

இந்திய சந்தைகளில் வெளி நாட்டு முதலீடுகளின் வரவு அதிகரித்துள்ளது. ஜனவரி மாத தொடக்கத்திலிருந்து ஜனவரி 23 ஆம் தேதிவரை இந்திய முதலீட்டுச் சந்தைகளில் ரூ.21,000 கோடி முதலீடு உள்வந்துள்ளது. இது இதுவரை இல்லாத அளவுக்கு மலைக்க வைப்பதாக உள்ளது என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.
பண வீக்கம் கட்டுக்குள் உள்ளதும், ஆர்பிஐ வட்டி விகிதத்தை குறைத்ததுமே இதற்கு காரணம்.
அந்நிய நிறுவன முதலீட்டா ளர்கள் ஜனவரி 23-ம் தேதி வரையிலும் ரூ.5,992 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனர். கடன் சந்தைகளின் முதலீட்டு மதிப்பு ரூ. 15,336 கோடியாக உள்ளது. மொத்தமாக ரூ.21,328 கோடி தொகையை இந்திய நிதிச் சந்தைகளில் முதலீடு செய்துள்ளனர் என்று மத்திய முதலீட்டு சேவை புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
பணவீக்க அளவு குறைந் துள்ளதும், கட்டுக்குள் இருப்பதும் தான் முதலீடு அதிகரிப்புக்கு காரணம் என சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு அறிவிப்பு சந்தைக்குக் எதிர்பாராத சாதகத்தை உருவாக்கியது என்கின்றனர்.
2014 ஆம் ஆண்டில் அந்நிய முதலீட்டாளர்கள் கடன் சந்தையில் ரூ.1.16 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளனர்.
பங்குச் சந்தைகளில் முதலீடு செய்த அளவு ரூ.98,150 கோடியாக உள்ளது. மொத்த அந்நிய நிகர முதலீடு 2.58 லட்சம் கோடியாக இருந்தது.