

நடப்பு நிதி ஆண்டு முடிவதற்கு இன்னும் இரண்டரை மாதங்களே உள்ள நிலையில் அரசுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
மார்ச் மாத இறுதிக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். கோல் இந்தியா நிறுவன பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் ரூ. 24 ஆயிரம் கோடியை திரட்ட அரசு உத்தேசித்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் ஜேட்லி ஒன்றுக்கு மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பங்கு விலக்கல் நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. கோல் இந்தியா நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
பங்கு விலக்கல் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் யூகத்தின் அடிப்படை யிலானவை. இருப்பினும் எந்த நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன என்ற விவரத்தை வெளியிட முடியாது என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
மார்ச் 31-ம் தேதி வரை அரசுக்கு இரண்டரை மாத அவகாசமே உள்ளது. இந்த சூழலில் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். இதற்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்றார். எந்த நிறுவனத்தின் பங்குகள் முதலில் விற்பனைக்கு வரும் என்பது எவருக்குமே தெரியாது. எனவே பத்திரிகைகளில் வெளியான செய்திகள் அவற்றின் யூகமாகும் என்று ஜேட்லி கூறினார்.