Published : 08 Jan 2015 11:11 AM
Last Updated : 08 Jan 2015 11:11 AM

3-ஜி அலைக்கற்றை விலை: மறு பரிசீலனை செய்ய டிராய்-க்கு பரிந்துரை

மூன்றாம் தலைமுறை (3-ஜி) அலைக்கற்றை ஏலத்துக்காக நிர்ணயிக்கப்பட்ட விலையை மறு பரிசீலனை செய்யுமாறு தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (டிராய்) கேட்டுக் கொள்ள அமைச்சரவை குழு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக டிராய் அனுப்பியுள்ள பரிந்துரையை திருப்பி அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 2100 மெகாஹெர்ட்ஸ் அலைக் கற்றைக்கான குறைந்தபட்ச விலை மற்றும் 3 ஜி சேவைக்கான விலை ஆகியவை குறித்து டிராய் அனுப்பிய பரிந்துரையை அமைச்சரவை குழு புதன்கிழமை ஆய்வு செய்தது. அப்போது டிராய் பரிந்துரை திருப்பி அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது.

கடந்த டிசம்பர் 31-ம் தேதி டிராய் அனுப்பிய பரிந்துரையில் ஒரு மெகாஹெர்ட்ஸுக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 2,720 கோடி நிர்ணயிக்கலாம் என குறிப்பிட்டிருந்தது. இதுகுறித்து ஆய்வு செய்த தொலைத் தொடர்புத் துறையின் உள் குழு 3-ஜி அலைக்கற்றைக்கான அடிப்படை விலையை மெகா ஹெர்ட்ஸுக்கு ரூ. 3,899 கோடியாக நிர்ணயிக்கலாம் என குறிப்பிட்டிருந்தது. இது டிராய் நிர்ணயித்த விலையைக் காட்டிலும் 43 சதவீதம் அதிகமாகும்.

2010-ம் ஆண்டு சந்தை நிலவரத்துக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் 80 சதவீதம் கூடுதலாக நிர்ணயிக்கலாம் என குறிப்பிட்டிருந்தது. எஸ்பிஐ பிஎல்ஆர் (பாரத ஸ்டேட் வங்கியின் கடனுக்கான வட்டி விகிதம்) அடிப்படையில் இந்த விலை வரையறுக்கப்பட்டது. 3-ஜி சேவைக்கு 2100 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஸ்பிஐ பிஎல்ஆர் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்பட்டால் ஒரு மெகா ஹெர்ட்ஸுக்கு ரூ. 4,874.59 கோடி நிர்ணயிக்க வேண்டும் என்று டிராய் குறிப்பிட்டிருந்தது. பிறகு மேற்கொள்ளப்பட்ட கணக்கீட்டின் அடிப்படையில் குறியீட்டெண் அடிப்படையிலான விலையாக மெகா ஹெர்ட்ஸுக்கு ரூ. 3,899 கோடி என நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது.

டிராய் தனது கருத்தை 15 நாள்களுக்குள் தொலைத் தொடர்பு கமிஷனிடம் அளிக்க வேண்டும். அதன் பிறகு இறுதி விலை முடிவு செய்யப்படும். 2010-ம் ஆண்டு நிலவரப்படி 3-ஜி அலைக்கற்றை விலையாக தொலைத் தொடர்புத் துறையினர் ஒரு மெகா ஹெர்ட்ஸுக்கு ரூ. 3,349.87 கோடி செலுத்தி வருகின்றனர்.

3-ஜி அலைக்கற்றை ஏலம் 2100 மெகாஹெர்ட்ஸ் 2-ஜி அலைக்கற்றையைப் போல நடத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. -பி.டி.ஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x