கச்சா எண்ணெய் விலை மேலும் சரிவு

கச்சா எண்ணெய் விலை மேலும் சரிவு
Updated on
1 min read

கச்சா எண்ணெயின் விலை ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது. பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 46 டாலருக்கு கீழே சரிந்துவிட்டது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை 60 சதவீதம் வரை கச்சா எண்ணெய் விலை சரிந்திருக்கிறது.

எண்ணெய் உற்பத்தி நாடுகள் (ஒபெக்) உற்பத்தியை குறைக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுமட்டுமல்லாமல் சந்தை மதிப்பை தக்கவைத்துக்கொள்ள தங்களது வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி வழங்கி வருவதால் தொடர் சரிவில் இருக்கிறது கச்சா எண்ணெய் விலை.

மேலும் உற்பத்தி அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தேவை குறைந்துவருவதும் இந்த விலை சரிவுக்கு காரணமாகும். தற்போதைய சந்தை நிலவரம் மேலும் பதற்றத்தை உண்டாக்கி இருக்கிறது. மேலும் விலை சரிவதற்குத்தான் வாய்ப்பு அதிகமாகும். இந்த நிலை மாறுவதற்கான சூழலே இல்லை.என்று சாக்ஸோ வங்கியின் கமாடிட்டி வல்லுநர் நேற்று தெரிவித்தார்.

இதற்கு மாறாக, ஐக்கிய அமீரகத்தில் எண்ணெய் வள அமைச்சர் உற்பத்தி குறைப்பு இல்லை என்று நவம்பர் மாதம் எடுத்த முடிவு சரி என்று தெரிவித்திருக்கிறார். மேலும் எங்களுடைய உத்தியில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

இந்த சரிவினை பயன்படுத்தி சீனா தன்னுடைய இறக்குமதியை அதிகரித்திருக்கிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 70 லட்சம் பேரல் அளவுக்கு சீனா இறக்குமதி செய்திருக்கிறது. இந்த அளவுக்கு சீனா இறக்குமதி செய்வது இப்போதுதான் முதல் முறையாகும்.

இந்த நிலையில் கோல்ட்மேன் சாக்ஸ் வங்கி 2015-ம் ஆண்டின் சராசரி கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் (பிரென்ட்) 50.40 டாலராக இருக்கும் என்று தெரிவித்தது. ஆனால் இதற்கு முன்பு 83.75 டாலராக இருக்கும் என்று கோல்ட்மென் சாக்ஸ் தெரிவித்திருந்தது.

Tyche கேபிடல் நிறுவனத்தின் நிபுணர் கூறும் போது, “குறுகிய காலத்தில் 40 டாலருக்கு கூட கச்சா எண்ணெய் சரிய வாய்ப்பு இருக்கிறது, இது நாம் எதிர்பார்ப்பதைவிட விரைவாக கூட நடக்கலாம்” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in