Published : 11 Jan 2015 01:26 PM
Last Updated : 11 Jan 2015 01:26 PM

வணிக நூலகம்: வெற்றி மிக அருகில்!

நீங்கள் எப்போதுமே கையில் பல வேலைகளை வைத்துக்கொண்டு எதைச் செய்வது என்று தெரியாமல் திண்டாடுகின்றீர்களா? அல்லது திகைத்துப்போய் ஒன்றுமே செய்யாமல் முழித்துக்கொண்டு இருக்கின்றீர்களா? எல்லா வேலையையும் நானே செய்ய வேண்டுமே என்று அடுத்தவரிடம் வேலையை ஒப்படைக்கத் தயங்கிக் கொண்டிருக்கின்றீர்களா? மெயிலைப் பார்த்தும், டிவிட்டரைப் பார்த்துமே உங்களுடைய பொழுது முழுவதும் வீணாகிவிடுகின்றதா? நாளின் இறுதியில் மிகவும் களைத்துப்போகின்ற அளவுக்கு வேலைபார்த்தும் ஒன்றும் பிரயோஜனமாக செய்யாத நிலையில் இருக்கின்றீர்களா? உங்களுக்கு வர வேண்டிய பதவி உயர்வுகள் மற்றவர் களுக்கு போய்விடுகின்றதா அவர்கள் ரொம்பவுமே பலனுள்ள வகையில் (ப்ரொடக்டிவ்) செயல்படுவதாக நிர்வாகம் நினைப்பதால்?

பிளான் பண்ணுங்க சார்!

இவை எல்லாவற்றையும் ஒரே மூச்சாக சரி செய்ய முடியாது என்றாலும் எப்படி சிறப்பாக வேலை செய்வது, வேலை வாங்குவது, உங்கள் நேரத்தை உங்களுக்கும் நிர்வாகத்துக்கும் உதவும் வகையில் செலவிடுவது என்பதைச் சொல்லும் புத்தகம்தான் ‘ஹெச்பிஆர் கைடு டு கெட்டிங் த ரைட் வொர்க் டன்’ என்னும் சரியான வகையில் வேலையை முடிப்பது எப்படி என்பதைச் சொல்லும் ஹாவர்ட் பிசினஸ் ரிவ்யூ பிரஸ் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகம். இதைப்படித்தபின் எதை உடன்செய்ய வேண்டும் எதை தள்ளிப்போடவேண்டும் என்று எப்படி வரிசைப்படுத்திக்கொள்வது, எப்படி எந்த ஒரு காரியத்திலும் கவனமாய் இருப்பது, குறைவாய் சக்தியை செலவிட்டு அதிக பலனைப் பெறுவது, எப்படி முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் பல பழக்கவழக்கங்களை புறந்தள்ளி வெற்றிப்பாதையில் பயணிக்க ஆரம்பிப்பது, செய்யவேண்டிய வேலைகளை செய்து முடிக்க உதவுவதைப் போன்ற பட்டியலை எப்படித் தயாரிப்பது, மலைப்பாய்த் தெரியும் பெரிய வேலைகளை எப்படி சுலபமாய் மேலாண்மை செய்வதற்கு ஏற்றாற்போல் சிறுசிறு பாகங்களாகப் பிரிப்பது, ஈ-மெயில்களினால் உருவாகும் பாரத்தை எப்படிக் குறைப்பது, இழந்த உங்கள் சக்தியை எப்படி புதுப்பித்துக்கொள்வது போன்றவற்றிற்கான விடை உங்களுக்குத் தெளிவாகப் புரிந்துவிடும் என்று சொல்லலாம். பல்வேறு நிபுணர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இருந்தாலும் ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விஷயத்தில் நம்மை முன்னேற்ற உதவும் வகையில் இருக்கின்றது.

எது முதலில்?

வேலை, வேலை, வேலை, ஆணுக்கும் வேலை, பெண்ணுக்கும் வேலை என வேலைப்பளு நம்மை சுழற்றி அடிக்கின்றது. தலைக்கு மேல் வேலை, ஐநூறு ஈ-மெயில்கள் பென்டிங் என எல்லோரும் மனதில் ஒரு கனத்துடனேயே அலைகின்றோம். இதனை எப்படித் தவிர்ப்பது. இதைத் தவிர்க்க முதலில் நாம் ஒன்றை ஒத்துக்கொள்ளவேண்டும். நம்மால் ஓரளவுக்கு மட்டுமே வேலைபார்க்க முடியும். இருக்கின்ற நேரத்தில் இவ்வளவுதான் வேலை செய்ய முடியும் என்ற ஒரு எல்லை இருக்கின்றது என்பதை நாம் முதலில் புரிந்துகொண்டு செயல்பட ஆரம்பித்தாலே போதும். எல்லாம் வழிக்கு வந்துவிடும். எப்படி என்கின்றீர்களா? நேரம் குறைவு என்பதை உணர்ந்த அடுத்த நிமிடமே எது முக்கியமோ அதை மட்டும் செய்வோம் என்ற எண்ணம் மனதில் தலை தூக்க ஆரம்பிக்கும். எதுடா நம்முடைய நேரத்தை கொன்று தின்கின்றது என்று சிந்திப்போம். எங்கே நேரத்தை வீணாக செலவிடுகின்றோம் என்று சுலபத்தில் கண்டுபிடித்துவிடுவோம். எது சரியான விஷயம் என்று தெரியாமல் இருக்கின்றோமா? நம்முடைய செயல்பாட்டில் குறை ஏதும் இருக்கின்றதா? நாம் எல்லாவற்றையும் தள்ளிப்போட்டு சிக்கிக்கொள்கின்றோமா? என நம்மிடம் இருக்கும் கெட்ட குணத்தை கண்டறிந்து சரி செய்துகொள்ள முடியும். இது போன்ற நம்மிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களை ஆராய்ந்து அறிந்து மாற்றிக்கொண்டோமேயானால் நம்மால் சிறப்பாக செயல்பட முடியும்.

போராட்ட குணம் இருக்கா?

வெற்றி பெற்றவர்களுடைய பழக்கங்களை ஆராய்ந்தால் சில குறிப்பிடத்தக்க விஷயங்களைக் கண்டறியலாம். இதுதான் வேண்டும் என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரியும். சரியான நேரத்தில் சரியான வகையில் அவர்கள் செயல்பட்டுவிடுவார்கள். நினைத்ததை சென்றடைய இன்னமும் எவ்வளவு தூரம் இருக்கின்றது என்பதைத் தெளிவாக அறிந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள். அதே போல் நம்மால் எவ்வளவு முடியும் என்பதையும் அந்த அளவுக்கு முயற்சி செய்தால் அந்த தூரத்தை சென்றடைய எவ்வளவு நேரமாகும் என்பதை ஒரு ரியலிஸ்டிக் ஆப்டிமிஸ்டாக கணக்கீடு செய்ய முடிந்தவர்களாகவும் இருக்கின்றார்கள். எந்த ஒரு விஷயத்தையும் நன்றாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டும் இல்லாமல் மேம்படுத்திக் கொண்டேயிருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பவர்களாகவும், நீண்ட நாட்களுக்கான திட்டங்களைத் தீட்டி அதன் பலன்களுக்காக இடைஞ்சல்கள் பல வந்தாலும் அவற்றை தைரியத்துடன் எதிர்கொண்டு பொறுமையுடன் காத்திருக்கும் திராணி உடையவர்களாகவும் திகழ்கின்றார்கள். மனோதிடத்தை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொள்ளும் திறனுடையவர்களாகவும், எதிர்கால நன்மைக்காக செயல்படும்போது இடையே எந்த விஷயத்தையும் கண்டு மனம் மயங்காதவர்களாகவும், எதைச் செய்ய நினைத்து திட்டமிட்டு ஒரு விஷயத்தை ஆரம்பித்தார்களோ அதனை அப்படியே செய்யாமல் எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு ஏற்ப எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்வதில் கவனம் கொண்டவர்களாவும் இருக்கின்றார்கள். இந்தக் குணங்களை நீங்களும் பெற்றால் நிச்சயமாய் வெற்றியை நோக்கி பயணிக்கலாம் என்கின்றார் ஆசிரியர்.

நேரத்தைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்!

அலுவலகத்தில் பலருடன் வேலை செய்கின்றோம். நம்முடைய நேரம் சிறப்பாக உபயோகப்படுவதற்கும் வீணாகப் போவதற்கும் காரணம் நம்முடன் இருப்பவர்களேயாவார்கள். அலுவலகத்தில் யாராவது உங்களிடம் வந்து ஒரு உதவிகேட்டால் பின்வரும் மூன்று கேள்விகளை முதலில் நீங்கள் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் என்கின்றார் ஆசிரியர். முதலாவதாக, நான் இவர் கேட்கும் உதவியைச் செய்ய தகுதியான ஆள்தானா? இரண்டாவதாக, இவர் கேட்கும் நேரம் சரியானதா? இல்லை எனக்கு இந்த நேரத்தில் இதைவிட முக்கியமான வேலைகள் இருக்கின்றதா? மூன்றாவதாக இவர் கேட்கும் விஷயம் குறித்த முழுமையான விஷயங்கள் எனக்குத்தெரியுமா? என்ற மூன்று கேள்விகளையும் கேட்டு அதற்கு சாதகமான பதில்கள் வந்தால் உதவியைச் செய்யலாம். இல்லையென்றால் மன்னிக்கவும், என்னால் இதற்கு உதவ முடியாது என்று சொல்லி நேரத்தை காப்பாற்றிக் கொள்ளலாம் என்கின்றார் ஆசிரியர். அதே போல் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமான ஒன்றான முடியாது என்பதைச் சொல்ல முடியும் என்ற நிலைக்கு தயாராகிக்கொள்ளுங்கள். முடியாது என்பதைச் சொல்ல முடியா விட்டால் முன்னேற்றப்பாதையில் பயணிப்பது மிகமிகக் கடினமாகிவிடும் என்கின்றார் ஆசிரியர்.

மல்டி டாஸ்க்கிங்!

முன்னேற விரும்பினால் மிகவும் முக்கியமான ஒன்றை நீங்கள் செய்யவே கூடாது. அது என்ன தெரியுமா? மல்டி டாஸ்க்கிங் எனும் ஒரே நேரத்தில் பலவேலைகளைச் செய்யும் குணத்தை கொண்டிருப்பது என்கின்றார் ஆசிரியர். நடைமுறையில் மல்டி டாஸ்க்கிங்கை தவிர்ப்பது மிகக்கடினம் என்றாலும் இதனைத் தவிர்ப்பதை முழுமையாக கடைப்பிடிக்க ஆரம்பித்தால் கிடைக்கும் பலன்கள் மிகப்பெரியது என்கின்றார் ஆசிரியர். உதாரணத்திற்கு, ஒரு மீட்டிங்கில் இருக்கும் போது ஸ்மார்ட் போனை கையில் வைத்திருப்பதைச் சொல்லும் ஆசிரியர், போனை ஒட்டு மொத்தமாக ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டால் நிம்மதியாக மீட்டிங்கை கவனித்து சிறப்புடன் செயலாற்ற முடியும் என்கின்றார். அதே போல் ஒரே வேலையை ஒரு நேரத்தில் செய்யும் போது கடினமான வேலையைக்கூட இலகுவாக முடிக்க முடிகின்றது என்கின்றார். இன்னுமொரு முக்கியமான விஷயம், ஒரே ஒரு வேலையை ஒரு நேரத்தில் செய்யும் போது நம்முடைய மன அழுத்தம் கணிசமாகக் குறைகின்றது என்கின்றார் ஆசிரியர். எல்லாவற்றுக்கும் மேலாக மல்டி டாஸ்க்கிங்கை தவிர்ப்பதன் மூலம் நமக்கு பெரிய அளவில் நஷ்டம் ஒன் றும் வந்துவிடாது. ஆனால் மல்டி டாஸ்க் கிங்கினால் லாபம் வரப்போவ தேயில்லை என்கின்றார் ஆசிரியர்.

வேலை அதிகம், அதனால் சரியான உறக்கம் கூட கிடையாது என நாம் அனைவரும் சொல்கின்றோம். ஒரு மணிநேரம் தூக்கத்தை குறைத்தால் ஒரு மணி நேரம் ப்ரொடக்டிவ்வாக கிடைக்கும் என நினைக்கின்றோம். அது மிகவும் தவறு. சிறு அளவிலான தூக்கக்குறைவு கூட நம் உடல் நிலை, மூட், மூளையின் செயல்பாடு, செயல்திறன் போற்றவற்றை கணிசமான அளவில் பாதித்து விடுகின்றது எனச் சொல்லி சரியான உறக்கத்தின் தேவையை வலியுறுத்துகின்றார் ஆசிரியர்.

நம்முடைய திறனை எப்படி சிறப்பாக உபயோகித்தால் வாழ்வில் வேகமாக முன்னேறலாம் என்பதைச் சொல்லும் இந்தப் புத்தகம் முன்னேற நினைக்கும் அனைவருக்குமே உதவும் எனலாம்.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x