

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதை இந்தியா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் எரிபொருளுக்கு அளிக்கப்படும் மானியத்தைக் குறைக்க வேண்டும் என்று உலக வங்கியின் மூத்த துணைத் தலைவர் கவுசிக் பாசு கூறினார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது இந்தியாவுக்குக் கிடைத்த மிகப் பெரும் வாய்ப்பு, இதன் மூலம் நடப்புக் கணக்குப் பற்றாக் குறையை இந்தியா குறைப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார். அத்துடன் இந்த சந்தர்ப்பத்தில்தான் பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும். எண்ணெய்க்கு அளிக்கும் மானியத்தைக் குறைக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்தும்போதுதான் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும். அவ்விதம் வளர்ச்சியை எட்டும் போதுதான் எதிர்காலத்தில் சர்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும் வகையில் இந்தியா வலுமிக்கதாக மாற முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
கச்சா எண்ணெய் விலை குறைவு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்தியா போன்ற வளரும் நாட்டுக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பாகும். இதன் மூலம் பற்றாக்குறையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். அத்துடன் பிற சீர்திருத்தங்களை அமல்படுத்தி வளர்ச்சிக்கு வழி காண முடியும் என்றார்.
உலக வங்கியில் பொறுப் பேற்பதற்கு முன்பு இவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியிலிருந்த போது மத்திய அரசின் தலைமை பொருளதார ஆலோசகராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய் விலை குறைவை இந்தியா உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 2008-ம் ஆண்டில் இதேபோன்று கச்சா எண்ணெய் விலை சரிந்து மீண்டும் 6 மாதங்களில் உயர்ந்ததைப் போன்ற நிலை உருவாகாது என நம்பலாம். இப்போது சரிந்துள்ள விலை குறைவு குறைந்தபட்சம் ஓராண்டுக்காவது நீடிக்கும். அல்லது அதற்குப் பிறகும் தொடரலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் இப்போது 5 சதவீத பொருளாதார வளர்ச்சி காணப்படுகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதிக வளர்ச்சியை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இதன் மூலம் துரிதமான வளர்ச்சியை எட்ட முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பெட்ரோலியப் பொருளுக்கான மானியத்துக்கு இந்தியா அதிகம் செலவிடுகிறது. இப்போதைய சூழலில் மானியத் தைக் குறைத்தால் விலைவாசி அதிகரிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருக்கும்போது மானியத் தைக் குறைத்தால் எண்ணெய் விலை உயரும். இன்றைய தினத்தில் மானியத்தைக் குறைப் பதற்கு உரிய சூழல் நிலவுகிறது. அவ்விதம் மானியத்தைக் குறைத்தால் பொருள்களின் விலை கணிசமாக உயரும். சில பொருள்களின் விலை உயரவே உயராது. ஏனெனில் சர்வதேச சந்தையில் அத்தகைய பொருள்களின் விலை குறைவாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இப்போது உள்ள விலை சரிவு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த சூழலில் நாம் உரிய மாற்றங்களை செய்தோமேயானால், நமது வளர்ச்சி விகிதம் ஐரோப்பிய நாடுகளை விட அதிகமாக இருக்கும். சிறந்த துறைமுக வசதி, சிறப்பான சாலை ஆகியவற்றின் மூலம் நாம் விரைவான வளர்ச்சியை எட்ட வேண்டும் என்றார். இதை அரசு நிச்சயம் செய்யும் என்று நம்புவதாக அவர் கூறினார். இந்தியாவில் தங்கியிருந்த இரண்டு வாரங்களில், மத்திய அரசின் நடவடிக்கைகள் சில மாற்றத்துக்கான அறிகுறிகளாக தாம் உணர்ந்ததாகக் குறிப்பிட்டார்.
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு மத்திய அரசின் மிக முக்கியமான நடவடிக்கை. இப்போதைய சூழலில் சீர்திருத்தங்களை செய்தாக வேண்டும் என்றும் அவர் கூறினார். இரண்டு விஷயங்களில் இந்தியா முக்கிய கவனம் செலுத்தியாக வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், கட்டமைப்பு முதலீடு மற்றும் அதிகார வர்கத்தினரின் கெடுபிடி ஆகிய இரண்டிலும் மாற்றம் செய்தாக வேண்டும்.
சிறப்பான சாலை, துறைமுக வசதி, கிராமப்புற நீர்ப்பாசன வசதி உள்ளிட்ட கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் வளர்ச்சி சாத்தியமாகும். அதேபோல தொழில் தொடங்குவதில் உள்ள கெடுபிடிகளை தளர்த்துவதன் மூலம் இத்துறை வளரும். மொத்தத்தில் பொருளாதார வளர்ச்சி எட்டப்படும். அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்தியா தீவிரமாக செயலாற்றினால் அதன் பலன் அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் என்றார்.
இந்தியாவில் தொழில் தொடங்குவது எளிதாகியுள்ளதாக உலக வங்கி நடத்திய ஆண்டு கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். தொழில் தொடங்க ஏற்ற 189 நாடுகளில் இந்தியா 142 வது இடத்தில் உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா 100 நாடுகளுக்குள் இடம்பெறும் என்றார். திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டு நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டு மாநில முதல்வர்களும் பங்கேற் கும்படி செய்துள்ளதை அவர் பாராட்டினார்.
மோடி அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்க வையாக உள்ளன. அதன் செயல்பாடுகள், பலன்களை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார் பாசு.