Published : 17 Jan 2015 11:48 AM
Last Updated : 17 Jan 2015 11:48 AM

ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் கை மாறியது

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இயக்குநர் கூட்டத்தில் விமான நிறுவனத்தின் பங்குகளை அஜய் சிங்கிடம் மாற்ற முடிவு செய்யப்பட்டது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் முன்னாள் நிறுவனர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 5 சதவீத பங்குளை மட்டுமே வைத்திருக்கும் அஜய் சிங், முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள் அளித்த ஒப்புதலின் பேரில் நிறுவனத்தின் பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளார். எவ்வளவு தொகைக்கு பங்குகள் கை மாறின என்ற விவரம் வெளியாகவில்லை.

ஜனவரி 15-ம் தேதி ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நிறுவனத்தில் அதிக பங்குகளை வைத்துள்ள கலாநிதி மாறன் மற்றும் கேஏஎல் ஏர்வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வசம் உள்ள பங்குகளை மாற்ற முடிவு செய்யப்பட்டு, நிறுவனத்தை நடத்தும் உரிமையை அஜய் சிங்கிடம் ஒப்படைப்பதென முடிவு செய்யப்பட்டது.

நிறுவன சீரமைப்பு நடவடிக்கைக்காக உரிமையாளராக பொறுப்பேற்பது மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிர்வாகத்தை நடத்தும் பொறுப்பேற்றுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளதாக மும்பை பங்குச் சந்தைக்கு ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, நிறுவனத்தை சீரமைத்து நடத்துவது மற்றும் உரிமையாளர் மாற்றத்துக்குத் தேவையான அனைத்து நடைமுறைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு நிறுவனத்தை இயக்குநர் குழு வலியுறுத்தியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விமான அமைச்சகம், மத்திய அரசு உள்ளிட்டவற்றிடம் தேவையான ஒப்புதல்களைப் பெறுமாறு கூறப் பட்டதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

வரவேற்கத்தக்க மாற்றம்

ஸ்பைஸ்ஜெட் நிர்வாகத்தில் நடைபெற்றுள்ள மாற்றம் வரவேற்கத்தக்க ஒன்று என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 17 சதவீத சந்தையைப் பிடித்துள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நலிவடையும் நிலையிலிருந்து மீண்டுள்ளது பயணிகளுக்கு மிகவும் நன்மை அளிக்கக் கூடியதாகும். அதன் பணியாளர்கள், நிறுவனத்துக்கு கடன் அளித்தவர்கள், நிறுவனத்துக்கு தேவையானவற்றை சப்ளை செய்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இது நன்மை அளிக்கும் விஷயம் என்று ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஆம்பர் துபே தெரிவித்துள்ளார்.

அஜய் சிங், இந்நிறுவனத்தை மீண்டும் சிறப்பாக செயல்பட தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இப்போதைய சூழலில் அடுத்த ஓராண்டுக்குள் இந்நிறுவனம் லாபகரமானதாக மாறும் என்றும் துபே கூறினார்.

மக்களின் வரிப்பணத்தை நிறுவனத்துக்கு திருப்பிவிடாமல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மீண்டும் செயல்பட அரசு எடுத்த நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது. இத்தகைய சூழலில் விமான எரிபொருள் (ஏடிஎப்) கட்டணத்தை அரசு சீரமைக்க வேண்டும், அத்துடன் சீனாவைப் போல விமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை உரு வாக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஐந்தாண்டு திட்டம்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை சீரமைக்க ஐந்தாண்டு திட்டத்தை வகுத்துள்ளார் அஜய் சிங். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். நிறுவனத்துக்குச் சொந்தமான பம்பார்டியர் க்யூ400 ரக விமானங்களை படிப்படியாக சேவையிலிருந்து நிறுத்துவது, பணியாளர் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கும். இந்நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். நிதி நிலையை வலுப்படுத்துவது, செயல்பாடுகளை மேம்படுத்துவதும் இதில் அடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x