

பல தொழில்களில் ஈடுபட்டு வரும் நிறுவனமான ஐடிசி நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு முடிவுகள் 10 சதவீதம் உயர்ந்து 2,635 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2,385 கோடி ரூபாயாக இருந்தது.
ஆனால் நிகர விற்பனை 2 சதவீதம் மட்டுமே உயர்ந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 8,623 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது ரூ.8,800 கோடியாக இருக்கிறது.
எப்.எம்.சி.ஜி பிரிவு விற்பனை 4.23 சதவீதம் உயர்ந்தும், எப்.எம்.சி.ஜி இல்லாத பிரிவின் வருமானம் 0.31% உயர்ந்தும் வந்திருக்கிறது.
சிகரெட் விற்பனையின் வளர்ச்சி 0.6 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது. இருந்தாலும் மொத்த விற்பனையில் சிகரெட்டின் பங்கு மட்டும் 47 சதவீதமாகும்.
ஹோட்டல் வியாபாரம் மூலம் கிடைக்கும் வருமானம் 330 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 315 கோடி ரூபாயாக இருந்தது. அதே சமயம் விவசாய பிரிவின் மூலம் கிடைக்கும் வருமானம் 1,786 கோடி ரூபாயிலிருந்து ரூ.1,598 கோடியாக சரிந்தது.
முடிவுகள் ஏமாற்றம் அளித்ததால் ஐடிசி பங்குகள் 5 சதவீதம் வரை சரிந்தது. வர்த்தகத்தின் முடிவில் 352 ரூபாயில் முடிவடைந்தது.
ஐ.என்.ஜி வைஸ்யா நிகர லாபம் 13% சரிவு
ஐ.என்.ஜி வைஸ்யா வங்கியின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 13 சதவீதம் சரிந்து 145.7 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிகரலாபம் 167 கோடி ரூபாயாக இருந்தது.
வாராக்கடன்களுக்கான ஒதுக்கீடு மற்றும் இதர வருமானம் குறைவு ஆகிய காரணங்களால் நிகர லாபம் குறைந்தது. நிகர வட்டி வருமானம் 18.2 சதவீதம் அதிகரித்து 491 கோடி ரூபாயாக இருந்தது.
இதர வருமானம் கடந்த வருடத்தின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது சரிந்து காணப்பட்டது. கடந்த வருடம் இதே காலாண்டில் 214 கோடி ரூபாயாக இருந்த இதர வருமானம் இப்போது 205 கோடி ரூபாயாக இருக்கிறது.
வாராக்கடன்களுக்கு ஒதுக்கீடு செய்த தொகை 61.5 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.
மொத்த வாராக்கடன் 1.86 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 0.66 சதவீதமாகவும் இருக்கிறது. வர்த்தகத்தின் முடிவில் இந்த பங்கு சிறிதளவு உயர்ந்து 979.05 ரூபாயில் முடிவடைந்தது.