

இந்திய சாப்ட்வேர் மற்றும் சேவைக்கு ரூ. 1,500 கோடியை செலவிட தங்கள் நிறுவனம் தயாராக உள்ளதாக இன்போசிஸ் நிறுவனர் விஷால் சிக்கா கூறினார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது, சாஃப்ட்வேர் மேம்பாட்டுத் திட்டப் பணிக்கு தங்கள் நிறுவனம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று குறிப்பிட்டார்.
சாஃப்ட்வேர் திட்டப் பணிக்கு 25 கோடி டாலர் (சுமார் ரூ. 1,500 கோடி) செலவிட உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பிரதமரின் கனவு திட்டமான ஸ்மார்ட் மற்றும் டிஜிட்டல்மய இந்தியாவை உருவாக்கும் திட்டத்தில் தங்கள் நிறுவனமும் ஈடுபடுத்திக் கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
2016-ம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் நடக்கும் கும்பமேளாவுக்காக பிரத்யேகமான சாப்ட்வேரை தயாரித்து வருவதாக சிக்கா கூறினார். இன்போசிஸ் நிறுவனத்தின் மைசூர் மையத்தை நாட்டின் முதலாவது ஸ்மார்ட் நகர மாடலாக அறிவிக்க பிரதமர் மோடி சம்மதித்துள்ளதாகவும், இதற்கான விழா ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது என்றும் கூறினார்.
பிரதமர் உருவாக்க நினைக்கும் ஸ்மார்ட் நகரம், ஸ்மார்ட் கட்டமைப்பு வசதிகள் குறித்து விவாதித்ததாகவும் சிக்கா கூறினார். இன்போசிஸ் வசம் உள்ள 50 கோடி டாலர் நிதியத்தில் புதிதாக சாப்ட்வேர் உருவாக்கும் பணிக்கு 25 கோடி டாலரை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். ஸ்மார்ட் நகரங்களில் இன்போசிஸ் நிறுவனத்தின் மைசூர் மையம் உலகிலேயே மிகவும் சிறப்பானதாகும். பசுமை சூழ் அமைப்பில் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் செயல்படும் மையமாகும்.
மைசூர் மையத்தில் 30 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அங்கு வசிக்கவும் செய்கின்றனர். இந்த மையத்தை நாட்டின் முதலாவது ஸ்மார்ட் நகராக அறிவிக்க வேண்டும் என்று விரும்பினோம். இதற்கு பிரதமரும் ஒப்புக் கொண்டுள்ளார். மைசூர் மையம் 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் பல்கலைக் கழகமாகும். இங்கு 2 லட்சம் மரங்கள் உள்ளன.
பிரதமரின் தூய்மையான டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் எங்களது நிறுவனமும் ஈடுபடும் என்றார்.