

அரசாங்கம் எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளால் வளர்ச்சிக்கான தடைகள் நீங்கி முதலீட்டாளர் மனநிலை மாறி இருக்கிறது. இதனால் இந்தியாவுக்கு வரும் முதலீடுகள் அதிகரிக்கும் என்று ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சாந்தா கொச்சார் தெரிவித்தார்.
இந்தியா வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. மேலும், நாட்டின் தலைமை மாறிய பிறகு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அதிகரித்திருக்கிறது என்றார்.
டாவோஸில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட கொச்சார் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது.
இந்தியாவின் நுகர்வு சந்தை அதிகரித்துகொண்டே வருகிறது. இதனால் அந்நிய முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சந்தையாக இந்தியா இருக்கும்.மேலும் கட்டுமானத்துறையில் இந்தியாவுக்கு அதிக அளவிலான முதலீடுகள் தேவைப்படுகின்றன.
கட்டுமானம் என்பது மின்சாரம் மற்றும் சாலை மட்டுமல்ல. அதை தாண்டி குடிநீர் வசதி, நகர்ப்புற மேம்பாடு, ஸ்மார்ட் நகரங்கள், ரயில் போக்குவரத்து, ரயில் துறை முக இணைப்பு சாலைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு பெரிய வாய்ப்புகள் இருக்கின்றது.
இந்தியாவின் நீண்ட கால வளர்ச்சி மிகவும் பலமாக இருக்கிறது. இதில் அந்நிய முதலீட்டாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
தற்போதைய சூழலில் முதலீடு செய்வதற்கு ஏற்ற நாடுகளில் முக்கியமான நாடு இந்தியா என்று உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம் தெரிவித்ததை சுட்டிக்காட்டி இதுபோன்ற உலக தலைவர்களின் கருத்துகளை நாம் அதிகமாக கேட்க முடிகிறது என்றார்.
உள்நாட்டு நுகர்வு மற்றும் முதலீடுகள் காரணமாக இன்னும் பத்தாண்டுகளுக்கு இந்தியாவின் வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த வாய்ப்பினை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஏழு மாதங்களில் அரசு பற்றி கருத்து கூறுவது கடினம். இருந்தாலும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வளர்ச்சிக்கு தேவையான கொள்கைகளை உருவாக்கிறது. மேலும் தொழில் புரிவதற்கான சூழல் மேம்பட்டு வருகிறது.
அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் தொழில் துறை உற்சாகம் அடைந்திருக்கிறது. இதன் காரணமாக முதலீடுகள் வந்துகொண்டிருக்கின்றன.
மேக் இன் இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா ஆகிய திட்டங்களின் இலக்குகள் அடையக் கூடியவைதான் என்று சாந்தா கொச்சார் தெரிவித்தார்.