செலுத்தப்பட்டதாக ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பிய நோட்டீஸில் எஸ்பிஐ குறிப்பிட் டுள்ளது. மொரீஷியஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் முன்னர் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய தாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் ஒரு பகுதியாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வங்கியில் கடனைப் பெற்று விட்டு, அதைத் திரும்ப செலுத்து வதற்கு போதிய நிதி வளம் இருந்தபோதிலும் செலுத்தத் தவறியவர் (வில்ஃபுல் டிபால்டர்) பட்டியலில் அந்நிறுவன அதிபர் விஜய் மல்லையாவை சேர்க்க வேண்டும் என எஸ்பிஐ நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்த மனு வங்கி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிங்ஃபிஷர் பயன்படுத்திய விமானங்களில் ஏடிஆர் விமான ரகங்களும் அடங்கும். இந்த சிறிய ரக விமானங்களில் 42 முதல் 72 இருக்கைகள் இருக்கும். மொரீஷியஸைச் சேர்ந்த வெலிங் நரெய்ன் லிமிடெட் நிறுவனம் மற்றும் வெலிங் சச்சிதானந்த் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு விமான வாடகையாக 1,99,000 டாலர் மற்றும் 1,98,000 டாலர் செலுத்தப்பட்டுள்ளது.
வழக்கமான வாடகையைக் காட்டிலும் இது 70 சதவீதம் கூடுதல் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இந்த கால கட்டத்தில் இந்த ரக விமானங்களுக்கான வாடகை 1,15,000 டாலராக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது. கூடுதலாக இந்நிறுவனத்துக்கு மாதந்தோறும் ரூ. 49 லட்சம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிங்ஃபிஷர் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநராக இருந்த ஹிதேஷ் படேல் என்பவர் வெலிங் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றபிறகு இதுபோல கூடுதல் வாடகை செலுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு அக்டோபர் நிலவரப்படி பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ. 7,500 கோடி கடனை கிங்ஃபிஷர் அளிக்க வேண்டும். 2013-ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி கிங்ஃபிஷர் நிறுவனத்தின் நஷ்டம் ரூ.16,023 கோடியாகும்.
கிங்ஃபிஷர் நிறுவனத்தை ``வில்ஃபுல் டிபால்டராக’’ அறிவிக்க வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் யுனெடெட் பாங்க் ஆப் இந்தியா தொடர்ந்த வழக்கில், அவ்விதம் அறிவிக்க முடியாது என்று அம்மாநில நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
இதனிடையே மும்பை நீதிமன்றத்தில் எஸ்பிஐ தொடர்ந்துள்ள வழக்கில் இந்நிறுவனத்தை வில்ஃபுல் டிபால்டராக அறிவிக்க வலியுறுத்தியுள்ளது.
இது தவிர, கிங்ஃபிஷர் நிறுவனம் கூடுதலாக இருந்த நிதியை ஃபோர்ஸ் இந்தியா ஃபார்முலா -1 அணிக்கு ரூ. 53.69 கோடி, மீனாட்சி தேயிலை நிறுவனத்துக்கு ரூ. 5 கோடி, ஏஎஸ்ஏ ஹோல்டிங் நிறுவனத்துக்கு ரூ. 1 கோடி, மந்த் ஹோல்டிங் நிறுவனத்துக்கு ரூ. 4 கோடி, ஆங்கர் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ. 5.3 கோடி, சுரக் ஷா ரியால்டி லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ. 51.35 கோடி தொகையை அளித்துள்ளதாக எஸ்பிஐ தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது.